Last Updated : 07 Jan, 2017 10:29 AM

 

Published : 07 Jan 2017 10:29 AM
Last Updated : 07 Jan 2017 10:29 AM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 15: இயற்கை உற்பத்தித் திறனுக்கு எல்லையே இல்லை

`நிலத்துக்கு எல்லைக் கோடுகள் உண்டு

வானத்துக்கு எல்லையே இல்லை’

பண்ணை வடிவமைப்பின் விதிகள், கோட்பாடுகள் பற்றி பார்க்கும்போது பண்ணையின் உற்பத்தித் திறன் அல்லது விளைவிப்புத் திறன் பற்றிய கோட்பாடு மிக அடிப்படையானது. அதாவது கொள்கை அடிப்படையில் பண்ணையின் உற்பத்தித் திறன் எல்லையற்றது. இதில் உண்மையான எல்லை என்னவென்றால், வளங்களைப் பயன்படுத்தும் அறிவுதான். அதாவது பண்ணை வளங்களை எத்தனை தடவை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்குக் கூடுதலாகப் பயன் கிடைக்கும். எத்தனை புதிய கூறுகளை அதற்குள் இணைக்கிறோமோ அந்த அளவுக்கும் பயன் கிடைக்கும்.

சேர்த்துக்கொண்டே போகலாம்

பண்ணை வடிவமைப்பாளரின் கற்பனைத் திறனும் படைப்பாற்றல் திறனும்தான் இங்கே முக்கியம். வடிவமைப்பாளரின் ஆற்றல் சிறப்பாக இருக்கும்போது, விளைச்சல் வாய்ப்பும் சிறப்பாக அமையும். ஒரு பண்ணை வடிவமைப்புக் கலைஞர் (இங்கே வல்லுநரைக் குறிப்பிடவில்லை), ஒரு பண்ணையைத் தெளிவாகத் திட்டமிட்டு வடிவமைத்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பண்ணையைப் பார்வையிடும் மற்றொரு புத்தாக்கத் திறன் கொண்டவர், அந்தப் பண்ணையில் புதிய ஒன்றை இணைத்துவிட முடியும்.

எடுத்துக்காட்டாக ஒரு தென்னந்தோப்பில் பொதுவாக ஊடுபயிர் செய்வதில்லை. ஒரு சிலர் அதன் ஊடாகக் காப்பி, கோகோ போன்ற பயிர்களைப் பயிரிடுகின்றனர். இந்த இரண்டு அடுக்குப் பண்ணையில் மேலும் ஓர் அடுக்காக வாழையைப் பயிரிடலாம். இன்னும் ஓர் அடுக்காக அன்னாசிப் பழத்தையும் பயிரிடலாம். அவ்வளவுதான் இடம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, மற்றொரு அடுக்காக மிளகுக் கொடியைச் சேர்க்கலாம். முடிந்தது என்று நினைக்கும்போது அங்கு தேன் பெட்டிகளை அமைக்கலாம் என்று ஒருவர் யோசனை கூறினால், அது இன்னும் புதியது. இப்படி வளங்களை அடுக்கிக்கொண்டே செல்வதற்கு எல்லை இல்லை.

எல்லாமே வளம்தான்

வெற்று நிலத்தில் பண்ணையம் தொடங்கும்போது அங்குக் களைகளும் புதர்களும் மண்டி கிடக்கும் அல்லது மண் அரிக்கப்பட்டு ஓடைகளாக, ஏன் பொட்டல் நிலமாகக்கூட இருக்கும். அதை மாற்றும்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், அங்குக் கிடைக்கும் வளங்களை எப்படிப் பயன்படுத்துவது, எத்தனை முறை பயன்படுத்துவது என்பதுதான். நிலத்தில் கிடைப்பவை யாவும் வேண்டாதவையல்ல, எல்லாமே வளங்கள்தான் என்ற பார்வை வர வேண்டும்.

அது கூழாங்கல்லாகக்கூட இருக்கலாம். அங்குக் கிடைக்கும் கல்லையோ மண்ணையோ கொண்டு வரப்புகள் அமைக்க வேண்டும். அங்கேயே கிடைக்கும் பொருளை விலக்கிவிட்டு வெளியில் இருந்து வரப்பு அமைக்கக் கல்லையோ மண்ணையோ கொண்டு வருவது தவறு.

பெய்யும் மழை நிலத்துக்குள் ஏதாவது ஒரு பகுதியில் விழுந்து எங்காவது ஓரிடத்தில் வெளியேறும். அந்த இடத்தைக் கண்டறிந்து, நீரைச் சேமிக்கும் வேலையைச் செய்ய வேண்டும். களைகளையும் முட்புதர்களையும், அது சீமைக் கருவேல முள்ளாகக்கூட இருக்கட்டும், எடுத்து எரித்துவிடக் கூடாது. அது நமக்கு இயற்கை கொடுத்த உயிர்மக் கரிமம் (organic carbon). அதை ஆங்காங்கே புதைத்துவிட்டாலே போதுமானது. உரிய பயன் நமக்குக் கிடைக்கும்.

(அடுத்த வாரம்: நமது வேளாண் முன்னோடிகளின் படைப்பாக்கத் திறன்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x