Last Updated : 05 Aug, 2014 12:00 AM

 

Published : 05 Aug 2014 12:00 AM
Last Updated : 05 Aug 2014 12:00 AM

பஷீரின் குடுமிக் கழுகு

வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் போய்க் கொண்டிருந்தது வண்டி. முன் இருக்கையில் இருந்தபடி சாலையோரக் காட்டுப் பகுதியை வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன்.

சாலையைவிட்டுச் சற்று தள்ளி மலைச்சரிவில், இலைகளில்லாத ஒரு மொட்டை மரம் நின்று கொண்டிருந்தது. அதைக் கடந்து செல்லும்போது மரத்தின் மத்தியிலிருந்த பிளவுபட்ட கிளையில், ஏதோ அசைவது கண்ணில் பட்டது. உடனே வண்டியை நிறுத்தி, பின்னால் எடுக்கச் சொன்னேன். அருகில் சென்றதும் தெரிந்தது, அது ஒரு குடுமிக் கழுகின் கூடு.

சிறந்த இடம்

என் கண்ணுக்கு நேர்மட்டத்தில் சாலையைவிட்டுச் சற்றுத் தொலைவில் அமைந்திருந்தது அந்தக் கூடு. அந்தக் கழுகு, கூடு கட்ட மிக அருமையான இடத்தையும், மரத்தையும் தேர்ந்தெடுத்திருந்தது. நெடிதோங்கி வளர்ந்திருந்த மரத் தண்டின் மத்தியில் இரு பெரும் கிளைகள் பிளவுபட்டிருந்த இடத்தில் மரச் சுள்ளிகளால் தட்டு போன்ற அந்தப் பெரிய கூடு அமைந்திருந்தது. அதில் அமர்ந்திருந்தது ஒரு குடுமிக் கழுகு.

அவ்வப்போது எழுந்து தனது கூரிய அலகால் சுள்ளிகளை நகர்த்தி, சரிசெய்து கொண்டிருந்தது. பின்பு உடலைப் பக்கவாட்டில் அசைத்து அமர்ந்தது. நிச்சயமாக முட்டையிட்டிருக்க வேண்டும். சிறிது நேரம் கவனித்த பின், அந்த மரத்தின் இடப்புற மேல் கிளையில் இன்னுமொரு குடுமிக் கழுகு அமர்ந்திருந்ததைக் கண்டேன். அது ஆண் பறவையாகத்தான் இருக்க வேண்டும். ஆணும், பெட்டையும் சேர்ந்து கூடு கட்டினாலும், அடைகாப்பது பெட்டை மட்டுமே.

பெயர் காரணம்

நான் அந்தக் கழுகைப் பார்த்துக் கொண்டிருந்ததையும், கேமராவில் படமெடுப்பதையும் பார்த்த காரோட்டி பஷீர், மெல்ல அருகில் வந்து அங்கே என்ன பாக்குறீங்க என்று கேட்டார். இருநோக்கியை (Binocular) கொடுத்துக் கழுகு இருக்கும் திசையில் பார்க்கச் சொன்னேன். "கிட்டக்க தெரியுது சார்! அதோட மூக்கு (அலகு) கூர்மையா இருக்கு சார்" என்று ஆச்சரியத்துடன் சொன்னார். பறவையின் பெயரைக் கேட்டார். காட்டுக் குடுமிக் கழுகு என்றேன்.

மரக்கிளையில் அமர்ந்திருந்த ஆண் பறவையையும் காட்டி, அதைப் பார்க்கச் சொன்னேன். அதன் உச்சந்தலையிலிருந்து பின்னால் 3-4 சிறகுகள் தனியாகச் சிலுப்பிக் கொண்டிருந்ததைப் பார்த்து, இதனால்தான் பேரு குடுமிக் கழுகா என்று கேட்டார். ஆமோதித்தேன். நாம் பார்ப்பது காட்டுப் பகுதியில் மட்டுமே வாழும் காட்டுக் குடுமிக் கழுகு (Legge's hawk eagle) என்றேன். ரயிலுக்கு நேரமானதால், கொஞ்ச நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டுவிட்டோம்.

பிறந்தது குஞ்சு

அடிக்கடி இல்லை என்றாலும் இரு மாதங்களுக்கு ஒரு முறையாவது, நான் வசிக்கும் வால்பாறை மலைப் பகுதிக்கு வாடகைக் காரில் பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். வழக்கமாக நான் அழைக்கும் காரோட்டி ஒரு முறை வராததால், பஷீரை அனுப்பி வைத்தார்.

