Last Updated : 12 Sep, 2015 12:02 PM

 

Published : 12 Sep 2015 12:02 PM
Last Updated : 12 Sep 2015 12:02 PM

இருளோடு புதைக்கப்படும் இருளர் வாழ்க்கை

பச்சை நிறம் மொத்தமாகக் கொட்டி வைக்கப்பட்டிருக்கும் அட்டப்பாடி காட்டுப் பகுதியின் இருளர் குடியிருப்புப் பகுதி. ஒரு சிறு குடிசை. விரியும் முன்னரே கசக்கி எறியப்பட்ட மனித மொட்டு ஒன்று குடிசையில் கிடத்தப்பட்டிருக்கிறது.

அட்டப்பாடி பள்ளத்தாக்கு, அதன் மண்ணும் மரங்களும் அறிந்த முதல் மனிதக் குழுக்களான இருளர்கள், இன்றைக்கும் அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், அம்மக்களின் குழந்தைகள் 2012 - 13-ம் ஆண்டு கொத்துக்கொத்தாக செத்து மடிய ஆரம்பித்தனர்.

இந்தப் பச்சிளங்குழந்தைகளின் இறப்பை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்ட கேரள அரசும் சுகாதார நலத்துறையும் இருளர் தாய்மார்களிடம் காணப்படும் ரத்தசோகைதான், அகால இறப்புக்குக் காரணம் என்ற அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கை மனிதப் பிஞ்சுகளின் இழப்பை, மிக எளிதாகச் சுருக்கிவிட முயற்சித்தது.

மாற்றுக் குரல்

இந்தப் பின்னணியில் ‘பாதசாரி' பட இயக்கத்தைச் சேர்ந்த கே.பி. பிரதீப்பும் (தீபு), நீமித்தும் இயக்கிய “THE RED DATA BOOK an Appendix” (சிவப்பு தரவு நூல் ஒரு பிற்சேர்க்கை) என்ற ஆவணப்படத்தின் மூலம் இருளர் தொல்குடி மீது பல முனைகளிலிருந்தும் தொடுக்கப்படும் பேரழிவைக் கவனப்படுத்தி இருக்கின்றனர்.

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது அட்டப்பாடி மலைப் பள்ளத்தாக்கு. இது உயிர்க்கோளக் காப்புக் காடாக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள மூன்று கிராமப் பஞ்சாயத்துகளில் இருளர்கள், முதுகர்கள், குறும்பர் பூர்வகுடிகள் வசித்துவருகின்றனர். இவர்களில் இருளர்கள்தான் பெரும்பான்மையினர்.

திடீர் இறப்பு ஏன்?

காலங்காலமாக இந்தப் பள்ளத்தாக்கில் வசித்துவரும் இருளர் தொல்குடிகளிடையே 2012 -13-ம் ஆண்டுகளில் மட்டும் ஊட்டச்சத்துக் குறைபாடும் பிஞ்சுகளின் இறப்பும் நிகழ்ந்தது ஏன்?

ஒற்றை வரியில் விடை காண முடியாத நூறாண்டு காலத் துயரத்தின் வரலாறுதான், இதற்கான விடையும் விளக்கமுமாக இருக்க முடியும். ‘ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பிஞ்சுகளின் இறப்பு' என்ற நிகழ்வின் மூலம் பிரச்சினையின் நுனியிலிருந்து ஆழமும் இருளும் மண்டிய, அதன் அடி நோக்கி அங்குலம் அங்குலமாக நகர்கிறது படம்.

ஆவணப் படத்தின் இயக்குநர் இருளர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் அளிக்கும் மறுமொழிகளின் வழியாக அட்டப்பாடியில் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்ட வன்முறை நம் கண் முன்னே பரவுகிறது.

எது உண்மை?

