Last Updated : 28 Jan, 2017 08:32 AM

 

Published : 28 Jan 2017 08:32 AM
Last Updated : 28 Jan 2017 08:32 AM

‘எது பொறம்போக்கு, ஏன் பொறம்போக்கு?’

‘புறம்போக்கு’ என்னும் சொல் இன்றைய நடைமுறையில் ‘ஒன்றுக்கும் உதவாதவர்’ என்னும் வசைப்பொருளில் தமிழகம் முழுவதும் வழங்கிவருகிறது. அப்படியானால் இது வசைச்சொல்லா? அல்ல, வசைச்சொல்லாக இழிபொருட்பேறுக்கு இறங்கியிருக்கிறது. இதன் முதன்மைப் பொருளாக ‘சமுதாய நன்மை, சாகுபடிக்குத் தகுதியின்மை முதலிய காரணங்களால் குடிகள் வசம் விடப்படாததும் தீர்வை விதிக்கப்படாததுமாகிய நிலம்’ எனத் தமிழ் லெக்சிகன் கூறுகிறது.

புறம்போக்கு என்பது தனி ஒருவருக்கு உடைமையல்லாத பொதுவெளி. ஊரின் பொதுக்காரியங்களுக்குப் பயன்படும் நன்மை கருதிப் புறம்போக்காக விடப் பட்டவை ஒருவகை. ஊர்க்கூட்டம், திருவிழா உள்ளிட்டவை நடைபெறும் பொதுவிடம், ஊருக்கே கழிப்பறையாகப் பயன்படும் மந்தை, மேய்ச்சல் நிலம், ‘தொழிலாளிகள்’ எனப்படும் பாரம்பரியக் கைவினைஞர்களின் வேலைப்பாடு களுக்குச் (சான்றாகக் குயவர்கள் சூளை அமைத்தல்) பயன்படும் இடங்கள் முதலியவை இவ்வகைக்குள் அடங்கும்.

விளைநிலமாக்க முடியாத காரணத்தாலும் ஆக்கினால் பொதுநன்மைக்கு இடையூறாகும் என்னும் காரணத்தாலும் புறம்போக்காக விடப்பட்டவை இன்னொரு வகை. ஏரி, குளம், ஓடை, ஆறு முதலிய நீர்நிலைகளின் பக்கவாட்டுப் பகுதிகள், வடிகால் பகுதிகள், கழிமுகப் பகுதிகள் ஆகியவை இவ்வகையின. இத்தகைய நிலங்களின் பொதுப் பயன்பாட்டை உணராமல் இன்று இவற்றை ஆக்கிரமித்துக் கட்டிடங்கள் எழுப்பப்படுவதையும் குப்பை மேடுகளாக்குவதையும் காண்கிறோம்.

எண்ணூர் அவலம்

வடசென்னையின் முக்கியப் பகுதியான எண்ணூரின் கழிமுகப் பகுதி இவ்வாறு பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அங்குத் தனியார் தொழிற்சாலைகள் பல கட்டிடங்களைக் கட்டியிருக்கின்றன. கழிவான சாம்பலைக் கழிமுகத்தில் கொட்டியிருக்கின்றன. இவற்றால் வடிகால் பகுதி மேடானது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் அப்பகுதி வாழ் மக்கள் பெரும் பிரச்சினைகளைச் சந்தித்துவருகின்றனர். மீன்பிடி உள்ளிட்ட தம் கடல்சார் தொழிலில் நெருக்கடியைச் சந்திக்கின்றனர். உடல் ஆரோக்கியம் கெட்டுப் பலவித நோய்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

இப்பிரச்சினையைப் பொது கவனத்துக்குக் கொண்டுவந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டுவருகிறார் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன். அதன் ஒருபகுதியாகக் கலை வடிவத்தில் இப்பிரச்சினையைப் பரப்பும் எண்ணத்தில் பாடலாசிரியரும் இசையமைப்பாளருமான கேபர் வாசுகி ‘சென்னைப் புறம்போக்கு பாடல்’ என்பதை உருவாக்கியுள்ளார். கேபர் வாசுகி எழுதி இசையமைத்துத் தமிழ் ‘ராப்’ பாடலாக, ஏற்கெனவே இப்பாடல் வெளியாகியிருக்கிறது.

