Last Updated : 02 Sep, 2014 10:00 AM

 

Published : 02 Sep 2014 10:00 AM
Last Updated : 02 Sep 2014 10:00 AM

இலைவெட்டி மர்மம்

சில ஆண்டுகளுக்கு முன் டாப்ஸ்லிப் காட்டுப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, தடத்தின் ஓரமாக ஒரு இஞ்சி வகைச் செடியின் இலை எனது கவனத்தைத் திருப்பித் தன்னை நோக்கி இழுத்தது.

காரணம் அந்த இலையின் விளிம்பு, அதன் விளிம்பை மிகவும் நேர்த்தியாக அரைவட்ட வடிவில் யாரோ வெட்டியிருந்தார்கள். நகவெட்டியை வைத்து நகத்தை வெட்டியிருப்பதுபோல. பார்க்க அழகாக, அந்த இலையே புது வடிவத்தில் இருந்தது.

ஒரு வேளை கம்பளி புழு அல்லது வண்ணத்துப்பூச்சியின் இளம் பருவப் புழுதான் இப்படிக் கடித்திருக்குமோ என்ற சந்தேகத்தில் இலையைத் திருப்பி அதன் அடிப்புறத்தைப் பார்த்தேன். எதுவும் தென்படவில்லை. இலைக்குக் கீழே தரையில் பார்த்தேன். புழுக்களாக இருந்தால் அதன் எச்சத் துகள்கள் சிந்தியிருக்கும். அப்படி ஏதும் தென்படவில்லை. புரியாத புதிராக இருந்தது.

இயற்கையின் ரகசியங்கள் அவ்வளவு எளிதில் புரிந்துவிடாது. சரி இருக்கட்டும் என ஆவணத்துக்காக ஒரு படம் எடுத்து வைத்துக்கொண்டேன்.

விடை கிடைத்தது

இதைப் பார்த்து மூன்று ஆண்டுகள் கழித்து கோவாவில் ஒரு காட்டுப் பகுதியில் மாலை வேளையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். தடம் ஓரமாக இருந்த ஒரு செடியின் இலை மிக அழகாக வெட்டப்பட்டிருந்தது. இதற்கு முன் டாப்ஸ்லிப் பகுதியில் வெட்டப்பட்ட இலையைப் போலவே.

ஆச்சரியத்துடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே, கரிய நிறத்தில் ஒரு பூச்சி இலையை நோக்கிப் பறந்து வந்தது. உற்றுக் கவனித்தபோது, அது தேனீ வகையைச் சேர்ந்தது என்று தெரிந்தது. நான் பார்த்துக் கொண்டிருந்தபோதே, ஒரு சில விநாடிகளில் இலையைத் தனது வாயுறுப்புகளால் "ப" வடிவில் வெட்டி எடுத்துக்கொண்டு பறந்து சென்றது.

எனது முதல் சந்தேகத்துக்கு விடை கிடைத்தது. இலையை வெட்டியது ஒரு தேனீ வகை. ஆனால், நாம் பொதுவாகக் காணும் தேனீக்களைப் போலல்லாமல் கொஞ்சம் கரிய நிறத்திலும், சற்று நீளமாகவும் இருந்தது. இது என்ன வகைத் தேனீ? இலையை இப்படி அது வெட்டி எடுத்துச் செல்வதன் நோக்கம்?

வியப்பான பூச்சி

வீடு திரும்பிய பின் சில நூல்களைப் புரட்டியதிலும், இணையத் தேடுதலிலும், அது ஒரு இலைவெட்டித் தேனீ என்பது புலப்பட்டது. அதைப் பற்றி மேலும் படித்ததில் பல வியக்க வைக்கும் உண்மைகள் தெரியவந்தன. இவை Megachilidae குடும்பத்தைச் சேர்ந்தவை.

இவ்வகை தேனீக்கள் கூட்டமாகச் சமூக வாழ்க்கையில் ஈடுபடுவதில்லை. தனித்தே வாழ்கின்றன. இலைகளை வெட்டுவதற்கென்றே அமைந்த வாயுறுப்புகளை (mandibles) கொண்டுள்ளன.

இலைவெட்டித் தேனீக்கள் பல தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்குத் துணைபோகின்றன. இவை தம் வயிற்றுப் புறத்திலுள்ள மெல்லிய தூவிகளில் மகரந்தத் துகள்களை சேமித்து எடுத்துச் செல்லும். ஏனைய தேனீக்கள் தம் கால்களில் உள்ள மரகதக் கூடையில் எடுத்துச் செல்லும்.

சில வேளை நம் வீடுகளின் சாவித் துவாரங்களிலும், மின்செருகித் துவாரங்களிலும் (Socket), சுவரில், மரச்சட்டங்களில் உள்ள சிறிய ஓட்டைகளிலும் இவ்வகை தேனீக்கள் கூடு கட்டியிருப்பதைக் காணலாம். இவற்றின் கூடு இலைகளால் ஆன, பல அறைகளைக் கொண்டிருக்கும்.

