Last Updated : 22 Oct, 2016 12:10 PM

 

Published : 22 Oct 2016 12:10 PM
Last Updated : 22 Oct 2016 12:10 PM

புலிகளைக் காக்கும் பெண்

“ஒரு புலியைக் கள்ள வேட்டையாடினால், அதன் மூலம் இரண்டு அல்லது மூன்று பேருக்கு மட்டுமே லாபம் கிடைக்கும். ஆனால், அதே புலியைக் காப்பாற்றிவந்தால், சுற்றுலா மற்றும் அது சார்ந்த விஷயங்களால், ஒரு ஊருக்கே வேலைவாய்ப்பு கிடைக்கும். என்னுடைய பணியின் சாராம்சம் இதுதான்!” என்று பேசத் தொடங்குகிறார் மினி நாராயண்.

உத்தரப் பிரதேசத்துக்காரர், வசிப்பது சென்னையில். உத்தரப் பிரதேசத்தில் உள்ள துத்வா தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமாக, அந்தப் பகுதியில் கள்ள வேட்டைக்குத் துணைபோகும் கிராமத்தினரை நல்வழிப்படுத்த முடியும் என்று நினைத்துச் செயல்படுபவர். அப்பகுதியில் மனித காட்டுயிர் எதிர்கொள்ளலைத் தடுப்பதற்காக, கழிப்பறை, பள்ளிக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதரவும் முயற்சித்துவருகிறார்.

இந்தப் பணிகளுக்காக 2013-ம் ஆண்டு ‘ஸ்ட்ரைப்ஸ்' (Saviours of Tigers Range Indigenous Prairies of Eco Systems - STRIPES) எனும் அமைப்பைத் தொடங்கினார். ‘வாழிடங்களைப் பாதுகாக்காமல் அங்கு வாழும் புலிகளைக் காப்பாற்ற முடியாது' எனும் கொள்கையைக் கொண்ட இவர், அந்தத் தேசியப் பூங்காவில் புலிகளின் வாழிடமாக இருக்கும் புல்வெளி, சதுப்புநிலப் பகுதிகளைப் பாதுகாக்க முயற்சிக்கிறார். அவருடைய பணிகளைப் புரிந்துகொள்வதற்கு, துத்வா தேசியப் பூங்காவைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

அழியும் சதுப்புநில மான்கள்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கீரி பகுதியில் சுமார் 490 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்தத் தேசியப் பூங்கா. இமயமலை அடிவாரத்தில் புல்வெளிகளும் காடுகளும் கொண்ட பகுதி தராய் எனப்படுகிறது. உலகிலேயே இந்தப் பகுதியில்தான் அழியும் ஆபத்தில் உள்ள உயிரினங்கள் அதிக அளவில் இருக்கின்றன. இந்திய விடுதலைக்குப் பின் இந்தப் பகுதி ஆக்கிரமிப்பு, மலேரியா, பிளேக், பஞ்சம் எனப் பல இன்னல்களைச் சந்தித்தது. மனிதர்கள் வாழ ஏற்றதாக இல்லாமலிருந்த இந்தப் பகுதி, பல காட்டுயிர்களுக்குப் பொருத்தமான வாழிடமாக இருந்துவந்தது.

புல்வெளிகளும் சதுப்பு நிலங்களும் நிறைந்த இந்தப் பகுதியை 1960-களில் ஆக்கிரமித்த ஆக்கிரமிப்பாளர்கள் கரும்பு, நெல் போன்ற பணப் பயிர்களைப் பயிரிட்டனர். இதன் காரணமாக, அந்தப் பகுதியில் உள்ளூர் மொழியில் ‘பாரசிங்கா' என்றழைக்கப்படும் சதுப்பு நில மான் (ஸ்வாம்ப் டீர்) கடும் பாதிப்புகளைச் சந்தித்தது. அவற்றின் எண்ணிக்கை சரிந்துபோனது. ஒரு கட்டத்தில் அழிவின் விளிம்புக்குச் சென்றது. ‘இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச நிறுவனம்' (ஐ.யு.சி.என்.) இந்த உயிரினத்தை ‘அழிய வாய்ப்புள்ள இனம்' (Vulnerable) என்று வகைப்படுத்தியுள்ளது.

