Published : 07 Mar 2015 01:20 PM
Last Updated : 07 Mar 2015 01:20 PM

"காடுகள் இருக்கின்றன... அங்கே உயிர் இல்லை!"

பிரபல செய்தியாளர் பர்கா தத்தைப் பலருக்கும் தெரிந்திருக்கும். அவருடைய சகோதரியான பஹர் தத்தைப் பற்றி சிலருக்கே தெரியும். ஆனால், பர்காவைவிட பஹர் தத்தின் ஊடகச் செயல்பாடுகள் மிக முக்கியமானவை.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த செய்திகள், விவாதங்களை 'பிரைம் டைம் ஷோ' ஆக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. சி.என்.என்-ஐ.பி.என். தொலைக்காட்சியில் சுற்றுச்சூழல் செய்தியாளராக இருக்கிறார் பஹர் தத்.

மாற்றத்தின் வித்தகி

ஊடக உலகில் சுற்றுச்சூழல் குறித்த விஷயங்கள் செய்திக்கான களமாக இல்லாமல், ‘ஃபீச்சர் ஸ்டோரீஸ்' என்ற பொழுதுபோக்கு அம்சமாகப் பார்க்கும் பொதுப் பார்வை உண்டு.

இத்தகைய செய்திகளை ஆண் செய்தியாளர்களேகூட ஒதுக்கும் போக்கு பரவலாக இருந்த சூழ்நிலையில், தொலைக்காட்சி ஊடகத்தில் ‘சுற்றுச்சூழல் செய்திகளை' பரபரப்பான விஷயமாக மாற்றி, பலரின் கவனத்தை ஈர்த்த பெண் செய்தியாளர்தான் பஹர்.

அதனால் பல அரசியல்வாதிகளின் எதிர்ப்பையும் அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. அவர் வெளியிட்ட செய்திகளைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் சட்டங்களை மீறிய மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நீதிமன்றங்கள் தடை விதித்திருக்கின்றன.

தன் பணிகளுக்காக ‘கிரீன் ஆஸ்கர்' உட்படப் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள அவர், தன் செய்தி சேகரிப்பு அனுபவங்களை ‘கிரீன் வார்ஸ்' என்ற புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் சென்னை வந்திருந்தவரிடம் உரையாடியதில் இருந்து...

எல்லா நதிகளையும் காப்போம்

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் திட்டமான கங்கையைத் தூய்மையாக்குவதில், எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் என்னுடைய கேள்வி, ஏன் கங்கையை மட்டும் தூய்மைப்படுத்த நினைக்கிறீர்கள் என்பதுதான்.

இன்று நாட்டில் உள்ள பெரும்பாலான ஆறுகள் அணை கட்டி தடுக்கப்பட்டிருக்கின்றன. எல்லா ஆறுகளுமே அளவுக்கு அதிகமாகச் சுரண்டப்பட்டிருக்கின்றன. எனவே, கங்கையோடு இதர ஆறுகளையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் நமக்குண்டு.

இன்னொரு திட்டம், நதிகளை இணைப்பது. அது சுற்றுச்சூழலுக்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ளவில்லை. ஒவ்வொரு நதிக்கும் தனித்துவமான பண்பு உண்டு. அதைச் சிதைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நான் அந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறேன்.

சுரண்டப்படும் மக்கள்

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு சுரங்கம் உள்ளிட்ட பல விஷயங்களிலும் சுற்றுச்சூழல் சட்டங்கள் தலைகீழாக மாற்றப்பட்டு வருகின்றன. வளர்ச்சி என்ற அரசின் மாயவலையில் அதிகம் சிக்கியிருப்பது பழங்குடிகள்தான். ஜார்க்கண்ட், ஒடிசா போன்ற மாநிலங்கள் அதிகளவு கனிம வளத்தைக் கொண்டிருப்பது உண்மைதான்.

அங்குச் சுரங்கம் மூலம் மக்களுக்கு வளர்ச்சி கிடைக்கும் என்று சொன்னால், இந்நேரம் அந்த மாநிலங்கள் எல்லாம் வசதி படைத்த மாநிலங்களாக மாறியிருக்க வேண்டுமே? ஆனால் அதற்கு மாறாக, மனித மேம்பாட்டுத் தர வரிசையில், அந்த மாநிலங்கள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதை எப்படிப் புரிந்துகொள்வது?

பாமாயில் வேண்டாம்

அதேபோல, இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் பயன்பாட்டை நாம் தவிர்க்க வேண்டும். இந்தோனேசியக் காடுகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். உலகிலேயே மூன்றாவது மிகப் பெரிய காடுகளான இந்தோனேசியக் காடுகள் 12 கோடி ஹெக்டேர் பரப்பளவு கொண்டவை. சுமார் 90 சதவீதம் ஓரங் ஊத்தான் குரங்குகள் இந்தக் காடுகளில் வசிக்கின்றன. எஞ்சிய 10 சதவீதம் மலேசியாவின் சாபா, சரவாக் காடுகளில் உள்ளன.

பாமாயில் தேவைக்காக ஓரங் ஊத்தானின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் இந்தோனேசியக் காடுகள் முழுவதும் பரவியிருந்த ஓரங் ஊத்தான்கள், தற்போது 60 ஆயிரமே இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 5 ஆயிரம் ஓரங் ஊத்தான்கள் அழிந்துவருகின்றன.

இதைத் தடுக்க வழி இருக்கிறது. மழைக்காடுகளில் இருந்தோ அல்லது ஓரங் ஊத்தான் வசிக்கும் காடுகளில் இருந்தோ உற்பத்தி செய்யப்படும் பாமாயிலைப் பயன்படுத்தாமல் விலக்க வேண்டும். ‘இந்தோனேசியக் காடுகளில் இருந்து தயாரிக்கப்படவில்லை’ என்று சான்று பெற்ற பாமாயில் உற்பத்தி பிரிட்டனில் வெற்றி பெற்றிருக்கிறது. அது சரியாக நடைபெறும்போது, ஏன் இந்தியாவிலும் அதை நடைமுறைப் படுத்தக் கூடாது.

நாம் பெறும் விழிப்புணர்வு, தொடர் செயல்பாடுகள் மூலம்தான் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். அதுதான் நம் எதிர்காலத்தை உத்தர வாதப்படுத்தும் என்கிறார். நிஜம்தானே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x