Published : 21 Feb 2015 02:49 PM
Last Updated : 21 Feb 2015 02:49 PM

காடுகளின் ரகசியம் பகிரும் கேமரா காதலி

ஆனைமலை புலிகள் சரணாலயத்தின் ஆழியாறு பகுதியில் இருந்து வால்பாறைக்குப் போய்க் கொண்டிருந்தார் பொள்ளாச்சியைச் சேர்ந்த கீர்த்தனா பாலாஜி. ஆழியாறு அணைப் பகுதியை அவருடைய கார் கடப்பதற்கு முன், அணையின் கைப்பிடிச் சுவருக்கு அருகே மக்கள் கூட்டம், ஏதோ சண்டைக் காட்சியைப் பார்ப்பது போல் களேபரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.

கீர்த்தனா காரை விட்டு இறங்கியபோது, அவருக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஒரு குட்டி யானையைக் கூட்டத்திலிருந்து பிரித்து, வேட்டையாட முயற்சித்துக் கொண்டிருந்தது 20 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு செந்நாய்க் கூட்டம்.

அரிய தருணம்

மேற்குத் தொடர்ச்சி மலை தொடர் காடுகளில் இருக்கும் செந்நாய்கள் புலி, சிறுத்தையைப் போலவே வேட்டையாடி இரையை உண்பவை. ஒரே வித்தியாசம் கூட்டமாக வேட்டையாடும். யானைகளும் மந்தையாக வசிப்பவைதான்.

அன்றைக்கு 5 யானைகள் பாதுகாப்பு அரண் அமைத்துக் குட்டியைப் பாதுகாத்தன. இரண்டு யானைகள் சத்தமாகப் பிளிறிக் கொண்டே செந்நாய்களை விரட்டிவிட்டன. இதைச் சண்டை என்று வர்ணிப்பது தவறு. இயற்கைக் கதாபாத்திரங்கள் இடையே நிகழும் உரசல் என்று சொல்லலாம்.

ஒவ்வொரு கணமும் அடுத்து என்ன நடக்கும் என்பது உறுதியற்ற இயற்கை சூழலில், இது போன்ற அரிய காட்சிகளை எல்லோராலும் பார்த்துவிட முடியாது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்த இந்த அரிய சம்பவத்தைத் தன் கேமரா கண்களில் நிரந்தரப் பதிவாக்கினார் பொள்ளாச்சியைச் சேர்ந்த கீர்த்தனா பாலாஜி.

தேசிய கவுரவம்

வெளியானபோது பாராட்டைப் பெற்ற இந்த அரிய ஒளிப்படம், தேசிய அளவில் சிறந்த ஒளிப்படத்துக்கான சாஞ்சுவரி ஏசியா 2-வது விருதைப் பெற்றுள்ளது.

அபூர்வமான இந்த ஒளிப்படத்தைத் தேசிய அளவில் சிறந்த படமாகத் தேர்ந்தெடுத்தவர்கள் நேஷனல் ஜியாகிரஃபிக் போட்டோகிராபர் ஸ்டீவ் வின்டரும், காட்டுயிர் ஆவணப்பட இயக்குநர் சேகர் தத்தாத்ரியும்.

காட்டுயிர் ஒளிப்படத்துக்குத் தேசிய அளவில் விருது பெற்றுள்ள முதல் தமிழ்ப் பெண் கீர்த்தனா. பொள்ளாச்சியில் டங்க்ஸ்டன் கிரியேட்டிவ் என்ற நிறுவனத்தை நடத்திவரும் இவர், கடந்த ஒரு வருஷமாகத்தான் காட்டுயிர் ஒளிப்படங்கள் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

இயற்கையின் தாலாட்டு

"என்னுடைய ஃபிரெண்ட்ஸும் அப்பா-அம்மாவும் எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவ். நான் செய்யும் எல்லா விஷயத்தையும் பாராட்டோட வரவேற்பாங்க. அதுதான் விருதுகளைவிடவும் பெரிய பூஸ்ட்" என்று சொல்லும் கீர்த்தனா, மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலுள்ள ஆனைமலை அடிவாரத்தில் இயற்கை தாலாட்டும் பொள்ளாச்சியில் வளர்ந்தவர்.

"ஆனைமலை புலிகள் சரணாலயத்தில்தான் காட்டுயிர்கள் மீது எனக்குக் காதல் பிறந்துச்சு. ரொம்ப சின்ன வயசிலேயே, அது என் கண்ணைத் திறந்துச்சு. வாழ்க்கையை வெறுமனே வாழாமல், ரசித்து அனுபவித்து வாழக் கற்றுக் கொடுத்துச்சு. காட்டுயிர்களையும் இயற்கையையும் ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற உத்வேகத்தை மனதில் உருவாக்குச்சு.

ஆனைமலை காட்டுக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டாலே, பாட்டி வீட்டுக்குப் போன மாதிரி எல்லாக் கவலைகளையும் கழற்றி வைத்துவிட்டு மனசு உற்சாகமாயிடும். இன்னைக்கு அதே ஆனைமலைதான் எனக்குப் பல விருதுகளையும் பெற்றுத் தந்திருக்கு" என்று உற்சாகம் பகிர்கிறார்.

