Last Updated : 13 May, 2017 11:42 AM

 

Published : 13 May 2017 11:42 AM
Last Updated : 13 May 2017 11:42 AM

இயற்கை நேசம்: வாகையை இழந்தோம்

சென்னையில் வழக்கமாகவே சித்திரை வெயில் கொளுத்தியெடுக்கும். வர்தா புயலில் நகரின் பசுமைப் பரப்பும் பெருமரங்களும் துடைத்தழிக்கப்பட்டுவிட்டதால், சென்னை இப்போது மேலும் மொட்டையடித்தது போலாகிவிட்டது. இந்த முறை சித்திரை வெயில் கடந்த முறைபோல் தீவிரமாக இல்லை என்றாலும், கருணையும் காட்டவில்லை.

வெயில் குறைந்தும் வெப்பநிலை குறையாமல் போனதற்கு என்ன காரணம்? நகரம் தன்னையே வெப்பப்படுத்திக்கொள்ளும் நகர்ப்புற வெப்பத் தீவு விளைவுக்கான (Urban heat island effect) சாத்தியங்களை அதிகப்படுத்திக்கொண்டுவிட்டது. அதிகக் கட்டிடங்கள், அதிகக் குளிர்சாதனப் பெட்டிகள், அதிக வாகனப் புகை உள்ளிட்டவை அதிகரித்திருப்பது இந்த விளைவுக்கு முக்கியக் காரணம். அத்துடன் சென்னை நகரம் பசுமைப் பரப்பை இழந்ததும் முக்கியக் காரணமே. ஒருவேளை வர்தா புயலில் மரங்கள் பெருமளவு வீழாமல் இருந்திருந்தால், தற்போது சற்றே மட்டுப்பட்டுள்ள வெப்பநிலை இன்னமும்கூடக் குறைந்திருக்கலாம்.

அதிரடி வர்தா

வர்தா புயல் சென்னையில் பல தரப்பினருக்கும் பல்வேறு வகை இழப்புகளை ஏற்படுத்தியது. எனது குடும்பமும் குறிப்பிடத்தக்க ஓர் இழப்பைச் சந்தித்தது.

வர்தா புயல் வீசிய நாளில் சென்னை மந்தைவெளியில் உள்ள எங்கள் வீட்டில் நாங்கள் இருக்கவில்லை. ஜன்னல்களை மூடாமல் சென்றிருந்தோம். வர்தா புயலின் 100 கி.மீ.க்கு மேற்பட்ட வேகத்துக்கு, ஜன்னல்கள் எல்லாம் எம்மாத்திரம். பேய்க்காற்றில் சில ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியிருந்தது பற்றி கேள்விப்பட்டேன். ஆனால், அதெல்லாம் விஷயமேயில்லை.

காட்டின் வீழ்ச்சி

சில நாட்களுக்குப் பிறகு பூட்டியிருந்த எங்கள் வீட்டைத் திறக்கப் போனேன். எங்கள் தெரு முழுக்க ஏதோ காட்டை வெட்டி போட்டதுபோல் களேபரமாகக் கிடந்தது. எங்கள் குறுக்குத் தெரு முற்றிலும் அடைபட்டுக் கிடந்தது. அதற்குள் என் வண்டியை எடுத்துச் செல்ல முடியவில்லை. கிளைகளை விலக்கி நடந்தேன்.

வீட்டை நெருங்கியபோதுதான் சட்டென்று ஒரு விஷயம் உறைத்தது, அந்த இடமே வெறிச்சோடிக் கிடந்தது. கடந்த சில ஆண்டுகளாக எங்களுக்கு நிழல் தந்து வந்த மஞ்சள் வாகை (ஆங்கிலப் பெயர் Copper pod, அறிவியல் பெயர்: Peltophorum ferrugineum) மரம் அடியோடு பெயர்ந்து மரித்துக் கிடந்தது. அந்த மரத்துக்குக் குறைந்தபட்சம் 30-40 ஆண்டுகள் வயதிருக்கும்.

மலர்கள் படைத்த உணவு

மஞ்சள் கம்பளம் விரித்து வரவேற்று, ஒவ்வொரு வசந்த காலமும் வரப்போவதை முன்கூட்டியே அறிவித்துவந்த மரம் அது. அதிலிருந்து உதிர்ந்து விழும் பிரகாசமான மஞ்சள் நிற மலர்கள், சாலையில் ஒரு மலர் மெத்தையை உருவாக்கியிருக்கும். மலர் மெத்தையிலிருந்து மலரின் தேன் நறுமணம் காற்றில் தவழ்ந்து வந்து நாசியைத் துளைக்கும். அந்த இடம் சட்டென்று மனதுக்குள் உற்சாகத்தைத் தட்டியெழுப்பிவிடும். அதன் வசந்தக் காலச் செழுமையைக் கண்டு பல முறை மனம் குதூகலித்திருக்கிறேன்.

தினசரி காலையில் தேனைத் தேடி மொய்க்கும் தேனீக்களை, உதிர்ந்து கிடக்கும் மலர்களில்கூடப் பார்க்கலாம். அதன் மலர்களிலிருந்து தேனை உண்பதற்காகத் தேனீக்கள், வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள் படையெடுக்கும். மலர் மொட்டுகளை அணில்கள் சுவை பார்க்கும். மரத்தின் கிளை கிளையாகத் தாவி உச்சிக்குச் செல்லும் அணில்கள், ‘சிப் சிப் சிப்‘ என்று உச்சஸ்தாயியில் குரல் கொடுத்து விடிந்துவிட்டதை அறிவிக்கும்.

