Published : 24 Sep 2016 10:48 AM
Last Updated : 24 Sep 2016 10:48 AM

புறம்போக்கு என்கிற ‘பாதுகாப்பு

சென்னை போன்ற பெருநகரங்களில் பெருவெள்ளம் ஏற்படும் போதெல்லாம் பொறியியலுக்கு விடுக்கப்பட்ட சவாலாகவோ, தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பான கேள்வியாகவோ மட்டுமே விவாதிக்கப்படுகிறது. வெள்ளத்துக்கான தீர்வு, இந்த இரண்டு துறைகளில் இருந்து மட்டும்தான் கிடைக்கும் என்று கண்மூடித்தனமாக நம்புகிறோம்.

பொறியியல் அல்லாத மற்ற காரணிகளை நாம் கணக்கிலேயே எடுத்துக்கொள்வது இல்லை. உதாரணத்துக்கு, ஒரு நகர்ப்புறச் சூழலில் இயற்கை ஏற்படுத்தும் தாக்கங்களைத் தாங்கிக்கொள்ளக்கூடிய திறனை இழப்பதில், நாம் பின்பற்றும் வளர்ச்சிக் கொள்கைகளின் பங்கு என்ன? புயல், குடிநீர் பற்றாக்குறை, வெப்பத் தாக்கம், கனமழை போன்ற தீவிரத் தட்பவெப்ப நிகழ்வுகளைத் தாங்கும் திறனை இழக்காமல், ஒரு நகரம் நிலைத்த வளர்ச்சியைப் பெற முடியுமா? வெள்ள காலத்தின்போது ஒரு நகரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முன் திட்டமிடல், மழை நீரோட்டம் தொடர்பான கணக்கீடு, மழைநீர் வடிகால்களின் வடிவமைப்பு போன்றவற்றைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம்.

இவற்றைத் தாண்டி நம்முடைய பண்பாட்டுப் பின்னணியை நோக்கும்போது எதை நாம் மதிக்கிறோம், எதைப் பயனற்றதாகக் கருதுகிறோம் என்ற மதிப்பீடுகளும் வெள்ளத்தை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்றுகின்றன.

‘புறம்போக்கின்’ தோற்றம்

தமிழ் நிலப் பயன்பாடு தொடர்பான பதிவுகளில் சோழர்கள் காலத்திலிருந்தே ‘புறம்போக்கு' என்கிற சொல் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. இந்தச் சொல் கடற்கரை, நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்கள் போன்ற பங்குப் பயன்பாட்டிலுள்ள (Shared common use) இடங்களைக் குறிக்கிறது. இந்த இடங்கள் ‘போக்கு’, அதாவது வருவாய் ஆவணங்களுக்கு வெளியே (புறம்) இருப்பதால் ‘புறம்போக்கு' எனப்பட்டது. அரசனோ - அரசோ, புறம்போக்குப் பகுதிகளில் இருந்து எந்த வரியையும் எதிர்பார்க்க முடியாது.

இதன் காரணமாகவே, ஆங்கிலேயர்களின் சொத்து உருவாக்கும் முயற்சியில் புறம்போக்குப் பகுதிகள் மதிப்பற்றதாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். இன்றைக்குப் பேச்சுவழக்கில், புறம்போக்கு என்கிற வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் சேர்ந்துவிட்டன. சென்னை பாஷையில் சொல்ல வேண்டுமென்றால், புறம்போக்கு என்றால் எதற்கும் பயனற்றது. ஒன்றுக்கும் உதவாத இடங்கள் என்று நம்பப்படுபவற்றையும், அதுபோல நம்பப்படும் மனிதர்களையும் ஏசும் சொல்.

உண்மை மதிப்பு

புறம்போக்கு இல்லை என்றால், நாம் இல்லை. ஆனால், புறம்போக்கு என்ற சொல்லைக் கெட்ட வார்த்தையாக மாற்றி, புறம்போக்குப் பகுதிகளின் மதிப்பைக் குறைத்து ஏரிகள், மேய்ச்சல் நிலங்கள், கடல் - கடற்கரைகள், கழிமுகம், கழிவெளிகளில் கட்டிடங்களும் ‘வளர்ச்சி' என்ற பெயரில் பேரழிவை உருவாக்கும் திட்டங்களையும் உருவாக்குவதையே நவீன நாகரிகம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

ஆங்கிலேயர்களாவது புறம்போக்கு என்று சுட்டப்பட்ட இடங்களை மதிப்பற்றதாகத்தான் பார்த்தார்கள். தாராளமயமாக்கப்பட்ட இந்தியாவின் பார்வையிலோ புறம்போக்கு என்றால் வீண், புறம்போக்கைப் பயன்படுத்தும் சமூகங்களும் வீண், புறம்போக்கு நமக்குத் தரும் இயற்கை சேவைகளும் இதர பொருட்களும் வீண்.

