Published : 08 Apr 2017 10:27 AM
Last Updated : 08 Apr 2017 10:27 AM

காட்டுயிர் எழுத்தாளரின் தார்மீகக் கோபம்

இரண்டு மாதங்களுக்கு முன் கோயம்புத்தூரில் பறவைகள் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். பறவை ஆர்வலர்களால் அரங்கம் நிரம்பி வழிந்தது. அதில் கணிசமானவர்கள் மாணவர்கள். மகிழ்ச்சியான தருணம். அதேபோல நெடுவாசல் எதிர்ப்பைப் பற்றி படிக்கும்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது. காட்டுயிர் ஆர்வம், சுற்றுச்சூழல் பற்றிய கரிசனம் மேட்டுக்குடியினருக்கே உரித்தானது என்ற மாயை பரவலாக இருந்தது. பத்திரிகைகள் இந்தத் தளத்தைக் கண்டுகொள்ளவேயில்லை.

இன்று இந்நிலை மாறி வருவதைக் காண முடிகிறது. இந்த விழிப்புணர்வுக்கு ஒரு காரணம், சில முன்னோடிகள் இந்தப் பொருட்களைப் பற்றி எளிமையாக, விளங்கும்படி தமிழில் தொடர்ந்து எழுதியது. அதில் ஒருவர் மேட்டுப்பாளையம் வாசியான முகமது அலி. சுற்றுச்சூழல் இலக்கியத்தில் அவர் ஒரு முன்னத்தி ஏர்.

கவனம் பெறாத பங்களிப்பு

1980-ல் கல்லாற்றிலிருந்து பரலியாறுவரை ஒரு காட்டுப் பாதையில் - சாலை போடாத காலத்தில் இருந்த குதிரைப் பாதை (mule track) வழியாக அவர் எங்களைக் கூட்டிச் சென்றார். நான், என் மனைவி, எங்கள் இரு பிள்ளைகள், அவர்களது நண்பர்கள் இருவர் என ஒரு சிறு கூட்டம். மறக்க முடியாத நடை. வழியில் சோலைப்பாடி பறவை ஒன்று பாடிக்கொண்டிருந்ததை பார்த்தோம், கேட்டோம். பரலியாறு வந்து தேநீர் குடித்துவிட்டு பஸ் பிடித்து, மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தோம். அன்றிலிருந்து இன்றுவரை அவரது எழுத்துகளை, நடவடிக்கைகளை நான் கவனித்துவருகிறேன். சமரசமின்றி தனது கருத்துகளை மேடையிலும் பத்திரிகைகளிலும் முன்வைப்பார்.

காட்டுயிர்க்கென்று தமிழில் முதன்முதலாக பத்திரிகை நடத்தியவர் என்ற சிறப்பைப் பெற்றவர் அலி. காட்டுயிர் பற்றிய சில முக்கியமான கட்டுரைகளை அந்த இதழ் வெளியிட்டிருக்கிறது. பின்னர், பறவையியல் நிபுணர் சாலிம் அலி (1990) என்ற நூலுடன் தொடங்கி பல்வேறு நூல்களுடன் முப்பத்தியைந்து ஆண்டுகளாக இயற்கை வரலாறு தளத்தில் முகமது அலி இயங்கிவருகிறார்.

எனினும் அவரது எழுத்துகள் உரிய கவனத்தைப் பெறவில்லை என்றே நினைக்கிறேன். இதற்கு ஒரு காரணம் கட்டுரை இலக்கியம், தற்காலத் தமிழ் இலக்கியத்தில் அதிக கவனம் பெறுவதில்லை. எழுத்தாளர் என்றால் பொதுவாக புனைவிலக்கிய கர்த்தாக்கள், கவிஞர்கள் இவர்களைப் பற்றித்தான் பேச்சு. கட்டுரைகளில் இருக்கும் விவரங்களுக்கு இலக்கிய உலகில் அவ்வளவு வரவேற்பு இருந்ததில்லை. அதிலும் சுற்றுச்சூழல், இயற்கை பற்றி யாரும் கண்டு கொள்வதேயில்லை.

அதுமட்டுமல்ல. நம் நாட்டில் காடு, அதன் உயிரினங்கள், சுற்றுச்சூழல் இவை பற்றிய அக்கறையை - தமிழிலும் ஆங்கிலத்திலும் - முதலில் எழுத்து மூலம் வெளிப்படுத்தியவர்கள் எல்லாரும் ஆர்வலர்களே. தொழில்முறை உயிரியலாளர்கள் அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்த வரிசையில் வந்தவர்தான் முகமது அலி. இன்று தமிழ்நாட்டில் காட்டுயிர் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஏறக்குறைய எல்லாருமே – ப. ஜெகநாதன் போன்ற ஒரு சிலரைத் தவிர- ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு காட்டுயிரியல் படித்தவர்களே. இவர்களுக்குத் தமிழில் ஒரு சொல்லாடல் உருவாவதில் ஆர்வமில்லை.