யானை மந்தை - செந்நாய்க் கூட்டம் படத்துக்குப் பெங்களூரு டார்ட்டர் போட்டோகிராபி விருதும், பெங்களூரு நேச்சர் இன் ஃபோகஸ் விருதும் கிடைத்திருக்கின்றன

காட்டு ஞாபகங்கள்

விருது கிடைச்சதைப் போலவே, வேறு காரணங்களுக்காகவும் போன வருஷத்தை என்னால மறக்க முடியாது. காடு சார்ந்த என்னோட அனுபவங்கள்ல மறக்க முடியாத ஞாபகங்கள் கிடைச்சது போன வருஷம்தான் என்கிறார் கீர்த்தனா.

"ஆனைமலை காட்டுப் பகுதியில் அவ்ளோ ஈசியா புலியையோ, சிறுத்தையையோ பார்த்துவிட முடியாது. போன வருஷம்தான் முதன் முதலா சிறுத்தையைப் பார்த்தேன். அப்புறம் அழகுல அடிச்சுக்கவே முடியாத தீக்காக்கைங்கிற (மலபார் ட்ரோகன்) பறவையைப் பார்த்தேன்.

வால்பாறைல ஒரு சில மணி நேர இடைவெளில 24 இருவாச்சிகளைப் பார்த்தேன். ஆனா, என் வாழ்க்கைல எப்பவுமே மறக்க முடியாத அனுபவம் யானை மந்தை - செந்நாய் கூட்டத்தோட மோதல்தான்.

காடு காப்போம்

அதேநேரம் ஒயில்டு லைஃப் போட்டோகிராஃபிங்கிறது அழகான படத்தைக் கிளிக் பண்றது மட்டுமில்ல. அதிவேகமாக விரையும் வாகனங்களால காட்டுக்குள்ள அடிபட்ட விலங்கோட படத்தையும், காட்டுக்குள்ள மக்கள் பொறுப்பில்லாம நடந்துக்கிறதையும் சுட்டிக்காட்டுறதுதான். இது போன்ற ஒரு படத்தைப் பாக்குறவங்க, உயிரினங்களை நாம ஏன் தொந்தரவு பண்ணக் கூடாதுங்கிறதை புரிஞ்சுக்குவாங்க.

காடு உயிரினங்களோட வீடு. அதை நாமத் தொந்தரவு செய்யக் கூடாது.

நாமக் காட்டுக்குப் போகலாம். போய்ட்டு வந்த பின்னாடி, அந்த இடம் முன்னாடி எப்படி இருந்துச்சோ அதே மாதிரி இருக்கணும். நம்மோட அனுபவங்களும் சந்தோஷமும்தான் அங்கப் போய்ட்டு வந்ததுக்கு அடையாளமா இருக்கணும்.

அதுதான் அடுத்து வரப் போறவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும்.

இயற்கையைப் பாதுகாக்க ஒருத்தர் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளரா இருக்கணுங்கிற அவசியமில்லை. உயிரினங்கள், தாவரங்கள் மீதான ஆர்வம் இயற்கையைப் பாதுகாக் கிறதுக்குத் தொடக்கமா அமையும். அப்படித் தெரிஞ்சுக்கிறது மூலமா அதைக் காப்பாத்த, பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் நமக்குக் கூடுதலாகிடும்.

காடுகள்ல மிச்சம் இருக்கிற இயற்கையையும் உயிரினங்களையும் பாதுகாக்க நாம எல்லோரும் களம் இறங்க வேண்டிய நேரம் இது" உத்வேகத்துடன் முடிக்கிறார் கீர்த்தனா.

பொள்ளாச்சியின் பெருமை

'பொள்ளாச்சி பாபிரஸ்' என்ற சுற்றுலா காலாண்டு இதழைப் பிரவிண் சண்முகானந்தத்துடன் இணைந்து நடத்தி வருகிறார் கீர்த்தனா. பொள்ளாச்சி பகுதியின் சுற்றுச்சூழல், பண்பாடு, பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் ஆங்கிலத்தில் வெளியாகிவருகிறது இந்த இதழ்.

நாம் இருக்கும் இடத்தின் இயற்கை எழிலை அனுபவிப்பதுடன், அதைப் பாதுகாக்கவும் வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த இதழின் நோக்கம். "ஊர் சுத்தி பார்க்கும்போதும், குறிப்பா காடுகளுக்குப் போகும்போது எவ்வளவு பொறுப்பா நடந்துக்கணுங்கிறதையும், இயற்கையை-காடுகளை நாம எப்படி இன்னும் சிறப்பா அனுபவிக்கலாங்கிறதையும் பொள்ளாச்சி பாபிரஸ் புரிய வைக்கும் " என்கிறார் கீர்த்தனா.

தொடர்புக்கு: pollachipapyrus@gmail.com

கீர்த்தனா பாலாஜி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x