Published : 03 Jun 2017 10:00 AM
Last Updated : 03 Jun 2017 10:00 AM

கடலம்மா பேசுறங் கண்ணு 05: இயற்கையோடு ஓர் உடன்படிக்கை

நிலாச் சோறூட்டிப் பிஞ்சுகளை உறங்க வைக்கும் நம் பாட்டிமார் சொல்லும் தேவதைக் கதைகளை நினைவுபடுத்துவதாக விரிகிறது கடல் பழங்குடிகளின் வாழ்க்கை. எளிமையும் சுதந்திரமும் மகிழ்ச்சியுமே ததும்பி நின்ற அந்த வாழ்க்கை, மீண்டும் கைகூடி வராதா என்னும் ஏக்கம் என் மேல் கவிகிறது.

கடலோரக் கிராமங்களினூடே நடக்கையில் தேவதைகளின் மடியின் தாலாட்டப்படும் இதமான உணர்வு மேலிடுகிறது. இனக்குழு சமூகம் எப்போதும் விழித்திருக்கிறது, தனது எல்லைகளைக் கண்காணித்தபடி காவல் செய்கிறது. சமவெளி மனிதர்கள் எவரும் அங்கு ஊடுருவல் செய்திட முடியாது. பறவைகளைப் போல, சிங்கங்களைப் போல யானைகளைப் போலத் தன் குழந்தைகளை அந்தச் சமூகம் காக்கிறது.

விருந்தில் கெட்டி

கடல் பழங்குடிச் சமூகம் எதையும் தனக்கென வைத்திராமல் பகிர்ந்தளிக்கிறது. தோலின் மீது வேலைச் சார்த்தியது போன்ற எளிமையான சிறு குடில்கள் கடலோர நன்னீர்ப் பரப்பை நோக்கியபடி அமைந்திருக்க, அந்நன்னீர்ப் பரப்புகளும் கரைக்கடலும் வழங்கிவந்த வாழ்வாதாரங்களில் நிறைவுகண்ட சமூகமாகப் பூர்வகுடி மீனவர்கள் வாழ்ந்தனர்.

இவர்களது குடில்கள் மிக எளிமையானவை. ஆனால், இக்குடில்களுக்கு வர நேர்ந்து, இவர்களின் விருந்தோம்பலை அனுபவித்துச் செல்லும் எவரும் தங்கள் வீடுகளையே மறந்துவிடுவர் என்கிறது சங்க இலக்கியம்.

எளிய வாழ்க்கை

‘சிலிர்க்கச்

சிலிர்க்க அலைகளை மறித்து

முத்தம் தரும்போதெல்லாம்

துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து

அப்பறவைக்குத் தருகிறது இக்கடல்…'

-என பிரான்சிஸ் கிருபா எழுதிச் செல்வதுபோல கடலன்னை உடனிருக்கையில், மீனவன் அடுத்த நாளைக் குறித்துக் கவலை கொள்வதில்லை.

தொல்குடி மனிதர்கள் மனதளவில் பறவைகளே. விருந்தோம்பி வளர்க்கும் இயற்கையின் இந்தப் பண்புதான் காந்தியைப் போன்றவர்களுக்கு மேம்பட்ட புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. “இயற்கை மனிதனின் தேவைக்குப் போதுமானவற்றைக் கொண்டுள்ளது; பேராசைக்கு ஈடுகொடுக்குமளவுக்கு அல்ல,” என்றார் அவர்.

மேலே விவரித்த எளிமையான நெய்தல் வாழ்க்கை நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஒன்றல்ல. நெய்தல் நிலத்துக்கு நவீனத் தொழில்நுட்பங்கள் அறிமுகமான அறுபது ஆண்டுகளுக்கு முன்புவரை நீடித்திருந்த வாழ்க்கை இதுதான்.

புனித உடன்படிக்கை

இயற்கையின் சமன்பாடுகளும் பிணைப்புகளுமே உயிர்க் கோளத்தை முன்னகர்த்திச் செல்கின்றன. சற்றொப்ப முன்னூறு கோடி ஆண்டு காலமாக இயற்கை தனதளவில் இப்பெரும் பணியில் சறுக்கலின்றி இயங்கிவந்திருக்கிறது. உயிர்களைத் தன் மடியில் தாங்கி, ஊட்டிப் பராமரிக்கும் பூமித்தாயின் இயக்கமானது திணையால், காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.