கூர்மையான ஆயுதம்

முகமது அலி, ஒரு வணங்காமுடி. தவறு என்றால் யாரென்றும் பார்க்காமல் சுட்டிக்காட்டுவார். இவரது பார்வைக்குத் தப்பிய தமிழ் எழுத்தாளர்களே கிடையாது என்றுகூடச் சொல்லலாம். இயற்கை, காட்டுயிர் பற்றிப் பேசும்போது நம் எழுத்தாளர்களின் அறியாமை எவ்வாறு வெளிப்படுகிறது, எப்படி அவர்கள் இயற்கையிலிருந்து அந்நியப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் இவரது ‘நெருப்புக்குழியில் குருவி’ (2000) என்ற நூலின் மையக்கருத்து. ஜெயகாந்தன் முதல் பொன்னீலன்வரை சகல எழுத்தாளர்களும் அவரது விமர்சனத்துக்கு ஆளாயிருக்கிறார்கள், சுஜாதாவுக்கென்று ஒரு தனிக் கட்டுரை. அவரது நண்பராயினும் என்னையும் அவர் விட்டு வைக்கவில்லை. ‘மணலில் தலையைப் புதைத்துக்கொள்ளும் நெருப்புக்கோழி போல’ என்று ஒரு கட்டுரையில் நான் எழுதியதற்கு வாரிவிட்டார். என் தவறுதான்.

பொள்ளாச்சியிலுள்ள மருத்துவர் ஆல்வா நடத்தும் இயற்கை வரலாறு அறக்கட்டளை , காட்டுயிர் பத்திரிகையை வெளியிடுவதுடன் முகமது அலியின் பல நூல்களை வெளியிட்டிருக்கிறது. அவற்றில் கவனிக்கப்படவேண்டிய நூல், நான் அடிக்கடி புரட்டுவது ‘இயற்கை: செய்திகள் சிந்தனைகள்’ (2007) என்ற நூல். இதில் இருக்கும் உயிரினங்களின் பெயர்கள் , சொற்கள் பகுதியை சிறப்பாகக் குறிப்பிட வேண்டும்.

எடுத்துக்காட்டாக Natural selection - இயற்கைத் தெரிவு, mimicry -ஒப்புப்போலி, megapode - தீவுக்கோழி என்பது போன்ற பல சொற்கள். Humming bird என்னும் அமெரிக்கப் பறவையை குறிக்க , ரீங்காரச்சிட்டு என்ற எழிலார்ந்த சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். இப்படித்தான் காட்டுயிர் எழுத்து வளம் பெற முடியும். ‘நமக்கென்ன ஆயிற்று’ என்று வாளாவிருக்காமல், பல அரிய உண்மைகளை முகமது அலி துணிந்து சுட்டிக்காட்டுகிறார். ஜிம் கார்பெட், கென்னத் ஆண்டெர்சன் போன்ற வேட்டையாடிகள் எழுதியதில் 90% கட்டுக்கதை என்கிறார்.

பறவைகள், பாலூட்டிகள்

முகமது அலியின் ‘அதோ அந்தப் பறவை போல’ நூல் (2012) பறவையியலுக்கு அருமையான அறிமுகம். அதிலும் பறவையை கவனித்தல் தமிழ் மக்களிடையே வேகமாகப் பரவிவரும் இந்த வேளையில் வரவேற்க வேண்டிய நூல். அதேபோல, இவர் தொகுத்து அளித்துள்ள ‘பாலூட்டிகளின் கதைகள்’ (2014) மற்றொரு அருமையான நூல். அதில் எழுதியுள்ள கவரி மா, ஒரு மானல்ல என்பது ஒரு சுவையான கட்டுரை.

அவரது எழுத்திலும் பேச்சிலும் ஓர் தார்மீகக் கோபம் உயிரோட்டமாக இருப்பதை உணர முடியும். இந்தியர்களின் அருவருக்கத்தக்க பழக்கமான எச்சில் துப்புவது பற்றி அவர் கோபத்துடன் எழுதிய ஒரு கட்டுரை நினைவுக்கு வருகிறது. அவரது பங்களிப்பு சரியாக கவனிக்கப்படவில்லை என்றாலும், அதன் பாதிப்பை இன்றைய தமிழ் எழுத்துகளில் நாம் உணர முடிகிறது.

கட்டுரையாளர்,
மூத்த காட்டுயிர் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x