Last Updated : 18 Jun, 2016 11:47 AM

 

Published : 18 Jun 2016 11:47 AM
Last Updated : 18 Jun 2016 11:47 AM

கிழக்கில் விரியும் கிளைகள் 35: முத்து போன்றது, நாற்றத்தையும் விரட்டும்

சங்க இலக்கியத்தில் மட்டும் 90 பாடல்களில் சுட்டப்பட்டுள்ள புன்னையின் மாற்றுப் பெயர்களாகப் புன்னாகம், நாகம், வழை, சுரபுன்னை ஆகியவற்றைத் திவாகர, பிங்கல, உரிச்சொல், சூடாமணி, நாமதீப நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. இவற்றில் புன்னாகம் மட்டுமே புன்னையின் நிச்சயமான மாற்றுப் பெயராக இருப்பதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. புன்னாகம் என்றால் புன்னையின் விசேஷம் என்று அகராதி காட்டும் பொருள் மட்டுமில்லாமல், அதுவே சரியான மாற்று பெயர் என்று நச்சினார்க்கினியரும், தமிழறிஞர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் வாதிடுகின்றனர். “புன்னாகச் சோலை புனல் தெங்கு சூழ மாந்தை நன்னாகம் நின்றலரும் நன்னாடன்” என்ற முத்தொள்ளாயிர வரிகள் புன்னாகத்தை நெய்தல் நிலத்துப் புனல் தெங்குடன் (தாழை) இணைத்துக் கூறியிருப்பதால், புன்னாகம் என்பது புன்னையைக் குறிக்கும் சொல்லாகக் கொள்ள வேண்டும்.

இனிய நறுமணம்

ஞாழல், தாழை போன்ற இதர நெய்தல் நிலத் தாவரங்களுடன் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம்வரை புன்னை பூக்கும். புன்னை மலரின் மொட்டு உருண்டையானது, வெண்மை நிறமானது, முத்தோடு ஒப்பிடப்படுவது, குறிப்பாக நன்கு கழுவிச் சுத்தம் செய்யப்படாத முத்து போன்றது, மொட்டு வெண்மையான பல்லி முட்டையோடும் (பொரிப்புறப் பல்லி சினையீன்ற புன்னை” ஐந்தினை ஐம்பது 43; “…. பல்லி செறீத்த சினை போலும் நீளீரும் புன்னை பொரிப்பூ” பழமொழி 317), ஊர்க்குருவியின் முட்டையோடும் ஒப்பிடப்பட்டுள்ளது (அகநானூறு 231:6).

புன்னைப் பூக்கள் நல்ல மணம் கொண்டவை (கடிமலர்). இவை மஞ்சரியில் கொத்தாக உண்டாக்கப்படுகின்றன. மலரின் மணம், கடுமையான கருவாட்டு நாற்றத்தைக்கூடப் போக்கும் தன்மையுடையது. இந்த மணம் பூவின் தாதுவிலிருந்து பெரும்பாலும் தோன்றுகிறது என்று அறியப்படுகிறது.

புன்னை மலர் சூடத்தக்கது; நெய்தல் நிலத்து ஆண்களும் பெண்களும் இதைச் சூடினர். சூடியது போக எஞ்சிய மலர்களே, காயாயின. பூவின் தாது (மகரந்தம்) பொன்னிறமானது, பூவின் மணத்துக்கு இதுவே பெருமளவு காரணமாகத் திகழ்கிறது.

அற்புத எண்ணெய்

சதைப் பற்றுள்ள, உருண்டையான காயும் கனியும் பொதுவாகக் கோலிக்குண்டு அளவுக்கு இருக்கும். ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் காய்கள் மரத்தில் காணப்படும் என்றாலும் ஜூன் முதல் செப்டம்பர்வரை மிக அதிக அளவில் காணப்படும். புன்னைக் கொட்டையை மணலில் புதைத்துவிட்டுத் தேடும் விளையாட்டு நெய்தல் திணை மக்களிடையே பரவலாக இருந்தது (நற்றிணை :172) இன்றும்கூட, நாகை, புதுக்கோட்டை கடற்கரையில் சிறுவர்கள் இந்த விளையாட்டை விளையாடுவதை நான் கண்டிருக்கிறேன்.

பூவும் காயும் மருத்துவப் பண்புகள் நிறைந்தவை. நன்கு அரைக்கப்பட்ட பூ சொறி, சிரங்கு, புண்களை நீக்கப் பயன்படுத்தப்படுகிறது. பூவின் சாறு நரம்புக் கோளாறுகளுக்கும் வலிப்புகளுக்கும் கொடுக்கப்படுகிறது. புன்னைக்காய் நிறைய எண்ணெய்ச் சத்து கொண்டது (நெய்கனி). இந்த எண்ணெய் விளக்கு எரிக்கவும் தீப்பந்தங்களை ஏற்றவும் பண்டைய தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டது.

புன்னை எண்ணெய் அடர் பச்சை நிறமுடையது, நாற்றம் அடிக்கக் கூடியது. டோம்பா (Domba), டிலோ (Dilo) அல்லது (Laurel) எண்ணெய் என்றழைக்கப்படும் புன்னை எண்ணெய் ஒரு சிறந்த வலி நிவாரணி, வாய்வு நீக்கி, புண்கள், கொப்புளங்கள் போன்றவற்றைக் குணப்படுத்தக் கூடியது.

பாலியல் நோய்களுக்கும் பூச்சாறு நல்ல மருந்தாகும். குறிப்பாக ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளில் உள்ள புண்களிலும் வீங்கிய கண்களிலும் போடப்பட்டால் வீக்கம் நீங்கும். குஷ்ட நோய் உள்ளவர்களுக்குப் புன்னை எண்ணெய் தசை வழியாகச் செலுத்தப்பட்டால் குஷ்ட நோய் வலி நீங்கும். புன்னை எண்ணெய்க்கு அதிக உள்நாட்டு பயன்பாடு மட்டுமின்றி ஏற்றுமதி வாய்ப்புகள் இருந்தாலும், இதற்கான பெரிய முயற்சிகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.

(அடுத்த வாரம்: நெய்தலும் புன்னையும்)

- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்

தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x