இந்தக் காலகட்டத்தில், அந்தப் பகுதி இன்னொரு முக்கியப் பிரச்சினையையும் சந்தித்தது. புலிகள் கள்ள வேட்டையாடப்படும் களமாக இந்தப் பகுதி மாறியது. இதற்கிடையே 1968-ம் ஆண்டில் பில்லி அர்ஜன் சிங் என்பவரின் முயற்சியால் இந்தப் பகுதி தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

யார் இந்த அர்ஜன் சிங்?

கோரக்பூரில் பிறந்த அர்ஜன் சிங், பிரிட்டிஷ் ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு, துத்வா அருகே நிலத்தை வாங்கி, ஒரு வீட்டைக் கட்டி வாழ்ந்துவந்தார். தன் பெரும் பொழுதுகளை வேட்டையாடுவதிலேயே கழித்தார். ஒரு நாள் சிறுத்தை ஒன்றை வேட்டையாடிய பிறகு, அது துடிதுடித்து இறந்ததைத் தன் கண்ணால் பார்த்த அவர், இனி வேட்டையாடுவதில்லை என்று முடிவெடுத்தார். அப்போதிலிருந்து சிறுத்தை, புலி, மான் இனங்களைப் பாதுகாக்க முடிவு செய்தார்.

அப்படித்தான் தன் வீட்டிலேயே புலிக் குட்டிகளையும் சிறுத்தைக் குட்டிகளையும் அவர் வளர்க்க ஆரம்பித்தார். அவை பெரிதானவுடன் மீண்டும் அவற்றைக் காட்டில் விட்டுவிடுவார். அடைப்பிடத்திலிருந்து காட்டுயிர்களைக் காடுகளுக்குள் விடும் முறையை, இந்தியாவில் அறிமுகம் செய்த முதல் நபர் இவர்தான். தான் வாழ்ந்து வந்த பகுதியை ‘டைகர் ஹேவன்' (புலி புகலிடம்) என்று அறிவித்து, காட்டுயிர் பாதுகாப்புப் பணிகளை அவர் மேற்கொண்டுவந்தார்.

இந்தப் பின்னணியில் 1976-ம் ஆண்டு, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து, இந்தப் பகுதியைத் தேசியப் பூங்காவாக அறிவிக்கச் செய்தார். 1987-ம் ஆண்டு இந்தப் பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு, ‘புராஜெக்ட் டைகர்' திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. துத்வா தேசியப் பூங்காவுக்கு அருகில் உள்ள கிஷன்பூர் காட்டுயிர் சரணாலயமும் கதார்னியகாட் காட்டுயிர் சரணாலயமும் ‘துத்வா புலிகள் காப்பக'த்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.

- பில்லி அர்ஜுன் சிங்

அந்த நேரம் அசாம், நேபாளத்தில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் கள்ள வேட்டை காரணமாக அதிவேகமாக அழிந்துவந்தன. அவற்றை வேறு இடத்துக்கு மாற்றி, அவற்றின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டது. இதன்படி அசாம், நேபாளத்திலிருந்து ஒன்பது காண்டாமிருகங்கள் முதன்முறையாக துத்வா தேசியப் பூங்காவுக்குக் கொண்டுவரப்பட்டன. இந்தத் திட்டத்தால் காட்டுயிர் மறுகுடியேற்றத்துக்கு (ட்ரான்ஸ்லொகேட்) தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியத் தேசியப் பூங்கா எனும் பெருமையை, துத்வா தேசியப் பூங்கா பெற்றது. ஆச்சரியப்படும் வகையில் இந்தப் பூங்காவில், காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

பூர்த்தியாகாத அடிப்படைத் தேவைகள்

“புலிகள் மனிதர்களைத் தாக்குகின்றன என்று ஊடகங்களில் வெளியான செய்திகள்தான் இந்தப் பகுதியில் பணியாற்ற எனக்கு உந்துதல் ஏற்படுத்தியது,” என்கிறார் மினி நாராயண்.

“உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில்தான் நான் பிறந்தேன். என் தாத்தா, என் தந்தை எனக் குடும்பத்தில் அனைவருமே காட்டுயிர் ஆர்வலர்கள். காட்டை ஒட்டித்தான் நாங்கள் வசித்த வீடும் இருந்தது. அதனால், இயல்பிலேயே நானும் இயற்கை மீது காதல் கொண்டவளாக வளர்ந்தேன்.

என் கணவர் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். அவருடைய பணி நிமித்தம் உலக நாடுகள் பலவற்றுக்குப் பயணம் போக வேண்டியிருந்தது. கென்யா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்த அனுபவம் எனக்கு உண்டு. சிங்கப்பூரில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குக் காடு இல்லை. ஆனால், அங்கு செயற்கை முறையில் காட்டை உருவாக்கி உயிரினங்களைப் பாதுகாத்துவருகிறார்கள்.

‘எந்த இயற்கை வளமும் இல்லாத சிங்கப்பூரிலேயே இப்படி இயற்கைப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்த முடியுமென்றால், இயற்கை வளம் கொண்ட இந்தியாவில் காட்டுயிர்களை ஏன் பாதுகாக்க முடியாது?' என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு, துத்வா தேசியப் பூங்காவில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தேன்” என்று தனது பிண்னணியை விளக்குகிறார்.

ஆரம்பத்தில், புலிகள் கள்ள வேட்டையாடப்படுவதால் ஏற்படும் சூழலியல் சீர்கேடு, மரங்கள் வெட்டுவதைத் தடுப்பது போன்றவை குறித்துக் கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மினி நாராயண் முயற்சி செய்தார். ஆனால், அவர்கள் இவரை, ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. காரணம், அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளே பூர்த்தியாகவில்லை என்பதுதான். அதனால், இயற்கைப் பாதுகாப்பு குறித்தெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. முதலில் அவர்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்குடன் 'ஸ்ட்ரைப்ஸ்' அமைப்பு 2013-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்கிறார்.

புலி மனித உண்ணியா?

உத்தரப் பிரதேச மாநிலத்திலேயே கீரி மாவட்டம்தான் மிகப் பெரிய மாவட்டம். அங்குதான் துத்வா கிராமமும் தேசியப் பூங்காவும் உள்ளன. ‘1970-களில் இந்த மாவட்டத்தில் தேசியப் பூங்காவின் இடைநிலைப் பகுதியில் (பஃபர் ஸோன்) சுமார் 21 கிராமங்கள் இருந்தன, தற்சமயம் சுமார் 80 கிராமங்கள் இருக்கின்றன. 1978-ம் ஆண்டிலிருந்து இப்போதுவரை 180 பேர் புலிகளால் உயிரிழந்திருப்பதாக', தேசிய வார இதழ் ஒன்றில் 1986-ம் ஆண்டில் செய்தி வெளியானது. 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இன்று அங்கு 1,794 கிராமங்கள் இருக்கின்றன.

‘புராஜெக்ட் டைகர்' செயல் திட்டத்தின் காரணமாக, இன்று அந்தப் பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால், மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் ஏற்படுவது இயற்கை என்பது சிலரின் வாதம். ஆனால் ‘எதிர்கொள்ளல் என்றால் என்ன?' என்பதிலேயே பல பிரச்சினைகள் இருக்கின்றன.

