Last Updated : 27 May, 2017 12:24 PM

 

Published : 27 May 2017 12:24 PM
Last Updated : 27 May 2017 12:24 PM

சீமை கருவேலம் வில்லனா? - கையில் சிக்கிய திடீர் குற்றவாளி

சீமை கருவேலம் வறண்ட நிலங்களில் எந்த வித கவனிப்பும் இல்லாமல், நீர் பாய்ச்சுதல், உரமிடுதல், மண் பக்குவம், பருவநிலை போன்ற எதைப் பற்றியும் கவலையில்லாமல் எந்தச் சூழ்நிலையிலும் நன்கு வளரக்கூடிய தாவரம்.

தென் மாநிலங்களில் கடுமையான வறட்சி, பஞ்சம் சூழ்ந்திருந்த காலகட்டத்தில் பிரேசில் நாட்டிலிருந்து 1950-களில் விறகுக்காகவும் வேலியமைக்கவும் இது கொண்டு வரப்பட்டது. இவற்றின் விதைகளைச் சேகரித்து வந்தோர், அதன் பூர்விகத்தை அறிந்திருக்கவில்லை.

இன்னும் சில தாவரங்கள்

சீமை கருவேல மரத்தைப் போலவே வேறு பல தாவரங்களும் உயிரினங்களும் நம் மண்ணில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் அழகான மலர்களுக்காக லான்டானா (உன்னிச் செடி) வந்தது. நாடு விடுதலை பெற்ற பின் ஆஸ்திரேலியாவில் இருந்து தைல மர நாற்றுகளை வனத் துறை அள்ளி வந்தது. தைல மரத்துக்கு விழா எடுத்துப் புகழ்பாடிய பின்னர்தான், அது அதிக நீரை உறிஞ்சுகிறது என்பதை உணர ஆரம்பித்தனர்.

அந்தக் காலத் திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் கடும் பஞ்சம் நிலவியபோது, அப்போதைய அரசர் ஸ்பெயினில் இருந்து மரவள்ளிக்கிழங்கைக் கப்பலில் கொண்டுவந்தார். கப்பலில் வந்ததால் மக்கள் அதை ‘கப்பக்கிழங்கு’ என்றழைத்தனர். மக்கள் பசியாற்றிக் கொண்டதோடு, அப்பயிர் பற்றியும் சிந்தித்தனர். அதன் பலனே இன்றைக்குப் பல்வேறு கிளைகளை எடுத்துள்ளது மரவள்ளிக் கிழங்குத் தொழில். அத்துடன் நம் மண்ணில் நிலையானதொரு வேளாண் பயிராகவும் மாறியிருக்கிறது.

திடீர் கண்டுபிடிப்பு

இந்தப் பின்னணியில் வறட்சியிலும் நன்கு வளரும் தாவரமான சீமை கருவேலம், தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அதிகம் வளர்கிறதென்றால் அது குறித்துச் சிந்திக்க வேண்டும்.

இந்தத் தாவரம் 60 ஆண்டுகளாக நிலைத்திருந்தாலும் விஞ்ஞானிகள், அரசு, வனத் துறை போன்ற யாரும் இதன் ஆபத்து பற்றி பேசவில்லை. 60 ஆண்டுகளுக்குப் பின் அது மிகவும் மோசமானது என்று திடீரென்று எல்லாத் துறைகளும் எப்படிக் கண்டுபிடித்தன?


வன்னி மரம்

நீர்வளக் குற்றச்சாட்டு

இந்த மரம் வளர்வதால்தான் நீர் வளம் குன்றிவிட்டது, விவசாயம் அழிகிறது என்கின்றனர். மற்றொருவர் இந்தத் தாவரம் 1000 அடி ஆழத்திலிருந்து நீரை உறிஞ்சுகிறது என்கிறார். ஆற்று மணலை வாரி நிலத்தடி நீரை வீணடிப்பதற்கு எதிராக இத்தனை வலுவான எதிர்ப்பு ஒலிக்கவில்லையே. நீரற்ற சூழ்நிலையிலும் ஒரு தாவரம் வளர்கிறது என்றால், அதன் தனித்தன்மை பற்றித்தானே ஆராய வேண்டும்?