ஊட்டச்சத்துக் குறைவு ஏன்? போதிய சத்தான உணவில்லை; உணவு ஏன் இல்லை? விளைச்சலில்லை; விளைச்சல் ஏன் இல்லை? மழை இல்லை; மழை ஏன் இல்லை? காடழிப்பு; காடு ஏன் அழிக்கப்பட்டது? வெட்டு மர வணிகர்கள், கேரள அரசின் வளர்ச்சித் திட்டங்கள், வெளியிடங்களிலிருந்து மக்கள் குடியேற்றம், குடியேறியவர்களின் நில ஆக்கிரமிப்பு; அரசு உங்களுக்கு உதவவில்லையா? நியாய விலைக் கடைகள் வழியாக அரிசி வழங்கினார்கள். ஆனால், அரிசி உணவு எங்களுக்கு அந்நியமானது. அதை எங்களால் உண்ண முடியவில்லை.

எங்கள் வாழ்விடங்களும் விவசாய நிலங்களும் பறிபோய்விட்டதால் காலங்காலமாக பயிர் செய்து உண்டுவந்த கேழ்வரகு, சோளம், தினை, வரகு, சாமை, துவரை, தேன், கிழங்கு வகைகள், பல்வேறு வகையான மருந்து செடிகள் போன்றவற்றை இழந்துவிட்டோம்.

அதனால் ரத்தச் சோகை, சத்துக் குறைவு, மூச்சுத்திணறல், மூச்சடைப்பு, எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகள் என விதவிதமான நோய்கள் தாக்கி, எங்கள் கண் முன்னே குழந்தைகளைப் பறிகொடுக்க வேண்டிய அவலத்துக்கு உள்ளாகி நிற்கிறோம்.

முன்கதைச் சுருக்கம்

காடு அடர்ந்த அட்டப்பாடி பள்ளத்தாக்கின் பெரும்பான்மை குடிமக்களாகிய. இருளர்கள் கொங்கு மண்டலத்தின் பூர்வகுடிகள். பதின்மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சாதிய மேலாதிக்கம் தமிழகச் சமவெளியிலிருந்து அட்டப்பாடி காட்டுக்குள் அவர்களை விரட்டியது.

அட்டப்பாடியின் அடர்ந்த காட்டுப் பகுதியின் பரப்பளவு 1959-ம் ஆண்டு 82 % ஆக இருந்தது. 1996-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அது 19.7 % ஆக சுருக்கப்பட்டுள்ளது. 1951-ம் ஆண்டு 90 % ஆக இருந்த பூர்வகுடிகளின் மக்கள்தொகை 2001-ம் ஆண்டு 40.9 % ஆகக் குறைந்துள்ளது.

எண்ணிக்கை / சதவீத மாற்றம் எப்படி?

காட்டுடன் பிணைந்த இருளரின் வாழ்க்கையைப் பிரிக்கும் வேலை வனச்சட்டங்களின் பெயரில் வெள்ளையர் ஆட்சியில் தொடங்கியது. நவீன வளர்ச்சியின் பளபளப்பைக் காணத் துடிக்கும், தோட்ட முதலாளிகளும் வெட்டுமர வணிகர்களும் காட்டை அழித்தனர்.

மறுபுறம் கேரளத்தின் மன்னார்க்காடு, கோட்டயம் பகுதியிலிருந்து குடியேறிய மலையாளத் தோட்டத் தொழிலாளர்களாலும் தமிழகத்தின் கோவை மாவட்டத்திலிருந்தும் அட்டப்பாடியில் குடியேறிவரும் தமிழர்களாலும் அட்டப்பாடியின் பூர்வகுடிகள் சிறுபான்மையினர் ஆனார்கள்.

என்ன கிடைத்தது?

நாட்டு வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், பழங்குடி முன்னேற்றம் என்ற பெயரில் அட்டப்பாடி பழங்குடியினரின் மொத்த வாழ்க்கையையும் பறிமுதல் செய்த உலகமயமாக்கமும், கேரள அரசும், குடிமைச் சமூகமும் பெருமையாகத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் வளர்ச்சி, முன்னேற்றத்தின் பலன்களையாவது, குறைந்தபட்சம் அந்தப் பழங்குடியினருக்கு வழங்கினார்களா என்ற கேள்வி விடையில்லாமலேயே அலைகிறது.

