Last Updated : 17 Oct, 2016 06:58 PM

 

Published : 17 Oct 2016 06:58 PM
Last Updated : 17 Oct 2016 06:58 PM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 05: எப்படி அமைய வேண்டும் பண்ணையம்?

“விலை போட்டு நிலம் வாங்கிவிட்டோம் என மார்தட்டிக் கொள்கிறோம்.

நிலத்தை யாரும் வாங்குவதில்லை. நிலம்தான் நம்மை வாங்கியிருக்கிறது.''

ஒருவரை வாழ்த்தும்போது ‘நீடூழி வாழ்க' என்று வாழ்த்துகிறோம். நீண்டகாலம் தொடர்ச்சியாக வாழ வேண்டும் என்பது அதன் பொருள். ‘நெடுமை', நீடிப்பு, என்பது தமிழில் தொடர்ச்சியைச் சுட்டும் சொற்கள். ‘நெடுநல் வாடை' என்ற பத்துப்பாட்டு இலக்கியம் நீண்ட நாள் இருக்கும் வாடைக் காற்று என்ற பொருளைக் கொண்டது. இதை நாம் ஆங்கிலத்தில் ‘sustainable' என்று குறிப்பிடுகிறோம்.

முன்னோர்கள் சேர்த்து வைத்திருந்த நிலத்தின் வளத்தைப் பண வருவாயை மனத்தில் வைத்து, குறுகிய கால நலன்களுக்கு - உடனடி வருமானத்துக்காக நமது உழவர்கள் இழந்துவருகின்றனர். நிலத்தை வெறும் எந்திரமாகப் பார்த்து, எவ்வளவு உறிஞ்ச முடியும் என்ற பார்வை கொடுக்கப்பட்டதன் காரணமாக, தொடர்ச்சியான வரவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

அறுபட்ட தொடர்ச்சி

வேளாண்மைக்கான நிலம் நீடித்த முறையில் தொடர்ச்சியாக வருமானத்தைத் தருகிறதா அல்லது பருவகாலத்துக்கு ஏற்ப வருமானம் தருகிறதா என்று பார்க்க வேண்டும். ஆண்டுதோறும் வேளாண்மைக்கான வேலை நடக்கும் இடத்தையே பண்ணை என்று கூறுகிறோம், அதேநேரம் மானாவாரி (வானவாரி) நிலங்களில் பருவமழையை நம்பிக் குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் செய்யப்படும் வேளாண்மை நடவடிக்கையைச் சாகுபடி என்று குறிப்பிடுகிறோம்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் வானவாரி (rainfed) உழவர்கள் தங்கள் பண்ணையில் பருவத்துக்கு மட்டும் சாகுபடி செய்தாலும், அதில் பயன்படுத்திய மரபு விதைகள் மூலம் பத்து மாதங்கள்வரை உணவையும் மற்றத் தேவைகளையும் நிலத்தில் இருந்து பெற்றுக்கொண்டிருந்தார்கள். மிளகாய், பருத்தி போன்ற நீண்ட நாள் பயிர்கள் இருந்தன. அவற்றை மற்றக் குறுகிய காலப் பயிர்களுடன் ஊடுபயிராக விதைத்து, தொடர்ச்சியான வருமானம் பெற்றார்கள்.

அந்தக் கண்ணி உடைக்கப்பட்டுவிட்டது. அதற்குப் பல்வேறு அகக்காரணிகளும் புறக்காரணிகளும் உள்ளன. வாழ்க்கை முறை எளிமையாக மாறிவிட்டது, ஆனால் நீர் ஆதாரங்கள் சிதைக்கப்பட்டுவிட்டன. நிலத்துக்குக் கொடுக்கப்பட்ட எரு நிறுத்தப்பட்டு, வேதி உரங்கள் வந்துவிட்டன. இப்படியாகத் தொடர்ச்சி அறுபட்டுவிட்டது. இன்று வானவாரி என்பது பெரும்பாலும் மக்காச்சோளச் சாகுபடியாக வெளிச்சந்தையைக் குறிவைத்துச் செய்யப்படுகிறது.

எது வருமானம்?

இந்தச் சூழலில் தொடர்ச்சியாக ஒரு பண்ணையில் இருந்து வருமானம் வர வேண்டுமானால் அந்தப் பண்ணையின் வேலைத் திட்டம் சற்று விரிவாக இருக்க வேண்டும். ஒரு தொழிற்சாலையில் உள்ள திட்டமிடல் முறையும் செயல்படும் முறையும் பண்ணைக்கும் அவசியம். அதற்கேற்றவாறு பண்ணையை வடிவமைக்க வேண்டும்.

பண்ணையில் கிடைக்கும் வருமானம் என்பது பணத்தை வைத்து அளக்கப்படுவதல்ல. வரு+மானம் எனப் பிரித்துப் பொருள் கொண்டால் இதற்கான உண்மை விளங்கும். மானம் என்றால் அளவு என்று பொருள். 'இதற்கு இவர் பெறுமானம் ஆவாரா?' என்று நாட்டு வழக்கில் கூறுவதுபோல, மானம் என்பது அளவு. வருமானம் என்பதற்கு வரும் அளவு என்று கொள்ள வேண்டும். அது பணமாகவும் இருக்கலாம், ஒரு தென்னை மட்டையாகவும் இருக்கலாம், மாட்டுச் சாணமாகவும் இருக்கலாம். ஆகவே, அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடிப்படை புரிதலுக்கு…