சீமைக் கருவேலம்தான் நீர்வளம் கெட்டதற்குக் காரணம் என்றால், கொங்கு பகுதியில் நொய்யல் ஆறு நொந்து போயிருப்பதற்கு உண்மைக் காரணம் என்ன? பாட்டில் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நீரை வாரிவாரி கொடுக்கிறோமே, அது எந்தக் கணக்கில் சேரும்? விடுதலை பெற்று 68 ஆண்டுகளாகியும் அனைத்துக் கிராம மக்களுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லையே, ஏன்?

மேலும் சில புகார்கள்

இம்மரத்தைப் பூச்சிகள், நோய்கள் தாக்குவதில்லை என ஒருவர் எழுதுகிறார். தாவரத்தைப் பொறுத்தவரை இது நல்ல அம்சம்தான். இதற்கான காரணத்தை ஆராய்ந்து, மற்றத் தாவரங்களில் இதுபோன்ற பண்பை ஊக்குவிக்க என்ன செய்வது என்றுதானே ஆராய வேண்டும்?

இத்தாவரம் அதிகமாகக் கரியமில வாயுவை வெளியிட்டுச் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்று இன்னொருவர் குற்றஞ்சாட்டுகிறார். கருவேல மரக்கட்டைகளை எரித்தால் வரும் புகை ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற நோய்களை உருவாக்கும் என்று இன்னொரு குற்றச்சாட்டு. இது எந்த நாட்டு ஆராய்ச்சியின் முடிவு?

திடீர் முடிவுகள்

இந்த மரத்தைப் பறவைகள், உயிரினங்கள் பயன்படுத்தவில்லை என்றொரு அபாண்டமான புகார். ஆனால், அது உண்மையில்லை.

கருவேல மரத்தின் இலை, காய்களை உண்டால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்கிறது ஒரு வதந்தி. இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளாக இந்த மரத்தின் இலைகள், காய்களை உண்ட எத்தனை கால்நடைகள் மலடாகியிருக்கின்றன? இது தொடர்பாக நாட்டில் எந்தத் துறை ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது?

நமது நாட்டில் கருவேல மரம், அது ஏற்படுத்திய தாக்கம் பற்றி எத்தனை அறிவியல்பூர்வமான ஆய்வுகள் நடைபெற்றிருக்கின்றன? பல கருத்துகள் அறிவியல் ஆதாரமில்லாமல் வதந்திகளாக, புகார்களாக, குற்றச்சாட்டுகளாகப் பரவலாக வலம் வருகின்றன.

இத்தனை பிரச்சினைகள் அதன் பின்னணியில் இருக்கின்றன என்றால், ஏன் இவ்வளவு காலம் அரசுத் துறைகள் உறக்கத்தில் இருந்தன? இன்றைக்குத் திடீரென ஏன் விழித்துக்கொண்டுள்ளன? இன்றைக்குப் பட்டியலிடப்படும் ஆபத்துகள் ஏன் இத்தனை ஆண்டுகளில் கண்டறியப்படவில்லை?

மருத்துவக் குணம்

இந்த இடத்தில் இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். இங்கிலாந்து பிளேக் நோயால் உலுக்கியெடுக்கப்பட்டபோது, இன்றைக்குப் போதை வஸ்துவாகக் கருதப்படும் கஞ்சா பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது. இன்றைக்கு மருத்துவர்கள் கொடுக்கும் மயக்கமருந்துக்கு அடிகோலியதும் Cannabis என்ற தாவரமே. அதேபோலப் புகையிலை, மருந்தாக இருந்து, இன்றைக்குப் போதைப் பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.

