Last Updated : 05 Dec, 2015 06:17 PM

 

Published : 05 Dec 2015 06:17 PM
Last Updated : 05 Dec 2015 06:17 PM

பருவநிலை மாற்றம் சிறப்புக் கட்டுரை: புதிய பாதை அமைக்குமா பாரிஸ்?

புவி அளவுக்கு மீறி வெப்பமடைந்து வருவதன் விளைவாக உலகைப் புரட்டிப்போடும் பருவநிலை மாற்றம் உருவாவதற்கான அடிப்படைக் காரணம் என்ன என்ற கேள்வி மிக முக்கியமானது. அறிவியல்பூர்வமாக பார்த்தால், புவி வெப்பமடையக் காரணமாக இருக்கும் பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பதற்கு புதைபடிவ எரிபொருளை அடிப்படையாகக்கொண்டு இன்றைய நாகரிகத்தை கட்டியெழுப்பியது, காடுகளை அழிப்பது, நிலப் பயன்பாடுகளில் மாற்றங்களைக்கொண்டுவந்ததும்தான் காரணம்.

ஆழமாக ஆராய்ந்தால், இது வெறும் பசுங்குடில் வாயுக்கள் பிரச்சினையோ அல்லது புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்தியது மட்டுமே அல்ல. மாறாக ‘வளர்ச்சி - மேம்பாடு’ என்ற கோட்பாட்டை மையமாகக்கொண்டு எழுப்பப்பட்ட பொருளாதாரப் போக்குகளும், தத்துவங்களும், செயல்பாடுகளும்தான் முக்கிய காரணங்களாக அமைகின்றன.

புதைபடிவ எரிபொருட்களை அளவோடு பயன்படுத்தியிருந்தால் உலகுக்கு தற்போது அடைந்துள்ள மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது. உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், லாபத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு அளவு மீறிய பேராசையோடு செயல்பட்ட பொருளாதாரம், அரசியல் போக்குகளே இதற்குக் காரணம்.

அந்தப் போக்கு பல படிகளைக் கடந்து, இன்றைக்கு உலகமயமாதலில் வந்து நிற்கிறது. இந்த நாசகரமான பொருளாதார போக்கு, உலகையே அழிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

ஏன் இந்த அவல நிலை?

இந்தக் காரணங்களுக்கும் மேலாக ஒரு முக்கியக் காரணம் உண்டு. அது பொருளாதாரத்துக்கும் ஆன்மிகத்துக்கும் உள்ள அடிப்படையான உறவு. அன்பு, பகிர்தல், இரக்கம், எளிமை, கரிசனை, அக்கறை போன்ற ஆன்மிக சமுத்துவப் பண்புகளும், நீதி, நியாயம், உரிமைகள் போன்றவைகள் அடங்கிய அறநெறிகளுமே அவை.

மனித வாழ்வின் அடைப்படை ஆன்மிக நெறிகளுக்கு அன்பே பிரதானமானது. சமுதாய அமைப்புகள் ஊடே அன்பு பரிணமிக்கும்போதுதான் மனித வாழ்வு வளமையும் செழுமையும் கொண்டதாக உருவெடுக்கும்.

நவீன பொருளாதாரத் தந்தை என்று கருதப்படும் ஆடம் ஸ்மித்தின் காலத்தில்தான் ‘பொருளாதாரம் என்பது பொருளாதாரத்துக்கே’ என்ற தன்மை உருவானது. பொருளாதாரத்துக்கும், அறநெறிகளுக்கும் உள்ள தொடர்பு அறவே துண்டிக்கப்பட்டது. இந்தப் போக்கு உலக வரலாற்றில் கடுமையான பாதிப்புகளை உருவாக்கி உலகை சீரழித்துக் கொண்டே இருக்கிறது.

போட்டி, சுரண்டல், பேராசை, ஆதிக்க வெறி, செல்வக் குவிப்பு போன்ற எதிர்மறை சக்திகளுடன் இயங்கும் நவீன பொருளாதாரம், எப்படி உலகில் அன்பு, நிரந்தர சமாதானம், அகிம்சையைக் கொண்டுவர முடியும்? இன்றைய பொருளாதாரப் போக்கு வன்முறை யானது.

அது வன்முறையை மேலும் மேலும் பெருக்கக்கூடியது. இன்றைய இயற்கை நேயமற்ற, மனித நேயமற்ற போக்குகள் இந்த வன்முறை பொருளாதாரத்தின் வெளிப்பாடுகளே. உலகம் அழிவு நோக்கி நகர்வதற்கு இதுவே அடிப்படைக் காரணம்.

சர்வதேச சமூக ஈடுபாடு

நவீன வளர்ச்சிப் போக்கு குறித்து 1970-களிலிருந்தே சர்வதேச அளவில் கேள்விகள் எழுந்தன. உலகம் கடைபிடிக்கும் வளர்ச்சிப் போக்கு நிலைத்ததும், நீடித்ததும் தானா அல்லது அப்போக்கால் வருங்கால சந்ததிகள் பாதிக்கப்படுமா என்ற கேள்விகளும் எழுந்தன. அக்காலகட்டத்தில் சர்வதேச அளவில் நடைபெற்ற ஸ்டாக்ஹோம், ஜோகனஸ்பார்க் மாநாடுகளில் இக்கேள்விகள் விவாதப் பொருட்களாக அமைந்தன.

