Published : 16 May 2015 12:09 PM
Last Updated : 16 May 2015 12:09 PM

பிள்ளைகளை இப்படி வெட்டலாமா?

குழந்தைகள் உடல்நலம் குறித்த விஷயங் களுக்குச் சிறந்த மருத்துவம் தரப்படும் மருத்துவமனைகளில் தேசிய அளவில் பெயர் பெற்ற சி.எம்.சி., மருத்துவமனை வேலூரில் இருக்கிறது.

ஆனால், அதே வேலூர் மாவட்டத்தில்தான் பிள்ளைகள் வெட்டப்படுகின்றன தெரியுமா?

‘வற்றாத ஜீவ நதி பாலாறு' என்பது சரித்திரம். ஆனால், அது ‘பாழாறு' என்பது நிகழ்காலத் தரித்திரம். ஆற்றங்கரைகளில்தான் மனித நாகரிகம் தழைத்ததாக மானுடவியல் கூறுகிறது. அப்படிப்பட்ட ஆற்றங்கரைகளில் இருந்த தங்கள் வசிப்பிடங்களில் இருந்து மனிதர்கள் விலகி ஓடுகின்றனர். அதுதான் இன்றைய பாலாறு!

கண்டுகொள்ளப்படாத களஞ்சியம்

‘தமிழகத்தின் நெற்களஞ்சியம்' என்ற பெயர் தஞ்சைக்கு உண்டு. நம் மாநிலத்தில் ‘முதன்மை'க்குத்தான் எப்போதும் மரியாதை. மற்றவையெல்லாம் இரண்டாம்பட்சம்தான், அதனால் பாரபட்சமும் சேர்ந்துவிடுகிறது. இதன் காரணமாகவே தஞ்சைக்கு அடுத்தபடியாக நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கி இரண்டாம் இடத்தில் இருந்த வேலூர் மாவட்டம் கண்டுகொள்ளப்படாமல் போனது.

"தஞ்சையில் நெல் விளைச்சல் அமோகமாக இருந்ததற்குக் காரணம், அங்கே வயல்களுக்கு நேரடி காவிரி ஆற்றுப் பாசனம் இருந்தது. ஆனால், வேலூரில் அப்படியல்ல. பாலாற்று வளத்தால் ஏற்பட்ட துணைப் பாசனத்தின் மூலம் நெல் விளைந்தது" என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வேலூர் மாவட்டச் செயலாளர் இரா. முல்லை.

சீர்கெட்ட நீர்

நிலத்தடி நீர், ஊற்றுக் கால்வாய், கிணற்று நீர் எனப் பாலாற்றின் வளத்தால் காலம்காலமாக உருவான பாசன முறை, தோல் பதனிடும் தொழிற்சாலைகள் காரணமாக, ஒரு சில பத்தாண்டுகளில் தூர்ந்து போனது. அதனால் நெல் பயிரிடுவதில் இருந்து விலகி, தென்னை வளர்ப்புக்கு மாறினார்கள் விவசாயிகள்.

இதுகுறித்து ‘பாலாறு பாதுகாப்பு மக்கள் இயக்கத்தின்' தலைவர் ஜமுனா தியாகராஜன் நம்மிடம் பேசியபோது, "அடிப்படையில் பாலாறு என்பது நிலத்தடியில் ஓடும் ஆறு என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளது. முன்பெல்லாம் 50 அல்லது 60 அடியில் நீர் கிடைத்தது. அதனால் தென்னை விவசாயிகள் பயனடைந்தனர். ஆனால், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், பாலாற்றில் தொடர்ந்து வெளியேற்றிய கழிவுநீரால் நிலத்தடி நீர் பெரிதும் சீர்கெட்டுவிட்டது. தவிர, இன்றைக்கு ஆயிரம் அடி தோண்டினாலும்கூட ஒரு சொட்டு நீர் கிடைப்பதில்லை என்பதே நிதர்சன நிலை" என்கிறார்.

30 ஆண்டு சீரழிவு

1997-ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் வாணியம்பாடி முதல் பாலாறு அணைக்கட்டுவரையிலான சுமார் 60 கிலோமீட்டர் பகுதியில் பாலாற்றில் இருந்து நீர் எடுத்துப் பரிசோதித்தது.

அந்தப் பரிசோதனை முடிவுகளை 1968-ம் ஆண்டு சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மேற்கொண்ட பரிசோதனை முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது நீரில் கரையக் கூடிய மொத்தத் திடப்பொருட்களின் அளவு (Total Dissolved Solids - TDS) வாணியம்பாடியில் 79 சதவீதமாகவும், அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் வந்தடையும் இடங்களில் அந்தத் திடப்பொருட்களின் அளவு 142 சதவீதமாகவும் அதிகரித்திருப்பது தெரியவந்தது.

இதிலிருந்து நீர் எவ்வளவு வேகமாக, எவ்வளவு மோசமாக மாசடைந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. பாலாற்றில் கலக்கும் கழிவுநீரை உடனடியாக நிறுத்தினாலும்கூட, ஏற்கெனவே மாசடைந்துபோன அந்த ஆற்று நீரில் இருந்து ரசாயனப் பொருட்களைப் பிரித்து அகற்ற நீண்ட காலமாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில்தான் தென்னை விவசாயிகளின் துயரத்தை அணுக வேண்டும்.

