Published : 09 May 2015 12:03 PM
Last Updated : 09 May 2015 12:03 PM

தென் தமிழகப் புள்ளினங்கள் அறிய உதவும் கையேடு

உலகிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் பொழுதுபோக்கு பறவைகளை அவதானித்தல் (Bird Watching). இதன் சிறப்பு என்னவென்றால், பறவைகளைக் கவனிக்க ஆரம்பிப்பவர்களின் ஆர்வம் சீக்கிரமே காட்டுயிர் பேணல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என விரிவடைந்து மக்கள் நலனில் நிலைகொள்ளும்.

நம் நாட்டில் புகழ்பெற்று விளங்கும் பல சூழலியலாளர்களின் முதல் ஆர்வம் பைனாகுலருடன் பறவைகளை அவதானிப்பதில்தான் ஆரம்பித்தது. புள்ளினங்கள் மேல் பிடிப்பு ஏற்படுபவர்களுக்கு முதலில் தேவைப்படுவது தாம் பார்க்கும் பறவைகளை அடையாளம் காண ஒரு கையேடு.

புதிய கையேடு

'தென் தமிழக நீர்நிலைவாழ் பறவைகள்' என்ற இந்தக் கையேடு 88 புள்ளினங்களை வண்ணப்படங்களுடன், எளிமையான நடையில், ஒவ்வொரு பறவையையும் சிறு குறிப்புடன் அறிமுகப்படுத்துகிறது. பறவைகள், அவற்றின் வாழிடம், வலசை போதல் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள், முன்னுரை போலச் சிறப்பாக எழுதப் பட்டுள்ளன. ஒளிப்படங்கள் அருமை. டிஜிட்டல் கேமராக்கள் பறவைகளை வெகு அருகில் கொண்டு வந்துள்ளன. அந்த உதவியுடன் இந்நூல் துல்லியமாக அச்சிடப்பட்டுப் பன்னாட்டு தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இரை தேடப் பறவைகள் கூடும் நீர்நிலைகள், நீர்ப்பறவைகளைக் கவனிக்கச் சிறந்த இடம். ஒரே இடத்திலிருந்து பல பறவைகளைப் பார்க்கலாம். இருநோக்கி (பைனாகுலர்) இருந்தால் வெகு தூரத்திலுள்ள புள்ளினத்தையும் பார்த்து அடையாளம் கண்டுகொள்ள முடியும். அது மட்டுமல்ல. நீர்நிலைகளை நாடித்தான் உள்ளான்கள் போன்று வலசை போகும் பெருவாரியான புள்ளினங்கள் வருகின்றன. இந்நூலை எழுதியவர்கள் அதனால்தான் நீர்ப்பறவைகளைப் பற்றி கையேடு தயாரித்துள்ளனர். (நீர்நிலை வாழ் பறவை என்ற நீண்ட பதத்தைவிட நீர்ப்பறவை – waterfowl என்னும் சொல்லே பொருத்தமாக இருக்கும்).

நெருடல்

அதிலும் தென்தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களில் பறவைகள் வெகுவாகக் காணப்படுகின்றன. இங்குள்ள நீர்நிலைகள் மற்ற இடங்களைப்போல் அவ்வளவாக மாசுபடவில்லை என்று நினைக்கிறேன். புகழ்பெற்ற கூந்தன்குளம் சரணாலயமும் இங்கேதானே இருக்கிறது.

நூலை ஆங்கிலத்தில் எழுதித் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை. அதனால் தமிழ்நடை ஆங்காங்கே சற்றே நெருடுகிறது. சந்திப் பிழைகளும் மிகுந்துள்ளன. பிரதி செப்பனிடப்படாதது போல் தோன்றுகிறது.

பெயர்கள் கவனம்

தமிழ்ப் பெயர்கள் தரப்பட்டிருப்பது வரவேற்க வேண்டியது. (அதை ஏன் 'வழங்கு பெயர்' என்று சொல்ல வேண்டும்? தமிழ்ப்பெயர் எனக் குறிப்பிட வேண்டியதுதானே?) Purple Heron-ன் தமிழ்ப்பெயர் செந்நாரை. அத்துடன் வழங்கி வந்த பெயரான ஜம்பு நாரை என்ற பெயரும் இருக்கலாம். அதேபோல Black Ibis-ன் தமிழ்ப்பெயர் அன்றில், புகழ்பெற்ற பெயர். “அன்றில் சிறு பறவை ஆண் பிரிய வாழாது” என்றார் பாரதி. இன்றும் புழக்கத்திலுள்ள பெயர். Lapwing பறவையின் பெயர் ‘ஆள்காட்டி’. இதற்குக் குருவியென்ற அடைமொழி அவசியமில்லை.

நாகர்கோவிலில் வாழும் பறவை யியலாளர்கள் ராபர்ட் கிரப், அவருடைய மனைவி ஷைலஜா இருவரும் எழுதிய தமிழகத்தின் நீர்ப்புல பறவைகள் என்ற கையேடு, ப.ஜெகநாதன்-ஆசை எழுதிக் க்ரியா வெளியிட்ட 'பறவைகள் - அறிமுகக் கையேடு' ஆகியவை இதற்கு முன்னர் வெளிவந்துள்ளன. அவற்றைத் தொடர்ந்து இக்கையேடு வந்திருப்பது மகிழ்ச்சியான செய்திதான்.

தென் தமிழக நீர்நிலைவாழ் பறவைகள்
களக்கையேடு, டி. கணேஷ்,
ஆல்வின் ஜேசுதாசன், எம். மதிவாணன்,
வெளியீடு: Ashoka Trust for
Research and the Environment, Bangalore.
தொடர்புக்கு: 9488063750

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x