1980-களில் புவிவெப்பமடைதலும், அதனால் பருவகாலநிலையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்களையும் பற்றி உலகம் ஓரளவு அறியத் தொடங்கியது. ஐ.பி.சி.சியின் முதல் அறிக்கையைத் தொடர்ந்து 1992-ல் பிரேசிலிலுள்ள ரியோ டி ஜெனிரோ புவி மாநாடு (Earth Summit) நடைபெற்றது. இம்மாநாட்டில் புவி வெப்பமடைதலும், காலநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும் உறுதி செய்யப்பட்டன.

உலக அளவில் பருவநிலை மாற்றப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள ஐ.பி.சி.சி. என்ற அறிவியலாளர்கள் அமைப்பும், கோட்பாட்டு அளவில் அரசியல் முடிவுகள் எடுக்க யு.என்.எஃப்.சி.சி.சி. என்ற அமைப்பும் முடிவெடுத்துள்ளன. ஐ.பி.சி.சி. தன்னுடைய 5-வது மற்றும் சமீபத்திய மதிப்பீட்டு அறிக்கையில் எப்படிப்பட்ட பேரழிவு நம்மைத் தாக்கப் போகிறது என்பதைக் குறிப்பிட்டுள்ளது. பேரழிவிலிருந்து உலகம் தப்புவதற்கான வழிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

யு.என்.எஃப்.சி.சி.சி. அமைப்பு இதுவரை 20 முறை கூடி மாநாடுகளை நடத்தியுள்ளது. ரியோவிலிருந்து லிமா மாநாடுவரை இந்த அமைப்பின் சாதனைகள் என்ன என்ற கேள்வி எழுந்தால், கொள்கை ரீதியில் பல சாதனைகளைக் கூறலாம்.

ஆனால் அடிப்படைக் கேள்வி அதன் அடிப்படையில் பசுங்குடில் வாயு எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது? உலகம் பேரழிவிலிருந்து பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறதா என்று கேட்டால், தெளிவான விடையை கூறும் நிலை இல்லை.

மாநாடுகள் என்ன செய்தன?

தற்போது பாரிஸில் நடைபெற்றுவரும் மாநாட்டைப் போன்ற உலக மாநாடுகள், உலகை ஒட்டுமொத்த அழிவிலிருந்தும் பேரழிவிலிருந்தும் காப்பாற்றும் என்ற நம்பிக்கை பெரும்பாலோரிடையே குறைந்துகொண்டே வருகிறது. மாநாடுகள் வெற்றியடையாததற்கு பல காரணங்கள் உண்டு.

அதில் முக்கியமானது இன்றைய பொருளாதாரப் போக்குக்குள்ளேயே, சிற்சில மாற்றங்களோடு தீர்வு காண முற்படுவது, இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் பன்னாட்டு பெருநிறுவனங்களின் மறைமுகமான, அதேநேரத்தில் பலமான அழுத்தங்கள் காலநிலை அரசியலுக்குள் ஊடுருவியுள்ளதும்தான்.

அத்துடன் ஒவ்வொரு நாடும் தங்களுடைய சுயநலப் பார்வையோடு மாநாட்டில் பங்கெடுப்பது, விளிம்புநிலை நாடுகளின் குரல் எடுபடாமல் போவது போன்றவற்றை சொல்லலாம்.

இந்த முயற்சிகளின் விளைவால் நம்முடைய பூமி ஒருவேளை ஒட்டுமொத்த அழிவிலிருந்து தப்பினாலும்கூட, எதிர்காலத்தில் தொடந்து பல நூற்றாண்டுகளுக்கு பேரழிவுகளில் சிக்கித் தவிக்கும். மனித சமூகமும் மற்ற உயிரினங்களும் தொடந்து துயரத்தையே அனுபவிக்கும்.

ஏனென்றால் நாம் ஏற்கனவே வெளியிட்ட, தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிற கார்பன்-டை-ஆக்சைடின் ஆயுள் பல நூற்றாண்டுகளுக்கு நீடிப்பதே இதற்கு அடிப்படைக் காரணம்.

இந்த கட்டத்தில் வேறொரு சிந்தனைப் போக்கையும் மனதில் கொள்ள வேண்டும். தொழிற்புரட்சிக்குப் பின் ஏற்பட்ட இயந்திர மயமாக்கப்பட்ட நாகரிகம் சிதைந்துவிடும் (The decline of industrial civilization) என்று சில விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அப்படி நடக்காது என்று இன்றைக்கு மறுக்கும் துணிச்சல் யாருக்கும் இல்லை.

பருவநிலை மாற்றம் ஏற்படக் காரணமாக இருக்கும் பசுங்குடில் வாயுக்களை குறைப்பதற்கு வன்முறையற்ற, இயற்கைநேய, மனிதநேய சிந்தனைகளும், செயல்பாடுகளும், மனமாற்றங்களும் தேவைப்படுகின்றன.

இதைப் பற்றிய சிந்தனைகளும் விவாதங்களும் மக்களிடையே பரவலாக்கப்பட்டு, வளர்க்கப்பட வேண்டும். பூவுலகை பாதுகாக்க வேண்டிய முயற்சியில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. பூவுலகு காப்பாற்றப் பட்டால்தான், நாமும் பாதுகாக்கப்படுவோம்.

- கட்டுரையாளர், கோபன்ஹேகனில் நடைபெற்ற முந்தைய பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டில் பங்கேற்றவர்

தொடர்புக்கு: Ydavid.tn@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x