Published : 27 Feb 2016 11:43 AM
Last Updated : 27 Feb 2016 11:43 AM

கிழக்கில் விரியும் கிளைகள் 19: உண்மையான கடம்ப மரம்?

சங்க இலக்கியத்தில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ள கடம்ப மரங்கள் அடர்ந்த கடம்பவனத்தை மீள்உருவாக்கம் செய்ய வேண்டும் என்ற ஒரு முயற்சி அண்மையில் மதுரை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், பண்டைக் காலம் முதல் நம்மிடம் இருந்து வரும் கடம்ப மரம் எது என்பது குறித்துப் பெரும் குழப்பம் நிலவுகிறது. கிழக்கு மலை தொடர் தாவரங்களில் முக்கியமானது கடம்பு.

சங்க இலக்கியத்தில்

தமிழரின் முதற் பெரும் கடவுளாகக் கருதப்படும் முருகனோடு பொதுவாகத் தொடர்புபடுத்தப்படும் கடம்ப மரம் பற்றிய குறிப்புகள் 27 சங்க இலக்கியப் பாடல்களில் மட்டுமின்றி, சங்கம் மருவிய பக்தி கால இலக்கியங்களிலும் நிறைய உள்ளன. கடம்பு, வெண்கடம்பு, செங்கடம்பு, கடப்பம், நீர்க்கடம்பு போன்ற பெயர்களில் சுட்டப்பட்ட மரமும் கடம்ப மரம்தான் என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பெயர்கள் 44 சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன.

‘இந்துளம் மரா கதம்பம் இயைந்த நீபம் கடம்பாம்’ (இவற்றில் மராவை தவிர மற்றவை வடமொழிச் சொற்கள்) என்று சூடாமணி நிகண்டும், ‘மராவெண் கடம்பின் பெயராகும்மே’ என்று சேந்தன் திவாகரம் குறிப்பிடுவதையும், சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதியபோது அடியார்க்கு நல்லார் ‘மரவம்’ என்பதற்கு வெண்கடம்பு என்றும் சிறுபாணாற்றுப் படைக்கு உரை எழுதியபோது ‘மராஅம்’ என்பதற்குச் செங்கடம்பு என்றும் உரை எழுதியதையும் சொல்லலாம்.

செங்கடம்பும் வெண்கடம்பும் மரா அம் அல்லது மரவம் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்டன என்றாலும், சங்க இலக்கியத்தில் இந்தப் பொதுப் பெயர் வெண்கடம்பைத்தான் குறிக்கும் என்றும், கடம்பு என்ற சொல் செங்கடம்பைத்தான் குறிக்கும் என்றும் தமிழறிஞர் கோவை இளஞ்சேரன் குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழிலக்கியத்தில் குறிப்பிடப்படும் கடம்பு, மராஅம் ஆகிய இரண்டும் ஒன்றே என்ற உடன்பாடு தமிழறிஞர்களிடையே இல்லை என்பது தெளிவு.

எது உண்மையான கடம்பு?

இன்றும்கூட எது உண்மையான கடம்ப மரம் என்பதில் ஒரு உடன்பாடான கருத்து இல்லை. தமிழறிஞர்களிடையே நிலவிய இதே குழப்பம் தாவரவியல் அறிஞர்களிடமும் உள்ளது. ஐந்து வெவ்வேறு தாவரங்களை கடம்ப மரத்துடன் தொடர்புபடுத்துகின்றனர்: மித்ரகைனா பார்விஃபோலியா (Mitragyna parvifolia) (தாவரவியல் நூல்களில் காணப்படும் தமிழ்ப் பெயர்கள்: வெண்கடம்பு, நீர்க்கடம்பு, சின்னக் கடம்பு, நீலிக்கடம்பு) (படம் 1), நியோலமார்க்கியா கடம்பா (Neolamarckia Cadamba) (செங்கடம்பு, வெள்ளைக்கடம்பு, கடம்பு) (படம் 2), ஹால்டினா கார்டிஃபோலியா (Haldina Cordifolia) (மஞ்சக்கடம்பு) (படம் 3), பாரிங்டோனியா அக்யுடாங்குலா (Barringtonia acutangula) (செங்கடம்பு, கடம்பு, நீர்க்கடம்பு) (படம் 4), ஹைமினோடிக்டியான் ஒரிக்சென்சே (Hymenodictyon Orixense) (வெள்ளைக்கடம்பு, நீர்க்கடம்பு) (படம் 5). மேலும், தாவரவியல் அறிஞர்கள் மராமரத்துடன் அரச மரத்தையும், சால் (Shorea robusta) என்ற மரத்தையும் தொடர்புபடுத்துகின்றனர். இவற்றில் எது சரியான கடம்ப மரம் என்பதை நிர்ணயம் செய்வது மிக முக்கியமானது மட்டுமின்றி, மிக அவசரமானதும்கூட.

(அடுத்த வாரம்: வெண்கடம்பும் செங்கடம்பும் வேறு வேறா?)
- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x