ஒரு நகரத்தின் பேரழிவைத் தாங்குதிறனை வலுப்படுத்தும் முயற்சிகளில் கேட்கப்படாத கேள்விகள் பல. ‘நகர்ப்புற ஏழைகள் வீடு கட்டுவதற்கு ஏன் புறம்போக்கு இடங்களைத் தேடிப் போகிறார்கள்? ‘மதிப்பிழக்க வைக்கப்பட்ட மக்கள், ஏன் ‘மதிப்பிழக்கப்பட்ட' இடங்களைத் தேடிப் போகிறார்கள்? இந்த இடங்கள், அந்த மக்களின் உண்மையான மதிப்பு என்ன?

கரித்துக்கொட்டப்படும் புறம்போக்குதான், நிதர்சனத்தில் நம் நாட்டுப் பொருளாதாரத்தின் அஸ்திவாரத் தூண் என்றால் ஆச்சரியமாக இருக்கும். அதுவே உண்மை.

இயற்கையின் வழுவாச் சட்டம்

‘சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு' என்கிற வார்த்தையைக் கேட்டவுடன் ஆறுகள், கால்வாய் ஓரம் கட்டப்பட்ட குடிசைகள் மட்டும்தான் நம் கண் முன் தோன்றுகின்றன. நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கண்ணாடியால் இழைத்துக் கட்டப்பட்ட ஐ.டி. கட்டிடமோ, உலகத் தரமான விமான நிலையங்களோ, கால்வாயை மூடித் தூண்களில் பறந்துகொண்டிருக்கும் ரயில்களோ, ஏரிகளின் மீது கட்டப்பட்ட நீதிமன்றங்களோ, பேருந்து நிலையங்களோ, ஆட்சியர் அலுவலகங்களோ நம் கண் முன் வருவதில்லை. ‘சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு' என்னும் சொல்லே, சட்டப்படி மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளும் உண்டு என்பதை மறைமுகமாகச் சொல்கிறது.

அப்படியானால் அரசிடம் அனுமதி பெற்று ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்களால் வெள்ளம் ஏற்படாதா? நீதிமன்றம் அனுமதித்த ஒரு ஆக்கிரமிப்புக் கட்டிடத்தை, வெள்ள நீர் சுற்றியா போகிறது? மனிதர்களுடைய சட்டத்தில் முறைப்படியான அனுமதிக்கும், உரிமத்துக்கும் மதிப்பு உண்டு. ஆனால், இயற்கையின் சட்டத்திலோ சட்ட அனுமதி இருப்பது, இல்லாதது என்ற பேதம் எதுவுமில்லை. கட்டிடம் கட்டப்பட்ட இடம் மட்டுமே முக்கியம்.

பெரும் மூடநம்பிக்கை

புறம்போக்கு என்ற சொல்லுக்கு மதிப்பு குறைந்ததாலும், புறம்போக்குப் பகுதிகளை இழந்ததாலும்தான் சென்னையில் கடந்த ஆண்டு வெள்ளப் பேரழிவு ஏற்பட்டது. தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் பார்வையில் வீணாக இருக்கிற சதுப்புநிலக் கழிவெளிப் புறம்போக்கின் மேல் ஐ.டி. கட்டிடங் களைக் கட்டினால், அந்த இடம் மதிப்பையும் அழகையும் பெற்றதாக மாறிவிடுகிறது.

அடையாறு ஆற்றின் இயற்கை சேவைகள், வெள்ளத் தடுப்பு சேவைகளைவிட சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுதளத்துக்கு மதிப்பு அதிகம். கொசஸ்தலை யாற்றின் கழிமுகப் புறம்போக்கில் மண், நிலக்கரி, சாம்பலைக் கொட்டிச் சாகர்மாலா (Sagarmala) என்ற பெயரில் துறைமுகத்துக்கு ஆக்கிரமிப்பது நாட்டை முன்னேற்றும் என்று நம்பப்படுகிறது.

பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய புறம்போக்குப் பகுதிகளை இப்படிக் குப்பைத்தொட்டிகளாகவும் கட்டிடங்களை நிரப்பும் ரியல் எஸ்டேட்டாகவும் மட்டுமே பார்க்கும்போது, இயற்கை நம்மைத் தாக்கக் கூடாது என்று எந்தப் புரிதலுடன் எதிர்பார்க்கிறோம்? அது நிச்சயமாகத் தாக்கும். எதிர்காலத்திலும் தாக்கும்.

வடிகால் விழுங்கல்

வளர்ச்சி என்ற பெயரில் நம் நகரத்தின் நீரியல் கட்டமைப்பைத் திட்டமிட்டுக் கலைத்துப் போட்டிருக்கிறோம், மேலும் மேலும் கலைத்துப்போட்டுவருகிறோம். சென்னை மாநகரின் 2026 வளர்ச்சித் திட்டத்தில் குடியிருப்புப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியின் பரப்பளவு, இப்போது உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகம். தொழிற்துறை பயன்பாட்டுக்கான நிலம் 6,563 ஹெக்டேரிலிருந்து 10,690 ஹெக்டேராக அதிகரிக்க இருக்கிறது. அதே நேரத்தில், விவசாயப் பயன்பாட்டுக்கான நிலமோ 42 சதவீதம் குறையும். காடுகள், மலைகள், நீர்நிலைப் பகுதிகளை 56,000 ஹெக்டேரிலிருந்து பாதியாகக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

திறந்த வெளிகளின் பரப்பளவைக் குறைத்து, கட்டுமானப் பகுதிகளின் பரப்பளவை அதிகரித்தால் வானிலிருந்து விழும் மழைநீர் தரையிருக்கும் பகுதிகளில் அதிகரிக்கத்தானே செய்யும். அதை நீர்நிலைகளுக்கோ, கடலுக்கோ கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கான வடிகால்களின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும். நேர்முரணாக, நகரத்தின் பெரும்பங்கு விரிவாக்கம் இயற்கை வடிகால்களை விழுங்கியே நடக்கிறது.

திட்டமிட்ட அழிவு

2026 வளர்ச்சித் திட்டத்தில், வட சென்னையின் எண்ணூர் பகுதியில் 1,000 ஹெக்டேர் பரப்பளவு ‘சிறப்பு மற்றும் ஆபத்தான' தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் 80 சதவீதம் சதுப்பு நிலங்கள் - உப்பளங்கள், மீன் குளங்கள், அலையாத்திக் காடுகள், ஆறு, ஆற்றோரப் பகுதிகள். எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் எண்ணூர் கழிமுகப் புறம்போக்கில் 1,000 ஏக்கர் நீர்நிலையை நிலமாக மாற்றப் போவதாக வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது.

இதைத் தடுப்பதற்குத் தேவையான முதுகெலும்பைக் கொண்டிராத தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், மாநிலக் கடற்கரை மண்டல ஒழுங்காற்றுக் குழுவும் அனுமதியை மறுக்கும் என்று சொல்வதற்கில்லை. சட்ட அனுமதி கிடைத்து எண்ணூர் துறைமுக விரிவாக்கத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், வடசென்னை மக்களின் நெருக்கடி மிகுந்த குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளத்தின் தாக்கம் தீவிரமடையும். ஒரு முறை பாதிப்பு ஆரம்பித்துவிட்டால், பிறகு அதன் தொடர் பின்விளைவுகளைப் பொறியியல் தலையீட்டால் தவிர்க்கவோ, கையாளவோ முடியாது.

இந்த முறையற்ற பண்பாடு மாற்றப்பட்டு, எப்பொழுது புறம்போக்குப் பகுதிகளுக்கு உரிய மரியாதையை நாம் கொடுக்கிறோமோ, அப்போதுதான் வெள்ளப் பிரச்சினையோ, குடிநீர்ப் பற்றாக்குறையோ, புயல் பாதிப்போ, வெப்பத் தாக்கமோ மட்டுப்படுத்தப்படும். இயற்கையின் வடிகாலாக இருக்கும் ஆறு, கால்வாய்களை மூடி வணிகக் கட்டுமானங்களை உருவாக்கி, அவற்றின் பின்விளைவுகளிலிருந்து பொறியியலும் தொழில்நுட்பமும் காப்பாற்றிவிடும் என நம்புவது மூடத்தனம்.

புறம்போக்கைப் பாதுகாத்தால் மட்டுமே, புறம்போக்கு நம்மைப் பாதுகாக்கும்.

நித்தியானந்த் ஜெயராமன்

- கட்டுரையாளர், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: nity682@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x