அட்டப்பாடியில் பொது விநியோகத் திட்டமும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டமும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. கேரள மாநிலத்தின் மற்றப் பகுதிகளில் முட்டை, பால், பழம் என வழங்கும் அங்கன்வாடி மையங்கள் அட்டப்பாடியின் பூர்வகுடி குழந்தைகளுக்கு மட்டும், அவற்றைக் கண்ணில்கூடக் காட்டுவதில்லை. பேறுகாலத்துக்குத் தேவையான மருந்துகளும் மருத்துவ உதவிகளும் அட்டப்பாடியின் பூர்வகுடிகளுக்குப் போதுமான அளவு வழங்கப்படுவதில்லை.

தலைமுறை தலைமுறையாகச் செதுக்கப்பட்ட பாரம்பரிய அறிவுத் திரட்டிலிருந்து பிய்த்து எறியப்பட்ட இருளர்களால், பெருநில மக்களின் நவீன வாழ்க்கை முறைக்குள் இணையவும் முடியவில்லை. தங்களுடைய ஆதிவாழ்க்கை நிலைக்குத் திரும்பிச் செல்லவும் வழியில்லை. அந்தரத்தில் தொங்கும் அவர்களுடைய வாழ்க்கைக்கு எவ்வித நிவாரணமும் இல்லை.

காலங்காலமாக மண்ணுடனும் காட்டுடனும் மற்ற உயிரினங்களுடனும் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டு தற்சார்பாக வாழ்ந்திருந்த இருளர் மக்கள், கூலித் தொழிலாளிகளாக மாற்றப்பட்டுக் கேரள நகரங்களுக்குத் துரத்தப்பட்டனர்.

அடக்குமுறை

இருளர்களின் மொழியும் வழிபாட்டு முறையும் பெருநில ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. பள்ளிக்கூடங்களில் மலையாளம் கற்பிக்கப்படுவதால், இருளர்களின் வரிவடிவமற்ற மொழிப் பயன்பாடு மெல்ல அழிக்கப்படுகிறது.

காடு, மலைகளில் வசிக்கும் இருளர் பழங்குடிகள் மதம், சாதி போன்ற எந்த முன்னொட்டும் பின்னொட்டும் இல்லாமலேயே பிறந்து வாழ்ந்துவருபவர்கள். முன்னோரையும் இயற்கையையும் வழிபட்டுவந்த அவர்களில் கொஞ்சம் பேர் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டுள்ளனர். கேரள அரசின் பதிவேடுகளில் அவர்கள் இந்துக்களாகப் பதிவு செய்யப்படுகின்றனர்.

இப்படியாக இருளர்களின் வாழ்விடம், மொழி, பண்பாடு காவு வாங்கப்பட்டுவிட்டன. வாழ்க்கை முறை, வாழிடம், மொழி, வழிபாட்டு முறை போன்றவை அடக்கப்பட்ட பின்னணியில் ஊட்டச்சத்துக் குறைபாடு மூலம் அம்மக்களின் புதிய தலைமுறையும் தழைக்காமல் போகிறது. இருளர்களின் வாழ்க்கை, இருளின் மீளாத ஆழங்களில் புதைக்கப்படுகிறது .

கொலைக்கருவிகள் எதுவுமின்றி ஓர் இனத்தைச் சத்தமின்றி வேரறுக்க முடியும் என்பதற்கு அட்டப்பாடி இருளர் வாழ்க்கையைச் சாட்சியாக முன்னிறுத்தும் “சிவப்பு தரவு நூல் ஒரு பிற்சேர்க்கை” என்ற இந்த ஆவணப்படம், இனப் படுகொலை என்பதற்குப் புதிய வரையறையைத் தேடச் சொல்கிறது.

- சாளை பஷீர், சுற்றுச்சூழல் ஆர்வலர், தொடர்புக்கு: shalai_basheer@yahoo.com

‘THE RED DATA BOOK an Appendix', 2014

ஆவணப்படம்: (சிவப்பு தரவு நூல் ஒரு பிற்சேர்க்கை

இயக்கம்: மித் - கே.பி. பிரதீப் (தீபு)

நேரம்: 72 நிமிடங்கள்

தயாரிப்பு: பாதசாரி பட இயக்கம் (PEDESTRIAN PICTURE MOVEMENT)

இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிகளைக் காண: >https://thereddatabook.wordpress.com/trailer/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x