Last Updated : 04 Jun, 2016 12:33 PM

 

Published : 04 Jun 2016 12:33 PM
Last Updated : 04 Jun 2016 12:33 PM

சென்னைக்கு வந்த அரிய மஸ்லின் ஆடைகள்

மஸ்லின் துணியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெயர் வித்தியாசமாகத் தோன்றினாலும், இது முழுக்க முழுக்க கைத்தறி ஆடை. உலகிலேயே மிகவும் மெலிதான, லேசான ஆடை இது.

ஓர் ஆடையின் நுண்மையான தன்மை, லேசான தன்மையின் அடிப்படையில் அலகுகள் தரப்படுவது உண்டு. அந்த வகையில் காதி பருத்தித் துணிகளின் அலகு 30-லிருந்து தொடங்கும். மஸ்லினின் அலகோ 400-லிருந்து 600 வரை என்றால், அதன் மெல்லிய தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.

மொகலாய அரசர்கள் காலத்திலிருந்தே மஸ்லின் ஆடைகள் புகழ்பெற்றிருந்தன. மஸ்லின் பற்றி பரவலாகக் கேள்விப்படும் செவிவழிச் செய்தி, சிறு மோதிரத்துக்குள் மொத்த மஸ்லின் துணியையும் நுழைத்து வெளியே எடுத்து விடும் அளவுக்கு அவை மெலிதாக இருப்பதுதான்.

டாக்கா மஸ்லின்

வங்கத்தைச் சேர்ந்த டாக்கா மஸ்லின் துணிகள் உலகப் புகழ்பெற்றவை. டாக்கா மஸ்லின் சேலைகள் ஒரு தீப்பெட்டிக்குள்ளோ, டிபன் பாக்ஸிலோ அடைத்துவிடும் அளவுக்கு லேசானவை, நுணுக்கமாக நெய்யப்பட்டவை. மால்-மால் என்ற பெயரில் நெய்யப்பட்ட மிகவும் நுண்மையான மஸ்லின் ஆடைகள் 17-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பெரும் ஆர்வத்தை உருவாக்கின. மஸ்லின் துணியில் தைக்கப்பட்ட ஓர் சட்டையின் எடை 10 கிராம்தான் இருக்கும். ஃபேனைப் போட்டால் பறந்தே போய்விடும் அளவுக்கு லேசானது.

இந்த மஸ்லின் துணியை இயந்திர நெசவால் உருவாக்க முடியவில்லை. அரிதான இந்தக் கலை மீட்கப்பட்டுள்ளது. கைத்தறியின் பெருமையான இந்த மஸ்லின் துணிகள், நுணுக்கமான நெசவு வேலைப்பாட்டைக் கொண்ட ஆடைகளின் கண்காட்சி சென்னைக்கு வந்திருக்கிறது.

இயற்கை பருத்தி ஆடைகள்

கொல்கத்தாவைச் சேர்ந்த மகாத்மா காந்தி கிராமோத்யோக் சேவா சன்ஸ்தான் உற்பத்தி செய்த துப்பட்டா, குர்தி, சட்டை, வேட்டி, சேலை, துணி போன்றவை சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி. ஆர்ட் சென்டரில் மூன்று நாட்களுக்குக் கிடைக்கின்றன.

இந்தக் கண்காட்சியில் கிடைக்கும் அனைத்து ஆடைகளும் இயற்கைக்கு இணக்கமாக உற்பத்தி செய்யப்பட்டவை, இயற்கை வழியில், இயற்கை சாயம் ஏற்றப்பட்ட, நவீன கைத்தறி ஆடைகள்.

விவசாயிகள், பருத்தியெடுப்பவர்கள், நூல்நூற்பவர்கள், சாயமேற்றுபவர்கள், நெசவாளிகள் இணைந்து ஹைதராபாத்தில் நடத்தி வரும் மல்கா நிறுவனம் இயற்கையைச் சீரழிக்காமல் உற்பத்தி செய்த பருத்தி துணி; அதேபோலப் பெங்களூருவைச் சேர்ந்த நேச்சர் அல்லேயின் ஸ்டைலான காதி, கைத்தறி, இயற்கை சாய ஆடைகள்; பாரம்பரிய டிசைனுடன் நவீன ஆடைத் தொழில்நுட்பமும் இணைந்த பெங்களூருவைச் சேர்ந்த பிரயோக்கின் யோகா ஆடைகள் போன்றவை இந்தக் கண்காட்சியில் கிடைக்கின்றன.

இன்றும் நாளையும்

இந்த ஆடைகள் தவிர மேற்கு வங்கம் பங்குராவைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்களின் சணல் கைவினைப் பொருட்கள், களிமண் அணிகலன்கள், சுடுமண் பொருட்களும் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சியைச் சென்னையைச் சேர்ந்த துலா ஒருங்கிணைக்கிறது. சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்காமல் இயற்கைவழியில் உருவாக்கப்பட்ட பாரம்பரியப் பருத்தி ஆடைகளை உற்பத்தி செய்துவரும் நிறுவனம் இது.

சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி. ஆர்ட்ஸ் சென்டரில் இன்றும் நாளையும் (ஜூன் 4, 5) இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x