முதலில் நமது பண்ணையின் இருப்பிடம் பற்றிய புரிதல் நமக்கு வேண்டும். புவிப் பந்தில் நாம் வெப்பமண்டலப் பகுதியில் இருக்கிறோம். நமக்கெனப் பல வாய்ப்புகளும் சில சிக்கல்களும் உள்ளன. நமக்கு இரவு பகல் கிட்டத்தட்டச் சமமாக உள்ளது. (பன்னிரண்டு மணி நேர இரவு, பன்னிரண்டு மணி நேர பகல்), வடக்குலக நாடுகளில் இந்த வாய்ப்புக் குறைவு. அடுத்தாக நமக்குப் போதிய வெயில் கிடைக்கிறது. பயிர்களின் வளர்ச்சிக்கு வெயில் முதன்மையானது. அதேநேரம் மழை நாட்கள் நமக்குக் குறைவாக உள்ளன. நீர் ஆவியாகும் வேகம் மிக அதிகம். இது போன்ற சிக்கல்கள் உள்ளன. ஆகவே, நமது இயற்கை அமைப்புக்கு ஏற்ற சாகுபடி முறைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

இவற்றைப் பற்றிய கவனமான புரிதல் தேவை. நீர் கிடைக்கும் வாய்ப்பு, நிலத்தின் தன்மை, நிலம் இருக்கும் அமைவிடம், பருவநிலைகள், பயிர் வகைகள், சமூகக் காரணிகள், வேலையாட்களுக்கான வாய்ப்பு, பொருளியல் வசதி, முதலீடு, பண்ணையத்தில் ஈடுபடுவோரின் திறன் என்று முழுமையான ஒரு பட்டியலைத் தயார் செய்துகொள்ள வேண்டும். இவைதாம் பண்ணை வடிவமைப்புக்கான அடிப்படைத் தரவுகள். இந்தத் தகவல்களைச் சேகரித்துக்கொண்டு களத்தில் இறங்க வேண்டும்.

காற்று நமக்கு வசதியா?

நீர் வளம்: ஆண்டு சராசரி மழைப் பொழிவு பண்ணைக்கு எவ்வளவு கிடைக்கும்? பண்ணைக்கு அருகில் கண்மாய்களோ, ஆறுகளோ, அணைக்கட்டு, கால்வாய்களோ உள்ளனவா? அவற்றிலிருந்து எவ்வளவு நீரைப் பெற இயலும்? நிலத்தடியில் எந்த ஆழத்தில் நீர் கிடைக்கும்?

எப்படி அமைய வேண்டும் ஒரு பண்ணையம்?

நீர் வளம்: ஆண்டு சராசரி மழைப் பொழிவு பண்ணைக்கு எவ்வளவு கிடைக்கும்? பண்ணைக்கு அருகில் கண்மாய்களோ, ஆறுகளோ, அணைக்கட்டு, கால்வாய்களோ உள்ளனவா? அவற்றிலிருந்து எவ்வளவு நீரைப் பெற இயலும்? நிலத்தடியில் எந்த ஆழத்தில் நீர் கிடைக்கும்?

நில வளம்: மண்ணின் தன்மை என்ன? செம்மண்ணா? - கரிசலா? அதன் நீர்ப்பிடிப்புத் தன்மை, மட்கு இருக்கிற அளவு, அமில-கார தன்மை, மின் கடத்தும் தன்மை என்று அடிப்படையாக மண் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நிலத்தின் அமைப்பு எவ்வாறு உள்ளது, நிலக்கோப்பு எனப்படும் சரிவு, உயரம், நீர் செல்லும் வேகம் போன்றவை கணக்கில் கொள்ளப்பட வேண்டும். உயரம் அதிகமான நிலப்பரப்பில் நீரின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் மண் அரிமானம் கூடுதலாகி மண் வளம் கெடும். இதைத் தடுக்கச் சரியாகக் கரைகள் அமைக்க வேண்டும். சமநிலப் பகுதியில் நீரால் மண் அரிமானம் குறைவாக இருக்கும். ஆனால், காற்றின் வேகம் சமவெளியில் சில இடங்களில் கூடுதலாக இருக்கலாம். அதன் மூலம் மேல் மண் அடித்துச் செல்லப்படும். எனவே, காற்றின் வேகம் பற்றிய தகவல் வேண்டும். வேகமான காற்றைப் பற்றிப் புரிந்துகொள்ளாமல் சிறு குடிசை அமைத்தாலும், அது காற்றுக் காலத்தில் அடித்துச் செல்லப்படும். இப்படியான நடைமுறை அனுபவங்கள் நிறைய உள்ளன. அதிலும் காற்று வீசும் மாதங்கள் பற்றிய தெளிவான தகவல் வேண்டும். நமது கட்டுமானங்கள் அதைத் தாங்கும் அளவிலோ அல்லது மறைவான இடத்திலோ அமைக்கப்பட வேண்டும்.

காலங்களைப் பற்றிய புரிதல்

வெப்பம் பற்றிய தகவலும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். பொதுவாகப் பங்குனி, சித்திரை (மே, ஜூன், ஜூலை) மாதங்களில் தமிழகத்தில் கடும் வெப்பம் இருக்கும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வெப்பம் குறைவாக இருக்கும். அப்படியானால் அந்த வெப்பத்தின் தன்மைக்கு ஏற்பக் கட்டுமானங்களை அமைத்தல், பயிர்களைத் தேர்வு செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, பருவங்கள் பற்றிய தகவல் திரட்டுவது இன்றியமையாததாகிவிடுகிறது. நமக்கு ஆறு பருவங்கள். இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்ற முறையில் அமைந்துள்ளன.

இப்படியாக நிலம், நீர், காற்று, பருவம் ஆகிய காரணிகளைக் கொண்டு, அதாவது தகவல் களஞ்சியத்தைக் கொண்டு ஒரு பண்ணையை வடிவமைக்க வேண்டும்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x