அரசின் திட்டம்

தென்னங்கன்றை இன்னமும் கிராமப்புறங்களில் தென்னம்பிள்ளை என்றே அழைக்கிறார்கள். ‘தென்னையப் பெத்தா இளநீரு... பிள்ளையப் பெத்தா கண்ணீரு' என்ற சொலவடையும் அப்படி உருவானதுதான். கடந்த

2004-ம் ஆண்டு ‘உலகத் தென்னை தின'த்தின்போது அன்றைய முதல்வர் ஜெயலலிதா, கிராமப்புறங்களில் பிறக்கும் பெண் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் 2 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். கிராமப் பகுதிகளில் தென்னை சாகுபடியை அதிகரிக்கவும் இந்தத் திட்டம் உதவும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

அந்தத் திட்டத்தின் கீழ் தென்னம்பிள்ளைகளை வாங்கி வாணியம்பாடி பகுதியில் வளர்த்துவந்த விவசாயிகள் சிலர்தான், தற்போது அந்த ‘வளர்ந்த பிள்ளை'களை வெட்டவும் செய்கிறார்கள். காரணம், நீரும் நிலமும் தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்டதால், தென்னை மரங்கள் உயிரற்றுப் போய்விட்டதால்தான். வேலூர் மாவட்டம் முழுக்கவே இந்தப் பிரச்சினை உள்ளது என்றாலும், வாணியம்பாடியில் பாதிப்பின் சதவீதம் அதிகம்.

சவலைப் பிள்ளைகள்

"பட்டை உறிஞ்சு, ஓலை சரிஞ்சு, காய் சிறுத்து, நீர் கரிச்சு, மொட்டைத் தலையா நிக்குற அந்த மரங்களை எங்களால பார்க்க முடியலை. அதனாலதான் வெட்டுறோம். இதுங்களை வெட்டும்போது, எங்க பிள்ளைகளை வெட்டுறதாவே நினைச்சுக்கிறோம். காப்பாத்தத்தான் வக்கில்லையே" என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஒரு விவசாயி. இங்குப் பாழ்பட்டுக் கிடக்கும் நிலத்தையும் தென்னையையும் இயற்கை விவசாயம் மூலமாகக்கூட எளிதாகச் சரிசெய்துவிட முடியாது என்பதுதான் நடைமுறை எதார்த்தம்.

நெல் பயிரிட முடியாததால், தென்னை சாகுபடியில் ஈடுபட்டார்கள் விவசாயிகள். இப்போது தென்னையும் சாகுபடி செய்ய முடியாததால், நிலங்களைத் தரிசாக விட்டுவிடுகிறார்கள். அல்லது நிலங்களை விற்கிறார்கள். இப்பகுதியில் சுமார் 12 லட்சம் தென்னை விவசாயிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்தச் சவலைப் 'பிள்ளைகளை', இனி யார் ஏறெடுத்துப் பார்க்கப் போகிறார்கள்?

அந்த 606 ஊற்றுக் கால்வாய்களின் கதி?

வேலூர் மாவட்டத்தின் பெருமை பாலாறு என்றால், அந்தப் பாலாற்றின் பெருமை அதிலிருந்து உருவாகி வளம் சேர்த்த ஆற்று ஊற்றுக் கால்வாய்கள். சில பத்தாண்டுகளுக்கு முன்னால் வேலூர் மாவட்டத்தில் பாலாற்று படுகையில் 606 ஊற்றுக் கால்வாய்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜனகராஜன்.

பாலாறு குறித்துச் சுமார் 30 ஆண்டு ஆய்வு செய்தவர் ஜனகராஜன். பாலாற்றுப் படுகையில் உள்ள ஆற்று ஊற்றுக் கால்வாய்களின் முக்கியத்துவம் குறித்து முதலில் பேசியவரும் அவரே. இந்த ஊற்றுக் கால்வாய்கள் குறித்த தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்:

"பாலாற்றின் இரண்டு பக்கமும் இருக்கும் கிராமங்களில் அந்தக் காலத்தில் ஊற்றுக் கால்வாய்கள் இருந்தன. இவற்றை மக்கள் பொதுவாக ‘கசக் கால்வாய்' என்று அழைத்தனர். ஆற்றுக்கு அருகில் 5 முதல் 10 அடிக்கு ஊற்று தோண்டுவார்கள். அநேகமாக ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் இது நடைபெறும். அந்த ஊற்றில் இருந்து 6 முதல் 8 மாதங்கள்வரை நீர் கிடைத்துக்கொண்டிருந்தது.

அவ்வாறு வெட்டப்பட்ட ஊற்றில் நிரம்பும் நீர், சுமார் 5 கிலோமீட்டருக்குப் பயணிக்கும். அதனால்தான் ஆற்று ஊற்றுக் கால்வாய் என்று பெயர் வந்தது. அப்படிப் பயணிக்கும்போது, சுமார் 100 ஏக்கருக்கு நேரடியான ஊற்றுக் கால்வாய்ப் பாசனம் கிடைத்தது. விவசாயத்துக்கு மட்டுமல்லாமல், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் பயன்பட்டது.

அந்த ஊற்றுக் கால்வாய்களில் இன்றைக்குக் கழிவு நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. பல கால்வாய்கள் காணாமலேயே போய்விட்டன" என்கிறார்.



(கட்டுரையாளர், தொழிற்சாலை மாசுபாடு குறித்து ஆய்வு செய்வதற்காக டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் 19-வது ஊடக நல்கை (Centre for Science & Environment, CSE - 19th Media Fellowship) பெற்றவர்.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x