Last Updated : 30 Apr, 2016 12:36 PM

 

Published : 30 Apr 2016 12:36 PM
Last Updated : 30 Apr 2016 12:36 PM

எப்போதும் பசுமையான மாடி!

மலர்களைப் பார்த்து வளர்ந்தவருக்கு, இயற்கையின் மேல் ஆர்வமும் ஈடுபாடும் ஏற்படுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அந்த ஆர்வம்தான் சாலமோன் தாஸை விவசாயம் சார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கவும் வைத்திருக்கிறது.

பூச்செடிகளின் நாற்றுகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் நர்சரி பண்ணைகள் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றின. திண்டுக்கல் - மதுரை சாலையில் உள்ள வெள்ளோடுப் பிரிவு என்ற இடத்தில் சாலமோன் தாஸின் அப்பாவும் அப்படியொரு பண்ணையைத் தொடங்கினார். மல்லி, ஜாதிமல்லி, முல்லை போன்ற செடிகளின் நாற்றுகளை உற்பத்தி செய்யும் அப்பாவுக்கு, சிறுவனாக இருந்த சாலமோனும் உதவி செய்வார்.

எல்லாம் செய்ய ஆசை

“எங்க பண்ணையில வருடத்துக்குக் கிட்டத்தட்ட மூன்று லட்சம் நாற்றுகள்வரை விற்பனையாகும். பூச்செடிகளோட மட்டும் நின்னுடாம, இதோட தொடர்புடைய மத்த விஷயங்களையும் பண்ணலாம்னு தோணுச்சு. அது சார்ந்த கல்வியறிவும் அவசியம்னு நினைச்சேன். அதனால வேளாண்மை, தோட்டக்கலைத் துறை தொடர்பான படிப்புகளைப் படித்தேன்” என்று சொல்லும் சாலமோன், வீட்டுத் தோட்டங்களில் தன் கவனத்தைத் திருப்பினார்.

பூச்செடிகளின் நாற்றுகளோடு பயனுள்ள மூலிகைச் செடிகள், காய்கறிகள், கீரை வகைகள் ஆகியவற்றையும் தன் பட்டியலில் இணைத்துக்கொண்டார். தோட்டங்களில் புல்தரை அமைத்து அழகுபடுத்தும் பணியையும் சில காலம் செய்தார்.

ஆர்வம் இருந்தால் உதவி

தற்போது மாடித் தோட்டம் அமைக்க உதவுவதில் முனைப்புடன் செயல்பட்டுவரும் இவர், கேட்கிற அனைவருக்குமே மாடித் தோட்டம் அமைப்பதற்கான பொருட்களைத் தருவதில்லை.

“இன்னைக்கு நிறைய பேருக்கு மாடித் தோட்டம் அமைக்கிறது ஃபேஷனா இருக்கு. ஆர்வமா செடிகளை வாங்கிட்டுப் போவாங்க. ஆனா, அதை சரியாப் பராமரிக்காம சாக விட்டுடுவாங்க. அதனால உண்மையிலேயே ஆர்வம் இருக்கறவங்களுக்கு மட்டும்தான் மாடித்தோட்டம் அமைக்கறதுக்கான கருவிகளையும் செடிகளையும் தர்றோம்” என்று அதற்கு விளக்கமும் தருகிறார்.

மாடித் தோட்டம் அமைக்க விரும்புகிறவர்களைத் தான் அமைத்திருக்கும் மாதிரி மாடித் தோட்டத்தைப் பார்வையிடச் சொல்கிறார். பிறகு மாடித் தோட்டம் அமைப்பது, செடிகளைப் பராமரிப்பது போன்றவற்றை அவர்களுக்கு விளக்குகிறார். முதலில் அவர்களுக்கு இரண்டு செடிகளைத் தருகிறார். அவற்றை நல்லவிதமாக வளர்த்தால்தான், அடுத்த கட்ட நகர்வு.

கவனிப்பு அத்தியாவசியம்

“குறைந்த முதலீடு, நீண்டகாலப் பயன்... இதுதான் மாடித் தோட்டத்தோட சிறப்பம்சம். செடி வளர்க்கிற பைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் அனைத்தையுமே நாங்களே தருவோம். பச்சை மிளகாய், தக்காளி, கத்திரி, வெண்டை போன்ற காய்கறிச் செடிகளுடன் தினசரிப் பயன்படுத்தக்கூடிய மூலிகைகளான துளசி, ரணகள்ளி, ஓமவள்ளி, வல்லாரை, தூதுவளை போன்ற செடிகளையும் தர்றோம். பல வகையான கீரை விதைகளும் உண்டு” என்று தன்னுடைய மாடித் தோட்டம் குறித்துச் சொல்கிறார் சாலமோன்.

பூச்சிக்கொல்லிகள் மற்றும் செயற்கை உரங்களின் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான சிறந்த வழியாக மாடித் தோட்டத்தைக் குறிப்பிடும் இவர், தொடர்ச்சியான கவனிப்பு இருந்தால் மாடித் தோட்டம் எப்போதும் பசுமையுடன் இருக்கும் என்கிறார்.

“நூறு சதுர அடியில் கிட்டத்தட்ட நாற்பது செடிகளை வளர்க்கலாம். நிழல் வலை, சொட்டு நீர்ப்பாசன அமைப்பு, நாற்றுகள், விதைகள் இதுக்கெல்லாம் சேர்த்து ஆறாயிரம் ரூபாய்வரை செலவாகும். பலர் சோம்பல் பட்டுக்கிட்டு செடிகளுக்குப் போதுமான இடைவெளியில் தண்ணீர் விட மாட்டாங்க. அதுதான் செடிகள் வாடி போவதற்குக் காரணம். ஆரம்பத்துல செடிகளுக்காக நேரம் செலவிடுறது கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், அவற்றால் கிடைக்கும் பலனுக்கு முன்னால எதுவுமே பெரிசா தோணாது” என்கிறார் சாலமோன்.

சாலமோன் தொடர்புக்கு: 9791776549

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x