அதிலிருந்துதான் அவரைத் தெரியும். பஷீர் ஒரு பொறுப்பான காரோட்டி. எப்போதும் நிதானமாக வண்டியை ஓட்டி செல்வார். வளைவுகளில் முந்துவதில்லை, மேலேறிவரும் வாகனத்துக்கு ஒதுங்கி வழிகொடுப்பது - என மலைப்பாதையில் வண்டி ஓட்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய, எல்லா வழிமுறைகளையும் பின்பற்றுபவர்.

அவருடைய வண்டியில் போவது, இது இரண்டாவது முறை. அதிகம் பேசாத அவர், இந்தக் குடுமிக் கழுகைப் பார்த்தது முதல், பறவைகளைப் பற்றியும் காட்டுயிர்களைப் பற்றியும் வழியெங்கிலும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே வந்தார். நானும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டே வந்தேன்.

இது நடந்து ஒரு மாதம் கழித்து (ஏப்ரலில்), பஷீரிடமிருந்து எனக்கு ஒரு நாள் போன் வந்தது. "சார்... முட்டை பொரிஞ்சி, குஞ்சு வெளியில வந்துடுச்சின்னு நெனக்கிறேன் சார்" என ஆர்வம் மேலோங்கக் கத்தி சொன்னார்.

என்னைவிட அதிகமாகப் பயணம் செய்பவர் அவர். அவ்வழியே போய்வரும் போதெல்லாம் அந்தக் கூட்டைக் கண்காணித்து வந்திருக்கிறார். எப்படித் தெரியும் எனக் கேட்டேன். வண்டியை நிறுத்தி சற்று நேரம் கூட்டைப் பார்த்தபோது, ஏதோ சிறியதாக அசைந்தது என்றார்.

கீ...கீ...கீ...

அது நடந்து சில நாட்களில் பஷீரின் வண்டியில் பயணம் செய்தேன். அப்போது அந்தக் கூட்டைப் பார்த்தபோது, பஞ்சு போன்ற தூவிகளைக் கொண்ட சிறிய கழுகுக் குஞ்சு அசைவது தெரிந்தது. அதைச் சுற்றிப் பச்சை இலைகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.

பச்சிளம் கழுகுக் குஞ்சைக் கூட்டின் காய்ந்த சுள்ளிகள் குத்தாமல் இருக்கவே, பச்சை இலைகளால் ஆன மெத்தை போன்ற இந்த ஏற்பாடு. இருநோக்கி மூலம் கழுகுக் குஞ்சை ஆர்வத்துடன் பார்த்தார் பஷீர்.

நான்கு மாதம் கழித்து (ஆகஸ்ட்) மீண்டும் பஷீருடன், அந்த வழியே பயணம் மேற் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நான் சொல்லாமலேயே கூடு இருக்குமிடத்துக்கு சற்றுத் தள்ளி, வண்டியை நிறுத்தினார்.

என்னிடமிருந்த இருநோக்கியை வாங்கி, கூட்டைப் பார்க்க ஆரம்பித்தார். அங்கு கழுகு இல்லாததால், அருகிலிருந்த கிளைகளை நோட்டமிட்ட அவரது முகம் மலர்ந்தது. "சார் கழுகுக் குஞ்சு, வளர்ந்து பெரிசாயிடுச்சி" என்றார்.

அம்மரத்தின் கிளையில் குடுமிக் கழுகின் இளம் பழுப்பு நிறக் குஞ்சு அமர்ந்திருந்தது. சற்று நேரத்தில் கழுகுகளுக்கே உரிய "கீ..கீ..கீ..." என்ற ஒலியுடன் உரக்கக் குரலெழுப்ப ஆரம்பித்தது. "அதோட அம்மாவ கூப்பிடுதா சார்?" என்று கேட்டார். சிறு குழந்தை போன்ற அவரது ஆர்வத்தைக் கண்டு "இருக்கலாம்" என்றேன் புன்னகையுடன்.

பழைய கூடு

இந்த ஆண்டு வெளியூருக்கு அதிகம் பயணிக்கவில்லை. அதனால் பஷீரைச் சந்தித்தும் பல நாட்கள் ஆகின்றன. இப்போதெல்லாம் அவரிடமிருந்து போனும் வருவதில்லை. எனக்கும் அவரைத் தொடர்புகொள்ள நேரம் கிடைக்கவில்லை. அவரும் என்னைப் போல வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கக்கூடும்.

கழுகுகள் பல வேளைகளில் தான் கட்டிய கூட்டை, மறுபடியும் பயன்படுத்தும் குணமுடையவை. ஆகவே, ஒரு வேளை மீண்டும் அந்தக் கூட்டில் அவரது குடுமிக் கழுகைக் கண்டால், நிச்சயமாக என்னைப் போனில் அழைத்துப் பேசுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கட்டுரையாளர்,

காட்டுயிர் ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: jegan@ncf-india.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x