இந்தத் தேனீக்கள் ஈரமான களிமண், மரப் பிசின் போன்ற பொருட்களால் கூடு கட்டி, வெட்டி எடுத்த இலைகளைக் கொண்டுவந்து கூட்டின் வடிவத்துக்கு ஏற்ப அவற்றைச் சுருட்டி உள்ளே வைக்கும். அந்த இலைக்குழியில் ஒரு முட்டையிடும். அந்த முட்டை பொரிந்து வெளிவரும் தோற்றுவளரிக்கான உணவான பூந்தேனையும் (Nectar) மகரந்தத் துகள்களையும் (Pollen grains) கொண்டுவந்து சேர்க்கும்.

அடுத்த சந்ததி

இவையெல்லாம் வைக்கப்பட்ட இலைக்குழியின் மேல் மேலும் ஒரு வெட்டிய இலையை வைத்து மூடி, அதிலும் ஒரு முட்டையையும் அதற்கான உணவையும் வைக்கும். இப்படிக் கூட்டின் நீளத்துக்கு ஏற்பப் பல அறைகளைத் தயார் செய்யும்.

கடைசியில் மேலும் பல இலைகளை வெட்டி வந்து நுழைவாயிலில் திணித்துக் களிமண் அல்லது பிசினைக் கொண்டு பூசி, மழையும் மற்றப் பூச்சிகளும் கூட்டுக்குள் புகாத வகையில் அடைத்துவிடும். இலையைத் தவிர மலரிதழ்கள், நார்கள் போன்றவற்றை வைத்தும் கூடு கட்டும். பெண் தேனீயே கூடுகட்டும் வேலையைச் செய்யும். தோற்றுவளரிகள் வளர்ந்து சரியான தருணத்தில் (பலவித மலர்கள் மலரும் காலத்தில்) கூட்டைவிட்டு வெளியேறும்.

முதிர்ந்த இலைவெட்டித் தேனீக்களில் ஆண்கள் கலவி முடிந்தபின் இறந்து போகும். ஆனால் பெண் தேனீ மேலும் சில வாரங்கள் உயிர் வாழ்ந்து கூட்டைக் கட்டும்.

இயற்கை வாய்ப்பு

முன்பு டாப்ஸ்லிப்பில் நான் கண்ட அந்த இலையை வெட்டியது இது போன்ற இலைவெட்டித் தேனீயாகத்தான் இருக்க வேண்டும். அந்த இலையின் படத்தைப் பூச்சியியலாளர் யாரிடமாவது காட்டியிருந்தால், அதை வெட்டியது யாரென்று சொல்லியிருப்பார்கள். அந்த எண்ணம் அப்போது உதிக்கவில்லை.

அப்படிக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தால் மீண்டும் அதைப் பார்த்தவுடன், உடனே அடையாளம் கண்டிருக்க முடியும். எனினும், எதிர்பாராத விதமாக நாமே ஒன்றைக் கண்டறிவதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை உண்டா? இயற்கை நமக்கு அந்த வாய்ப்பை அளித்துக்கொண்டே இருக்கும். இந்த மனிதக் குலம் இருக்கும்வரை. இயற்கையான வாழிடங்களை இந்த மனிதக் குலம் விட்டு வைத்திருக்கும்வரை.

தேனீக்கள் செய்யும் உதவி

பல வகை தாவரப் பயிர்களின் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சியினங்களில் இலைவெட்டித் தேனீக்கள் மிகவும் முக்கியமானவை. இயற்கையான நிலப்பகுதி அனைத்தையும் விவசாயம் செய்வதற்காக அழித்து அல்லது மாற்றியமைத்து, பல வகைப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தியதன் விளைவாக அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பல வகைப் பூச்சியினங்கள் அழிந்தும், அருகியும் வருகின்றன.

இதனால் பயிர் உற்பத்தித் திறன் குறைந்து, பல வகை தாவர நோய்கள் பெருகின. இதைச் சமாளிக்க இயற்கை விவசாயம், வளங்குன்றா விவசாய முறைகளைப் பின்பற்றுதல், விளைநிலங்களின் அருகில் இயல் தாவரங்களை வளர்த்தல், சீரழிந்த இயற்கைப் பகுதிகளை மீட்டமைத்தல் முதலிய திட்டங்கள் உலக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இப்படிச் செய்வதால் மண் வளம், பயிர் உற்பத்தி பெருக்கம் மட்டுமல்லாமல் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், மேலும் பல பூச்சி வகைகளும் பெருகும். இந்த வகைப் பூச்சிகளைக் குறிப்பாகப் பல வகைத் தேனீக்களைப் பண்ணைகளிலும், விவசாய நிலங்களுக்கு அருகிலும் ஈர்க்கச் செயற்கையான கூடுகளும் வைக்கப்படுகின்றன.

நீலகிரி பகுதியில் கீஸ்டோன் அறக்கட்டளையைச் (Keystone Foundation) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த வகை ஆலோசனைகளை அப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கிவருகின்றனர். மேலும் விவரங்களுக்குப் பார்க்க:

>http://keystone-foundation.org/

ப. ஜெகநாதன், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
மின்னஞ்சல்: jegan@ncf-india.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x