Published : 21 Nov 2015 02:25 PM
Last Updated : 21 Nov 2015 02:25 PM

பருவத்தே ‘உயிர் தா!

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் ஐந்து முறை வறட்சி ஏற்பட்டிருக்கிறது. மும்பையில் 2005-ம் ஆண்டில் ஒரே நாளில் 994 மில்லி மீட்டர் மழை பெய்தது. நாட்டில் இதுவரை பதிவான மழை அளவுகளிலேயே மிகவும் அதிகமானது இது என்று கூறப்படுகிறது. அதையொட்டி, ஐந்தாயிரம் பேர் பலியானார்கள்.

2010-ம் ஆண்டில் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் லே பகுதியில், 30 நிமிடங்களில் 150 முதல் 250 மில்லி மீட்டர் மழை பதிவானது.

2013-ம் ஆண்டில் உத்தராகண்ட் மாநிலத்தில், ஒரே நாளில் 340 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதில் 5,700 பேர் பலியானார்கள்.

2014-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் ஒரே நாளில் 200 மில்லி மீட்டர் மழை பதிவானது. அங்கு ஒரு மாதத்தில் பெய்கிற சராசரி மழை அளவைவிட இது 400 சதவீதம் அதிகம் என்று கூறப்படுகிறது.

என்ன காரணம்?

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று நினைக் கிறீர்கள்? சந்தேகமே இல்லாமல் பருவநிலை மாற்றம்தான்! ஏதோ ஓர் இடத்தில் பெய்கிற மழை அளவைக் கொண்டு மட்டும் விஞ்ஞானிகள் இதைக் கூறவில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவது ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில், சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. மேலும் ஒரு நிகழ்வுக்கும் அடுத்த நிகழ்வுக்கும் இடையிலான காலமும் குறைந்துகொண்டே வருகிறது. அதன் அடிப்படையிலேயே இந்த மழை அளவு மாறுபாடுகளுக்குப் பருவநிலை மாற்றம் எனும் பிரச்சினையே காரணம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையால் விவசாயம் பாதிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், அதை பணரீதியாகக் கணக்கிடும்போதுதான், அது ஒரு மாபெரும் பொருளாதாரப் பிரச்சினை என்பது புரிய வரும்.

எவ்வளவு இழப்பு?

தேசிய அளவில் பருவநிலை மாற்றத்தால் விவசாயத்தில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ.), ஆய்வு செய்தது. அதன்படி, இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம்வரை நாடு முழுக்க ஒரு கோடியே 82 லட்சம் ஹெக்டேர் நிலப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை அப்படியே பொருளாதார ரீதியாகக் கணக்கிட்டால் சுமார் ரூ.20,453 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு மாறுபடும் மழை அளவுகளால் தனக்கு ஏற்படும் இழப்பை அரசு தரும் இழப்பீடு, வேளாண் காப்பீடு மற்றும் வங்கி, தனியார் கடன் ஆகிய வழிகளில் ஒரு விவசாயி சரிகட்டுகிறார்.

"ஆனால் இங்குதான் பிரச்சினையே. இழப்பீடு, காப்பீடு, கடன் என எந்த வழியிலும் ஒரு விவசாயிக்கு நியாயமான தீர்வு கிடைப்பதில்லை என்பதுதான் நிதர்சனம்" என்கிறார் சி.எஸ்.இ. ஆய்வாளர் அர்ஜுனா நிதி.

இழப்பீட்டு அரசியல்

அரசு இழப்பீடு மாநிலத்துக்கு மாநிலம் வேறு வேறாக, ஏற்ற இறக்கங்களோடு இருக்கும். டெல்லியில் ஒரு ஏக்கர் பாதிப்புக்கு ஒரு விவசாயிக்குக் கிடைக்கும் இழப்பீடு அதிகமாக இருக்கும். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் ஒரு ஏக்கர் பாதிப்புக்கு ஒரு விவசாயிக்குக் கிடைக்கும் இழப்பீடு மிக மிகக் குறைந்த அளவாகவே இருக்கும்.