சீமை கருவேல மரத்தின் பேரினத்தைச் சேர்ந்த வன்னி மரம் (Prosopis spicigera) பல மருத்துவக் குணங்களைக் கொண்டது. மூலிகை மருத்துவத்தில் சிற்றினங்களிடையே மருத்துவக் குணங்களில் அதிக வேறுபாடுகள் இருக்காது. சீமை கருவேல மருத்துவக் குணங்களை நமது மருத்துவ ஆய்வாளர்கள் துருவிப் பார்த்ததில்லை.

கருவேல மரக் காய்களில் கால்சியம், தயமின், ரிபோஃபிளேவின் போன்றவை நிறைந்துள்ளன. இதன் காய்களிலிருந்து தயாரிக்கப்படும் ‘அல்கரோபினா காக்டெய்ல்’ என்ற பானம் பெரு போன்ற நாடுகளில் காலையில் வந்து மதியத்துக்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிடுமாம். இது வயிற்றுக் கோளாறுக்கு நிவாரணம், உடல் உறுப்புகளுக்கு உற்சாகம் ஊட்டுதல், பாலுணர்வைத் தூண்டுதல் ஆகிய தன்மைகளைக் கொண்டது.

பலன்கள் ஏராளம்

ஒரு விஞ்ஞானி நடத்திய ஆராய்ச்சியின்படி ஒரு ஹெக்டேரில் ஐந்து ஆண்டு வளர்ந்த நிலையில் உள்ள கருவேலமரங்கள் 8,000 கிலோ காய்களைக் கொடுக்கும். அதை உரிய வகையில் பயன்படுத்தலாம். இவற்றின் மலர்களில் நெக்டார் திரவங்கள் நிறைந்துள்ளன. ஒரு ஹெக்டேர் தாவரத்தில் 400 கிலோவரை தேன் எடுக்கலாம்.

விவசாயிகளும் விஞ்ஞானிகளும் இவற்றின் இலைகளைச் சிறந்த தீவனம் என்கின்றனர். இயல் தாவரங்களும்கூட இலைகளை உதிர்த்து நிற்கும்போது, கால்நடைகளுக்குக் கருவேல இலைகள்தானே இத்தனை காலமும் உணவாகின, அவைதானே நிழல் தந்தன.

இதன் கட்டைகளை மரப்பலகைகளாக, வீட்டுச் சாரங்களாக மாற்றலாம். ஏற்கெனவே, நின்று எரியும் விறகாகவும் இதன் கட்டைகள் பெருமளவு பயன்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் 1970-களில் மரத்தை வெட்டி, சுட்டுக் கரியாக்கிப் பல ஏழைகள் வியாபாரம் செய்து முன்னேற்றம் கண்டுள்ளனர்.

தேவை அறிவியல் பார்வை

கிராமங்களில் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் வேலையற்று இருப்போருக்கு, சீமை கருவேல மரத்தின் மேற்கண்ட பயன்களைப் பயன்படுத்தி வேலையை உருவாக்கலாம்.

வறண்ட, தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் இந்தத் தாவரம் நம் நாட்டில் மட்டும் மிக மோசமான கண்டனத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. அறிமுகப்படுத்தப்பட்ட 50-60 ஆண்டுகளில் நாட்டில் எந்த ஒரு துறையும் இதன் மேலாண்மை, ஆராய்ச்சி சார்ந்து எதுவும் செய்யவில்லை.

எதிர்காலத்திலாவது இதன் நன்மை, தீமை குறித்து அறிவியல்பூர்வ ஆராய்ச்சியும் அதன் அடிப்படையில் இது மேலாண்மையும் செய்யப்பட வேண்டும். மாறாக, வீண் வெறுப்பும் கண்மூடித்தனமான அழிப்பும் எந்தப் பலனையும் தரப்போவதில்லை.

கட்டுரையாளர், கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kklaksh53@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x