இது தொடர்பாக ஒரு சம்பவத்தை மினி நாராயண் சுட்டிக் காட்டுகிறார். சமீபத்தில், இந்தப் பகுதியில் நடந்த விஷயம் இது. துத்வா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் குளிப்பதற்காகக் காட்டுக்குள் இருக்கும் குளக்கரைக்குச் சென்றிருக்கிறார். சில நிமிடம் கழித்து, அவரை நோக்கி ஒரு புலி நீந்தி வந்தது. இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை. ‘தன் வழியில் ஒரு தடங்கல் இருக்கிறது' என்பதாக அந்த மனிதரை அந்தப் புலி கருதியது. அதனால், தன் முன்னங்காலால் அவரை ஒரு தட்டு தட்டியது. அப்போது அதன் நகங்கள் அந்த மனிதரின் கன்னத்திலிருந்து நெஞ்சு வரைக்கும் கீறின.

அந்த அதிர்ச்சியில், அவர் அப்படியே மயங்கிவிட்டார். சில நிமிடம் கழித்து, அவர் சுயநினைவுக்கு வந்தபோது, 40 அடி தூர இடைவெளியிலிருந்து அவரைப் பார்த்துவிட்டுப் புலி தன் வழியில் சென்றுவிட்டது. அந்த மனிதரும் வீடு திரும்பினார். “புலி நினைத்திருந்தால் அந்த மனிதரைக் கொன்று இரையாக்கியிருக்க முடியும். ஆனால் செய்யவில்லை, ஏன்? அதற்கான உணவு மனிதர் இல்லை என்பதைப் புலி அறிந்திருப்பதுதான் காரணம். இதில் எங்கிருந்து ‘எதிர்கொள்ளல்' வந்தது? ” என்று கேள்வி எழுப்புகிறார் மினி நாராயண்.

மக்களை ஈடுபடுத்துவது

“தேசியப் புலிகள் காப்பக ஆணையத்திடமிருந்து இழப்பீடு என்ற பெயரில் பணம் பெறுவதற்காகத் தன் குடும்பத்திலிருக்கும் ஒருவரைச் சில மாதங்களுக்கு வெளியூர் அனுப்பிவிட்டு, அந்த நபரைப் புலி கொன்றுவிட்டதாகக் கூறிப் பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள். அந்தச் சலசலப்புகள் அடங்கும்வரை இறந்துபோனதாகக் கருதப்பட்ட நபர், அந்தக் கிராமத்தின் பக்கம் தலைகாட்டாத சம்பவங்களும் நடைபெறவே செய்கின்றன” என்கிறார் அவர் வருத்தத்துடன்.

“இந்திய நேபாள எல்லையில் அமைந்திருக்கும் ஒரே தேசியப் பூங்கா, என்ற பெருமை துத்வா தேசியப் பூங்காவுக்கு உண்டு. ஆனால் அதே நேரம், அந்த ஒரு காரணத்தாலேயே நிறையப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. புலிகள் அவ்வப்போது இந்திய எல்லையைக் கடந்து நேபாளத்துக்குள் நுழைந்துவிடும். அப்போது அங்கிருக்கும் சிலரால் கள்ள வேட்டைக்கு ஆளாகும். என்னதான் ரேடியோ காலர், கேமரா டிராப்பிங் போன்ற உத்திகளைப் பயன்படுத்தினாலும், மக்கள் அவற்றைத் திருடிவிடுவதால், புலிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடுகிறது. எனவே, உள்ளூர் மக்களை இயற்கையைப் பாதுகாப்பில் ஈடுபடுத்தாதவரை, புலிகளை முழுமையாகப் பாதுகாப்பது என்பது சந்தேகம்தான். என்னுடைய பணி, அந்த மக்களைப் பாதுகாப்பில் ஈடுபடுத்துவதுதான். அதில் முதலாவது, அவர்களின் நம்பிக்கையைப் பெறுவது!” என்று முடிக்கிறார் மினி நாராயண்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x