Last Updated : 06 Feb, 2016 12:20 PM

 

Published : 06 Feb 2016 12:20 PM
Last Updated : 06 Feb 2016 12:20 PM

ஓர் அடவியின் அந்திமக் காலம்? - உலகின் அடர்ந்த காட்டுக்குள் ஒரு கேமரா

உயிரியல் ஆய்வாளர்களுக்கு இன்றுவரை புதிய புதிய உயிரினங்களை வெளிக்காட்டி, அவர்கள் அறிவுக்குச் சவால் விட்டுக் கொண்டிருக்கும் மிகப் பெரிய மழைக்காடுகளில் ஒன்றுதான் போர்னியோ.

அமேசான் காடுகளைவிடப் பழமையானவை என்பதே, போர்னியோ காட்டின் பெருமைக்குச் சான்று. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகு காடு நிறைந்த இத்தீவு இந்தோனேசியா, மலேசியா, புருணை ஆகிய நாடுகளின் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.

பல்லுயிர்ச் செழிப்புமிக்க இம்மழைக்காட்டில் காணப்படும் 222 பாலூட்டிகளில் 44 பாலூட்டிகள் ஓரிட வாழ்விகள் (Endemic). போர்னியோவைத் தவிர உலகின் வேறெந்தப் பகுதியிலும் இவற்றைக் காண முடியாது. இதுபோல் 420 வகைப் பறவைகளில் 37 வகைப் பறவைகளும், 100 நீர்நில வாழ்வன, 394 மீன் வகைகளில் 19 வகை ஓரிட வாழ்விகள். இங்குள்ள 15,000 வகைத் தாவரங்களுள் 6,000 வகைகள் இங்கு மட்டுமே காணக்கூடியவை.

ஒரு பிசின் வகை மரமொன்றில் மட்டும் ஆயிரம் வகை பூச்சியினங்கள் காணப்படுகின்றன. உலகிலேயே நீளமான பூச்சியாகப் பதிவாகியுள்ள ‘சான் மெகாஸ்டிக்’ எனப்படும் அரை மீட்டருக்கு மேல் (56.7 செ.மீ) நீளமுள்ள குச்சிப்பூச்சி இக்காட்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இக்காட்டின் தரைப் பகுதியில்தான், உலகின் மிகப் பெரிய மலரான ரஃப்ளேசியா மலர்கிறது. தொன்மைக்காலப் பூச்சியை உண்ணும் ஒரே பாலூட்டி வகையான துபையா எனும் விலங்கும் உலகில் இங்கு மட்டுமே வாழ்கிறது. ‘பிக்மி யானை’ என்றழைக்கப்படும் உலகின் குள்ளமான யானை, இங்குதான் காணப்படுகிறது. பரிணாம வளர்ச்சியில் வௌவாலுக்கு முந்தைய இனமான ‘பறக்கும் லீமர்’ என்னும் உயிரினமும், உலகில் காணப்படும் ஒரே இடம் போர்னியோதான். போர்னியோவின் பெருமைகளைப் பட்டியலிட்டால், இடம் பத்தாது.

1950-ல் முழுவதும் காடாக இருந்த, உலகிலேயே ஏராளமான தனித்தன்மை மிக்க உயிரினங்களைக் கொண்டிருந்த போர்னியோ காடுதான் இன்றைக்கு உலகிலேயே அதிவிரைவாக, கண்மூடித்தனமாக அழிக்கப்பட்டுவருகிறது.

வளம்மிக்க இந்தக் காட்டை மரம் வெட்டும் நிறுவனங்கள் சூறையாடிவருகின்றன. பல பன்னாட்டு உணவு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் பாமாயில் எண்ணெய்க்காக, இக்காட்டை அழித்து பாமாயிலைத் தரும் செம்பனைத் தோட்டங்களை உருவாக்கிவருகின்றன கார்பரேட் நிறுவனங்கள்.

போர்னியோ காட்டின் கடைசி மூச்சு எப்போது நிற்கும் என்று தெரியவில்லை. அதற்குள் தன் ஒளிப்படக் கருவிக்குள் இக்காட்டை ஒளித்து வைத்துக் கொண்டுவந்திருக்கிறார் கல்யாண் வர்மா.





போர்னியோ காட்டின் குரல்

காண்டாமிருக இருவாச்சி
(Rhinocerous Hornbill Buceros rhinoceros):

இதன் உரத்த குரலையும் இக்காட்டையும் பிரித்துப் பார்க்க முடியாது. எப்போதும் ஒரே இணையாக வாழக்கூடியவை. இதன் அலகின் மேலிருக்கும் அலகுக் கொண்டையின் நுனி காண்டாமிருகக் கொம்புபோல் மேல்நோக்கி வளைந்திருப்பது தனிச் சிறப்பு.



கொலையின் சாட்சி

வெட்டு மரங்கள் (Logs): ஒரு மழைக்காடு கொல்லப்பட்டதற்கான முதல் சாட்சி. உலகின் ஆதிக் காடுகளில் ஒன்றான போர்னியோவின் மரச் சடலங்கள் இவை. நீங்கள் அமர்ந்திருக்கும் மர நாற்காலிகூட, இறக்குமதி செய்யப்பட்ட போர்னியோ மரங்களில் செய்யப்பட்டிருக்கலாம். 1985-லிருந்து 2000 வரை ஆப்பிரிக்கக் காடுகள், அமேசான் காடுகள் இரண்டிலுமாகச் சேர்த்து வெட்டப்பட்ட மரங்களுக்கு இணையாக போர்னியோவில் காடழிப்பு நிகழ்ந்திருக்கிறது.



