Published : 17 Sep 2016 11:42 AM
Last Updated : 17 Sep 2016 11:42 AM

கருப்புடா!

ஒரு காட்டுயிர் ஒளிப்படக் கலைஞனாக, கருஞ்சிறுத்தையை படம் எடுப்பது என்பது எப்போதுமே என்னுடைய கனவாக இருந்துவந்தது. ஏனென்றால், காட்டுயிர்களில் கருஞ்சிறுத்தை அரிய உயிரினம். காட்டின் பின்னணியில் தனித்துத் தெரியும் அதன் அழகு, நம் மூச்சையே ஒரு கணம் நிறுத்திவிடக் கூடியது.

அரிய உயிரினங்களின் கூடுகை

பொதுவாகப் பருவமழைக் காலத்தின்போது காட்டுயிர்கள் அடர்காட்டுப் பகுதிக்குள் நகர்ந்துவிடும். காட்டுக்குப் போனாலும், பெரிதாக எந்த உயிரினத்தையும் பார்க்க முடியாது என்பதால், இந்தக் காலத்தில் காட்டுயிர் ஆர்வலர்கள் காட்டை நாடுவதில்லை. ஆனால், சமீபத்திய மழைக் காலத்தில் நண்பர்களுடன் கர்நாடகத்தில் உள்ள கபினிக்கு நான் சென்றிருந்தேன்.

இந்தக் காட்டின் வடமேற்குப் பகுதி தேக்குமரம், கருங்காலி (ரோஸ்வுட்) மரங்கள் சூழ்ந்து புலிகள், சிறுத்தைகள், யானைகளைக் கொண்டிருக்கிறது. இந்தக் காட்டில் 270-க்கும் மேற்பட்ட வகைப் பறவைகள் உள்ளன. இவற்றில் அழியும் நிலையில் உள்ள வெண்முதுகுப் பாறு (பிணந்தின்னிக் கழுகு) தவிர, புள்ளிப் பருந்து, நீலகிரி காட்டுப்புறா போன்ற அரிய பறவைகளும் இங்கே உள்ளன.

நிறமிகளின் விளையாட்டு

இந்தக் காடுகளில் அரிதினும் அரிதான கருஞ்சிறுத்தைகளும் வசிக்கின்றன. பொதுவாக மஞ்சள் கலந்த பொன்னிற மயிர்ப்போர்வையில் கருவளையங்கள் கொண்டவையாகச் சிறுத்தைகள் உள்ளன. கருஞ்சிறுத்தைகளின் உடல் முழுக்கவும் கறுப்பு மயிர்ப்போர்வையால் போர்த்தப் பட்டிருப்பது போலிருந்தாலும், அந்த மயிர்ப்போர்வையிலும் ஆங்காங்கே கருவளையங்கள் தென்படும். உன்னிப்பாகக் கவனிக்கும் போது இதைப் பார்க்கலாம். மயிர்ப் போர்வையில் மஞ்சளுக்குப் பதிலாகக் கறுப்பு நிறமிகள் அதிகரிப்பதால், வழக்கமான சிறுத்தைகளுக்கு மாறாக, இவை கருஞ்சிறுத்தைகளாக மாறிவிடுகின்றன.

கருஞ்சிறுத்தைகள் அடர்ந்த மழைக்காடுகளில் சூரியஒளி குறைந்த உட்பகுதிகளில்தான் வசிக்கின்றன. வசிக்கும் இயற்கை சூழலுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்வதற்கு வசதியாக, இந்தக் கறுப்பு மயிர்ப்போர்வை அவற்றுக்கு அமைந்திருக்கிறது. புள்ளிமான்கள், முயல்கள், சில மந்தி வகைகள் இதற்கு உணவாகின்றன.

அதிர்ஷ்டத்தைத் தாண்டி

காட்டில் கருஞ்சிறுத்தைகளைப் பார்ப்பதற்கு அதிர்ஷ்டம் தேவை என்பார்கள். இது எத்தனை தூரம் உண்மை என்பதைக் கருஞ் சிறுத்தையை தேடிப் போன போதுதான் உணர முடிந்தது. அதேநேரம் அதிர்ஷ்டத்தைவிட அறிவும் திறமையும் அவசியம் எனலாம்.

ஏனென்றால், காடுகளில் காட்டுயிர்களை ஒளிப்படம் எடுப்பது சினிமாவில் வருவதைப் போல எளிதானதல்ல. அடர்க்காடுகளில் கிளைகளுக்கு இடையேயும், மரங் களுக்கு இடையேயும் பல நாட்கள் காத்திருந்தும்கூட, உயிரினங்களைக் கூடப் பார்க்க முடியாமல் ஏமாற்றத் துடன் திரும்பிய நாட்கள் உண்டு.

நிறைவேறிய கனவு

இந்த ஆண்டு ஜூன் ஐந்தாம் தேதி (உலகச் சுற்றுச்சூழல் நாள்) வேறொரு வகையிலும் முக்கியத்துவம் பெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கபினி காட்டை இருள் கவ்வத் தொடங்கியது. பயம், மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு எனக் கலவையான உணர்வு மனதில் நிறைந்து கிடந்தது. அதற்கு விடை கொடுப்பது போல, நாங்கள் தேடிச் சென்ற பொக்கிஷம் எங்களுக்குத் தரிசனம் தந்தது.

தூரத்து மரத்தின் கிளையில் களைப்பாலோ, உண்ட மயக்கத்தாலோ உறங்கிக்கொண்டிருந்த கருஞ் சிறுத்தை கண்ணில் பட்டவுடன் என் கண்களால் மட்டுமில்லாமல், இயந்திரக் கண்கள் மூலமாகவும் நிரந்தரப் பதிவு செய்துகொண்டேன். ஒரு புறம் மனம் மகிழ்ச்சியில் துள்ள, மறுபுறம் சின்ன பயமும் எட்டிப் பார்த்தது.

அந்தக் கருஞ்சிறுத்தை திடீரெனத் தலையைத் திருப்பியபோது, என் ரோமங்கள் குத்திட்டு நின்றன. காற்றின் ஒலியும் மரங்களின் அதிர்வும் அதன் நித்திரையைக் கலைத்திருக்கலாம். நாங்கள் சிலை போல உறைந்து நின்ற அந்த விநாடியில், சிறுத்தையும் எங்களைப் பார்த்தது.

உணர்வு தந்த மழை

கரிய வெல்வெட் போன்ற அதன் மயிர்ப்போர்வையும், தங்கம் போன்று தகித்த கண்களும் என்னைப் பிடித்து இழுத்தன. ஒரு கணம்தான், சட்டென்று தன் இடத்தை அது மாற்றிக்கொண்டது. அதைப் பார்த்த அந்த அரிய தருணம், என் வாழ்க்கையில் மீண்டும் கிடைக்காத ஒன்று. அந்த ஆச்சரியம் இன்னும் மனதை விட்டு அகலவில்லை.

சிலையாக நின்ற எங்களை, சில மழைத் துளிகள் நிஜ உலகத்துக்கு அழைத்து வந்தன. நீண்ட நாள் கனவு நிறைவேறியதைக் கொண்டாடுவதைப் போல, அந்த மழை அமைந்திருந்தது.

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்பட ஆர்வலர்
தொடர்புக்கு: bala.1211@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x