"அரசு தரும் இழப்பீடு என்பது ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட முடிவைச் சார்ந்தது. அது மட்டுமல்லாமல், தனது நிலத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஒரு விவசாயி அளவிடுவதற்கும் மாவட்ட - மாநில - தேசிய அளவில் அரசு அந்த இழப்பை அளவிடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் நிலவுகின்றன. இது மட்டுமல்லாமல் லஞ்சம், கால தாமதம் ஆகியவற்றாலும் ஒரு விவசாயிக்கு நியாயமான முறையில் இழப்பீடு கிடைப்பதில்லை" என்கிறார் அர்ஜுனா.

விழிப்புணர்வற்ற விவசாயிகள்

அரசு தரும் இழப்பீடு அரசியல் சார்ந்தது என்றால், வேளாண் காப்பீடுகள் முற்றிலும் விழிப்புணர்வு சார்ந்தவை. நம் நாட்டில் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம், மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பருவம் சார்ந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என மூன்று வகை காப்பீட்டு திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்களால் பயன்பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை, வெறும் 19 சதவீதம் மட்டுமே! அவர்களும்கூட ஒரு முறை மட்டுமே காப்பீடு செய்தவர்கள்.

"சுமார் 11 சதவீதம் விவசாயிகள் காப்பீட்டு பிரீமியம் தொகை கட்டக்கூட முடியாத சூழ்நிலையில் உள்ளனர். 24 சதவீதம் பேரிடம் காப்பீட்டு திட்டங்களில் இணைவதற்குத் தேவையான நிலப் பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை. மீதம் உள்ள 46 சதவீதம் பேர் இந்தத் திட்டங்களில் இணைந்துகொள்ள ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 72 மணி நேரத்துக்குள் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தகவல் அளிக்க வேண்டும் என்பன போன்ற விதிமுறைகளை, யதார்த்தத்தில் கடைப்பிடிக்கச் சிரமமாக இருப்பதால்தான்" என்கிறார் அர்ஜுனா.

கடன் வெள்ளம்

அடுத்ததாக, வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் ஆகியோரிடம் வெள்ளத்திலிருந்து தப்பிக்கக் கடன் வாங்கினால், அந்தக் ‘கடன் வெள்ள'த்தில் பிறகு எப்படித் தப்பிப்பது என்பது யாருக்குமே தெரியாத புதிர். நாட்டில் 43 சதவீத விவசாயிகள் வங்கியை நம்பியிருக்க, அடுத்தபடியாக 26 சதவீதம் பேர் தனியார் நிதி ஏற்பாட்டாளர்களைத்தான் நம்பியிருக்கின்றனர். மீதமுள்ள 31 சதவீதம் பேர் மட்டுமே உறவினர்கள், இதர வழிகளில் கடன் பெறுகின்றனர்.

இப்படிக் கடன்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் 82.5 சதவீதமாக உள்ளது. இதனால் தேசிய அளவில் அதிகக் கடன்பட்ட விவசாயிகள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

விடுதலை எங்கே?

இந்தப் பிரச்சினைகளிலிருந்து விவசாயிகளை எப்படி விடுவிப்பது?

“விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீடுகளைக் கணக்கிடுவதில், பயிர் இழப்பை அளவிடுவதில்தான் அதிகப் பிரச்சினைகள் நிலவுகின்றன. இதன் காரணமாகத் தற்போது இஸ்ரோ அமைப்பின் உதவியோடு ஹரியாணா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மாவட்டத்தில் பரிசோதனைரீதியாக, செயற்கைக்கோள் மூலம் பயிர் விளைச்சல் மற்றும் பயிர் இழப்பு ஆகியவற்றைக் கணக்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் இதர மாநிலங்களிலும் இதைச் செயல்படுத்தலாம். மற்றபடி தாமதமோ அல்லது லஞ்சமோ இல்லாமல் இழப்பீடு, காப்பீடு ஆகியவற்றை அரசு சரியான நேரத்தில் வழங்கினாலே மீண்டும் கலப்பையைப் பிடிக்கும் தெம்பு விவசாயிகளுக்கு வந்துவிடும்” என்கிறார் அர்ஜுனா.

அர்ஜுனா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x