ராகமாலிகையில் பொறம்போக்கு

தற்போது இப்பாடலை டி.எம்.கிருஷ்ணா கர்னாடக இசையில் ராகமாலிகையாகப் பாடியுள்ளார். ‘கொடைக்கானல் வோண்ட்’ படத்தின் இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் இப்பாடலுக்கு எடுத்த ‘சென்னைப் புறம்போக்கு பாடல்’ என்னும் காணொளி, சென்னை பெசன்ட் நகர் ஸ்பேசஸ் அரங்கில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

சுற்றுச்சூழல் பிரச்சினையில் கலைப் பங்களிப்பாக டி.எம்.கிருஷ்ணா இப்பாடலைப் பாடியுள்ளார். இதுகாலம்வரை இல்லாத வகையில் கர்னாடக இசையில் பொதுப் பிரச்சினை சார்ந்த பாடல் ஒன்று பாடப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. தன் உண்மை அர்த்தத்தை இழந்து வசைச்சொல்லாக மாறிவிட்ட ‘பொறம்போக்கு’ என்னும் சொல்லில் தொடங்குகிறது பாடல். ‘பொறம்போக்கு உனக்கு இல்லப் பொறம்போக்கு எனக்கு இல்ல’ என டி.எம்.கிருஷ்ணா பாடலைக் கம்பீரமாக ஆரம்பிக்கிறார். கர்நாடக இசைக் கலைஞர் ஒருவர் இத்தகைய சொல்லில் தொடங்கிப் பாடலைப் பாடுவது சாதாரண விஷயமல்ல. அதுவும் அல்லாமல் ‘வட சுடுறான்’ என்பது போன்ற சென்னை வட்டார மொழியும் இப்பாடலில் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் சென்னைத் தமிழை இழிவு என்று கருதும் மனப்போக்குக்கு எதிரானதாகவும் இது அமைகிறது.

எல்லையை விரிவாக்குதல்

கர்னாடக சங்கீதத்தின் உச்சத்தைத் தொட்டுவிட்ட கலைஞர் ஒருவர் அதன் எல்லையை விரிவாக்கும் பொருட்டு இப்பாடலைப் பாடியுள்ளார் எனக் கருதலாம். இம்முயற்சி அத்தோடு மட்டும் நிற்பதல்ல. சுவைஞரின் எல்லையை விரிவாக்குதலும் இதில் நடக்கிறது. மேலும் கர்னாடக சங்கீதம் என்பது பக்திக்கு மட்டுமே உரியது என்னும் மனப்போக்கை மாற்றி, நவீனப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கும் இயல்பைக் கொண்டதுதான் அது என்னும் பார்வையை வழங்குகிறது. ‘நானும் நீயும் என்ன கணக்கு நான் நான் நானா பொறம்போக்கு நீ நீ நீ பொறம்போக்கா?’ என்னும் கேள்வியோடு அவர் முடிக்கும்போது அக்கேள்விகள் நம் மனத்திலும் அலையாக வந்து மோதுகின்றன.

கர்னாடக சங்கீதத்தின் பாரம்பரியம், மரபு போன்றவற்றை ஆராதிக்கும் ரசிகர்களுக்கு இப்பாடல் எவ்விதம் தோன்றும் எனத் தெரியவில்லை. ஆனால், சமகாலத்தோடு இணைந்து இயங்கும் மனங்களுக்குப் பெரும் உவப்பையும் எழுச்சியையும் இப்பாடல் கொடுத்ததை டி.எம்.கிருஷ்ணா பாடும்போது உணர முடிந்தது. கலைச் செயல்பாடுகளின் எல்லை அளவிடற்கரியது. அதைக் குறுக்கும்போது கலை, கலைஞர், சுவைஞர் என அனைத்துத் தரப்பும் தேக்கத்துக்கு உள்ளாகும். அத்தேக்கத்தை உடைத்தெழும் முயற்சியாக இதைக் காண வேண்டியுள்ளது.

கிருஷ்ணா இதைப் பாடியிருப்பதன் வழியாக எண்ணூர் சுற்றுச்சூழல் பிரச்சினையைப் பெரும் தளத்துக்கு எடுத்துச் செல்லவும் சமூக முன்னணியாளர்களின் கவனத்தை ஈர்க்கவும் இயலும் எனக் கருதுகிறேன். இப்பாடலின் காணொளிக் காட்சி நம் மனதைக் கொதிக்க வைக்கும் வகையில், எண்ணூரின் அவலநிலை கச்சிதமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கலை வழிப் போராட்டத்துக்குக் கைகொடுத்திருக்கும் அனைவருக்கும் பாராட்டுகள்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: murugutcd@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x