போர்னியோவின் சிகரம்

மெங்காரிஸ் (Mengaris Koompassia excels): போர்னியோ காட்டு மரங்களிலேயே மிகமிக உயரமான மரம், ஏறக்குறைய 280 அடி உயரம்வரை வளரக்கூடியது. இதற்கு ‘த்வாலங்’ என்ற பெயரும் உண்டு. உலகின் மிகப்பெரிதான ஆசியப் பாறைத் தேனீக்கள், கூடுகளைக் கட்ட இம்மரத்தின் உச்சியையே தேர்ந்தெடுக்கின்றன. இம்மரத்தின் அழிவையும் தடுக்க முடியவில்லை.



பார்த்து, மெதுவா

தேவாங்கு
(Slow Loris Nycticebus menagensis):

இரவாடி விலங்கான இது, பகலில் மரத்தில் ஒண்டிப் பதுங்கியிருக்கும். சற்று சோம்பல் தன்மைகொண்ட மந்தமான இவ்விலங்கு, மெதுவாகவே நகரும். தமிழக தேவாங்கிலிருந்து வேறுபட்ட சிற்றின வகையைச் சேர்ந்தது, போர்னியோவின் ஓரிடவாழ்வி (Endemic).



நண்டு தின்னி

நீளவால் குரங்கு
(Long Tailed Macaque) Macaca fascicularis):

பெயருக்கு ஏற்றவாறு நீளமான வால்களை உடைய இக்குரங்குகள் நண்டுகளை விரும்பி உண்பதால் ‘நண்டு தின்னும் குரங்கு’ என்றும் அழைக்கப்படுகிறது. குழுவாகக் காணப்படும் இக்குரங்குகள் ஒரு குழு மற்றொன்றை சந்திக்கும்போது, உரத்துக் கூச்சலிடுவதோடு சண்டையிட்டுக் கொள்ளவும் செய்யும்.

குரங்கின் மூதாதை

பேய்க்குரங்கு.
(Western Tarsier Tarsius bancanus):

மலாய் மொழியில் ‘பேய்க்குரங்கு’ என்று அழைக்கப்படும் இந்த இரவாடி விலங்கு, பரிணாம வளர்ச்சியில் குரங்குகளுக்கும் முந்தைய இனத்தைச் சேர்ந்தது. ஆந்தையின் கண்கள், வௌவாலின் காதுகள், தவளையின் கால்கள், குரங்கின் வால் என பல உயிரினங்களுடைய உடல் உறுப்புகளின் கலவையுடன், ஒரு சாண் உயரம் கொண்டது.



காட்டு மனிதர்

ஓராங் ஊத்தான்
(Orang Hutan - Pongo pygmaeus):

‘உராங் உட்டான்’ என்பது ஆங்கில எழுத்துகளின் ஒலிபெயர்ப்பு. ‘ஓராங் ஊத்தான்’ என்பதே சரி. ‘காட்டு மனிதர்’ எனப் பொருள். ஆசியாவில் காணப்படும் ஒரே பெரிய வாலில்லாக் குரங்கு வகை. பாமாயில் எண்ணெய் தரும் செம்பனைத் தோட்டங்களுக்காக இவை வசிக்கும் மழைக்காடுகள் படுவேகமாக அழிக்கப்பட்டுவருகின்றன.



ஆயிரம் கண்கள் பூத்தன

பகட்டுக் கோழி
(The Great Argus Pheasant Argusianus argus):

‘கொவ்-வவ்’ என்று உரத்தக் குரலில் கூவக்கூடியது, உலகின் மிகப் பெரிதான இந்த பகட்டுக் கோழி. போர்னியோ காட்டுக்கு இதுவே மயில். ஆண் பறவை மயில்போல் சிறகை விரித்து ஆடுகையில், ஆயிரம் கண்கள் பூத்ததுபோல் அழகாகக் காட்சியளிக்கும்.





கட்டுரையாளர் நக்கீரன்:

உலகின் மிகப் பெரிய ஆதி காடுகளில் ஒன்றான போர்னியோ அழிப்பின் நேரடி சாட்சியான இவர், தன் அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய ‘காடோடி’ நாவல் கடந்த ஆண்டு வெளியாகிப் பிரபலமடைந்தது.

தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

ஒளிப்படக் கலைஞர் கல்யாண் வர்மா:

பெங்களூருவைச் சேர்ந்த இவர் ஒளிப்படக் கலைஞராவதற்காக யாகூ நிறுவன வேலையைத் துறந்தவர். பி.பி.சி., நேஷனல் ஜியாகிரஃபிக் உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் படம் எடுத்துள்ளார்.

தொடர்புக்கு: kalyan@rtns.org


(‘தி இந்து’ 2016 பொங்கல் மலரில் வெளியாகியுள்ள ஒளிப்படத் தொகுப்பின் சுருக்கமான வடிவம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x