வள ஆதாரங்களுக்கும் பயன்பாட்டுக்குமிடையே தொழிற்படும் மெல்லிய சமன்பாட்டை ஆதிக்குடிகள் நாடி பிடித்துத் தெரிந்துவைத்திருந்தனர். இயற்கைக்கும் உயிர்களுக்குமிடையிலான இப்புனித உடன்படிக்கை, நாகரிக மனிதர்களால் மீறப்பட்டது.

தனி எல்லை

‘எல்லையைக் காத்தல்' என்பது இயற்கையோடு இயைந்த வாழ்க்கையின் முதன்மைக் கூறுகளில் ஒன்று. இயற்கையைக் கூர்ந்து நோக்கும் எவரும் இதைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு கடற்கரைக் கிராமத்தினுள் புதிதாக நுழையும் மனிதர் முதலில் எதிர்கொண்டேயாக வேண்டிய கேள்வி “நீங்க யாரு? என்ன விஷயமா இங்க வந்திருக்கீங்க? ஊர்த் தலைவரக் கேட்டீங்களா?” என்பதாக இருக்கும்.

பழங்குடிக் குடியிருப்பில் நுழையும் எவரையும் அந்தச் சமூகம் பல்லாயிரம் கண்கொண்டு கண்காணிக்கிறது. எந்த நிகழ்வும், எவரது வரவும் அதன் பார்வையிலிருந்து தப்பித்துவிட முடியாது. தனது நிலத்தை, புழங்குவெளியை, பண்பாட்டு வெளியை, வாழ்வாதார மூலத்தைக் கண்காணித்தபடி இருக்கிறது பழங்குடிச் சமூகம். விருந்தோம்புதல், தாராள மனப்பான்மை, அந்நியரை அரவணைத்தல் என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, தனது வெளியைப் பாதுகாப்பதில் அச்சமூகம் கொஞ்சம்கூட சமரசம் செய்துகொள்வதில்லை.

இயற்கைப் பண்பு

வாழிடத்தின் புழங்குவெளியைப் பாதுகாப்பது, இயற்கையில் எல்லா விலங்குகளிடமும் காணக் கிடைக்கும் பண்பு. சில விலங்குகளில் நாம் அதைப் பலபொழுதும் கவனித்து வியப்பதுண்டு.

எல்லைக் கற்கள், சிறு மேடுகள், சுவர்கள் எனக் காணுமிடங்களில் எல்லாம் சில துளி சிறுநீர் பெய்து தனது எல்லையை நாய் நிறுவிக்கொள்கிறது.

துணிச்சலாக வானம் பார்த்தபடி மரங்களின் உச்சாணிக் கொம்புகளில் கூடுகட்டித் தமது வான்வெளியைத் துணிவுடன் கண்காணிக்கின்றன சில காட்டுப் பறவைகள்.

குளவிக் கூட்டைக் கலைத்துக் குட்டு வாங்கிக்கொண்ட அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கக்கூடும். எறும்புகள், தேனீக்கள், கறையான்கள் என்பவற்றின் சமூக வாழ்க்கையில் எல்லைக் காவலர்கள் பொறுப்புடன் கடமையாற்றுகிறார்கள்.

குட்டி யானைகளைச் சிறு தொலைவுகூடத் தனித்துச் செல்ல, அவற்றின் தாய் யானைகள் அனுமதிப்பதில்லை. கூட்டமாக நகரும் யானைகள், தங்கள் குட்டிகளைப் பத்திரமாக நடுவில் நடத்திச் செல்கின்றன. குழுவாக வாழும் யானைக் கூட்டங்கள் குடும்பப் பொறுப்புடன் நடந்துகொள்கின்றன.

மீனினங்கள் பொதுவாகப் பெருந்திரள் பயணிகள். சில வேளைகளில் ஒரு ராட்சதப் பந்துபோல் திரண்டு சுற்றியவாறு ஓரிடத்தில் நீந்திக்கொண்டிருக்கும். இப்படி, எல்லையைக் காத்துக்கொள்ளும் இப்பழங்குடிப் பண்பு இயற்கையின் பாற்பட்டது.


(அடுத்த வாரம்: குளுவர)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x