Published : 26 Mar 2016 11:58 AM
Last Updated : 26 Mar 2016 11:58 AM

பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வேம்பு

விவசாயம், காய்கறித் தோட்டம், மாடித் தோட்டம் என எதுவென்றாலும் வேம்பை அடிப்படையாகக் கொண்ட பொருட்களைப் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தலாம். வேம்பு சிறந்த இயற்கை பூச்சிக்கொல்லி, செலவும் குறைவு. இது குறித்துச் சென்னையில் உள்ள இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம் வெளியிட்டுள்ள ‘இயற்கை விவசாயத்தில் வேம்பு’ என்ற புத்தகம் தரும் யோசனைகள்:

வேம்புப் பொருட்கள் 200 வகைப் பூச்சிகளைக் கட்டுப் படுத்துவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கட்டுப்படுத்தப்படும் பூச்சிகளில் பல, பூச்சிக்கொல்லிகளுக்கு எதிர்ப்புசக்தி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பயன்பாட்டிலிருக்கும் பூச்சிக்கொல்லிகளால் இலைப் பேன்கள், இலை துளைப்பான்கள், வைரமுதுகு அந்துப்பூச்சி போன்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. பூச்சிகளின் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் வேம்புப் பொருட்கள் செயல்படுகின்றன. அவை பூச்சிகளை உடனடியாகக் கொல்லாமல், அவற்றை வேறு பல விதங்களில் செயலிழக்கச் செய்கின்றன.

வேம்புப் பொருட்கள் எவ்வாறெல்லாம் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன? பொதுவாக, பல்வேறு ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தெளித்தவுடன் பூச்சிகள் உடனடியாக இறந்துவிடுகின்றன. இதே மாதிரியான விளைவை வேம்புப் பொருட்களைப் பயன்படுத்தியவுடன் எதிர்பார்க்க முடியாது.

வளரவிடாமல் தடுப்பது

வேம்பிலுள்ள பூச்சிக்கொல்லித் தன்மை, பூச்சி வளர்வதைத் தூண்டும் ஹார்மோன்களைப் பாதிக்கிறது. முட்டையிலிருந்து வெளிவரும் பூச்சிகளின் இளம் புழுக்கள் செடியின் இலைகளைச் சாப்பிட்டு வளர்கின்றன. ஓரளவுக்கு அவை வளர்ந்த பிறகு பழைய தோலைக் களைந்துவிட்டு மீண்டும் வளர்கின்றன. பழைய தோலைக் களைவதற்குத் தோலுரித்தல் என்று பெயர். இவ்வாறு தோலுரிப்பதற்கு எக்டைசோன் என்னும் என்சைம் அல்லது ஊக்குவிப்பான் காரணமாகும்.

வேம்புப் பொருட்களில் காணப்படும் அசாடிராக்டின், புழுக்களின் உடலில் சென்று எக்டைசோனின் செயல்திறனைக் கட்டுப்படுத்தி, தோல் உரிவதைத் தடுக்கிறது. புழுக்கள் தோலுரிய முடியாமல், புழுக்களாகவே இருந்து அதே நிலையிலேயே இறந்துவிடுகின்றன. அசாடிராக்டினின் செறிவு போதாமல் இருந்தால் புழுக்கள் கூட்டுப் புழுக்களாக மாறி, பிறகு இறக்கின்றன. அந்த நிலையையும் கடக்க நேரிட்டால் பூச்சிகளாக உருமாறுகின்றன. இப்படி உருமாறிய பூச்சிகளும் உறுப்புக் குறைகளுடனும் மலட்டுத் தன்மையுடனும் காணப்படுகின்றன.

உண்ணவிடாமல் தடுப்பது

பூச்சிகளை உண்ணவிடாமல் தடுப்பது வேம்புப் பொருட்களின் மிக முக்கியமான குணம். பசியோடு இலையின் மேல் உட்காரும் பூச்சிகளின் புழுக்கள், இலையைச் சாப்பிட ஆரம்பிக்கின்றன. வேம்புப் பொருட்களில் உள்ள அசாடிராக்டின், சலானின், மெலன்டிரியால் போன்ற ரசாயனப் பொருட்கள் உணவுக் குழாயில் தசை அசைவைக் குறைக்கும் எதிரசைவை ஏற்படுத்துகின்றன. இது கிட்டத்தட்ட வாந்தியெடுப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் வேம்புப் பொருட்கள் தெளிக்கப்பட்ட இலைகளைப் பூச்சிகள் உண்பதில்லை. அதன் விழுங்கும் தன்மையும் பாதிக்கப்படுகிறது.

முட்டையிடாமல் தடுப்பது

வேம்புப் பொருட்களின் மற்றொரு சிறப்பம்சம் பெண் பூச்சிகளை முட்டையிடாமல் தடுப்பது. தானியங்களைச் சேமித்து வைக்கும்போது தானிய விதைகளை வேப்ப விதைத் தூளுடன் கலந்தோ விதைகளை வேப்ப எண்ணெய் முலாமிட்டோ வைக்கும்போது, பூச்சிகள் முட்டையிடுவது தடுக்கப்படுகிறது. விதைகளையும் தானியங்களையும் கடையிலிருந்து வாங்கும்போதே பூச்சிகளால் பழுதடைந்தவையும் அவற்றில் கலந்திருக்கலாம்.

இப்படிப்பட்ட தானியங்களை வேப்ப விதைத் தூள் அல்லது வேப்ப எண்ணெயோடு கலந்து வைக்கும்போது, அப்பூச்சிகள் தானியங்களைச் சாப்பிட முடியாமல் வேம்புப் பொருட்கள் தடுக்கின்றன. முதிர்வடைந்த பூச்சிகளால் முட்டையிட முடிவதில்லை. பழுதடைந்த விதைகளைத் தவிர மற்றவை பாதிக்கப்படுவதில்லை.

வேம்புப் பொருட்கள் மேலும் பலவிதங்களில் செயல்படுகின்றன:

1. பூச்சிகளின் மேல் காணப்படும் வெளிப்புறத் தோல் (கைடின்) உருவாவதை வேம்புப் பொருட்கள் தடுக்கின்றன.

2. பூச்சிகள் இனப்பெருக்கத்துக்காக இணைவதையும் தடுக்கின்றன.

3. பல பூச்சி இனங்களின் லார்வாக்களையும் முதிர்ச்சியடைந்த பூச்சிகளையும் விரட்டுகின்றன.

4. முதிர்ந்த பூச்சிகளில் மலட்டுத்தன்மையை உண்டாக்குகின்றன. வேம்புப் பொருட்கள் ஏற்படுத்தும் விளைவுகள் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் மாதிரி உடனடியாகத் தெரிவதில்லை. வேம்புப் பொருட்களைப் பயன்படுத்திய பிறகு விளைவுகளைக் காணச் சிறிது பொறுமை வேண்டும்.

தொடர்புக்கு: இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம்,
30, காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம்,
சென்னை - 85 - 044-24471087 / 24475862

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x