மரத்தின் விருந்தினர்கள்

குயில், காகம், மைனா, கிளி, சில நேரம் வல்லூறு, ஏன் மாம்பழக் குருவியைக்கூட அந்த மரம் எங்களிடம் அழைத்து வந்திருக்கிறது. அணில், ஓணான், எறும்பு, பச்சைப் புழு, சிலந்திகள், வண்டுகள், குளவிகள், வண்ணத்துப்பூச்சிகள் எனப் பற்பல உயிரினங்களுக்கு அது உயிரளித்து வந்தது.

அந்த மரத்தின் மலர்களும், இலைகளும், குச்சிகளும் என் மகனின் விளையாட்டுப் பொருட்கள். அந்த மலர், இலை, குச்சிகளைக் கொண்டு விடுமுறைக் காலத்தில் கலைப்பொருட்கள் செய்து மகிழ்ந்திருக்கிறோம். அதன் நிழலில்தான் என் மகனின் சைக்கிள் பயிற்சி நடக்கும். இப்படி அந்த மரம், உயிரினங்கள், நாங்கள் என்று மூன்று தரப்பினருக்குமான தொடர்பு அறுக்க முடியாத பிணைப்பாக இருந்தது.

அயல் மர வெறுப்பு

“ஆங்கிலத்தில் ‘காப்பர் பாட்’ என்றழைக்கப்படும் அந்த மரம் மலாய் தீபகற்பம், அந்தமான் தீவுகள், வடக்கு ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்டது. நன்கு பெரிதாக வளர்ந்து நிழல் தரும் என்பதால் சாலையோரம் நடுவதற்காக ஆங்கிலேயர்களால் பெருமளவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அயல் மரம். இதற்குத் தமிழ்ப் பெயர் இல்லை. மஞ்சள் வாகை என்று இதை அழைக்கலாம்” என்கிறார் தாவரவியல் பேராசிரியர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி.

கருவேல மரம், உன்னிச் செடி தொடங்கி அயல் தாவரங்கள் மீதான வெறுப்பு இன்றைக்கு வளர்ந்து பூதாகரமாகிவிட்டது. ஏதோ எல்லை தாண்டி நுழைந்த தீவிரவாதிகளைப் போலத்தான் இந்த மரங்களைப் பாவிக்கிறோம்.

அயல் மரங்கள் நம் மண்ணுக்கு முற்றிலும் உகந்தவை அல்ல என்பது உண்மைதான். அயல் மரங்கள் நம் மண்ணிலும் சூழலியலிலும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்துச் சமீபகாலமாகத்தான் விழிப்புணர்வைப் பெற்றுவருகிறோம். ஆனால், இந்த விழிப்பை நாம் அடைவதற்கு முன்னமே, இத்தாவரங்கள் வளர்ந்து பெரிதாகிவிட்டன.

அவற்றை நட்டு வளர்த்தது நமக்கு முந்தைய சந்ததி. அந்தத் தாவரங்களும் தங்கள் இயல்புக்கு ஏற்ப வளர்ந்து செழித்தன. இனத்தைப் பெருக்கின. அதைத் தவிர்த்து அவை வேறெந்தப் பாவமும் செய்யவில்லை.

அளவிட முடியாத மதிப்பு

என்னதான் அயல் மரங்கள் நம் மண்ணின் மரங்களுக்கு ஈடாகாது என்று வாதிட்டாலும், ஒரு தாவரம் அதன் இயற்கைப் பண்புக்கு ஏற்ப, அது வளர ஆரம்பித்த நாள் முதல் சிறுசிறு நன்மைகளையாவது இந்த மண்ணுக்குத் தந்துகொண்டுதான் இருக்கிறது. அயல் மரங்கள் எந்தப் பயனும் தருவதில்லை; பாதிப்பே அதிகம் என்று கண்மூடித்தனமாக நம்புகிறோம்.

அப்படியென்றால் எங்கள் வீட்டுக்கு முன்பிருந்த மஞ்சள் வாகை மரத்தில் தினசரித் தேன் உண்ட தேனீக்கள், மொட்டுகளைச் சுவைத்த அணில்கள், இன்னும் பல உயிரினங்கள் அந்த மரத்தை நம்பித்தானே வாழ்ந்தன? அந்த மதிப்பை எப்படி நாம் அளவிடுவது?

பதிலிட முடியாதது

அந்த மரம் எங்கள் வீட்டு பால்கனியை ஒரு கூரைபோல முழுமையாக மூடியிருந்தது. எவ்வளவு கடுமையான வெயில் அடித்தாலும், அந்த மரம் இருந்தவரை எங்களுக்கு வெயில் உறைத்ததேயில்லை. இப்போதோ மார்கழி மாத வெயிலுக்குக்கூட நாங்கள் அஞ்சி நடுங்குகிறோம். சித்திரை வெயிலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இத்தனை காலமும் வெயிலின் உக்கிரம் முழுவதையும் சுவீகரித்துக்கொண்டது அந்த மஞ்சள் வாகை மரம்தானே.

இயல் தாவரமோ, அயல் தாவரமோ எதுவும் தன் இயல்பை இழப்பதில்லை, இயற்கைப் பண்புகளைத் தொலைப்பதில்லை. நமது நினைப்பு, நம்பிக்கையைப் போல எந்தத் தாவரமும் வில்லன் அவதாரம் எடுப்பதில்லை. அது தரும் பயனின் அளவு கூடக்குறைய இருக்கலாம்; இயல் தாவரத்தைப் போலச் சூழலுக்கு முழுமையாகப் பொருந்திப் போகாமல் இருக்கலாம்.

ஆனால், ஒவ்வொரு தாவரமும் மனிதர்களால் செயற்கையாக உருவாக்கவே முடியாத, பொருளாதாரரீதியில் மதிப்பிட முடியாத ஏராளமான பயன்களைத் தந்துகொண்டுதான் இருக்கிறது. எப்பொழுது நம்மால் பதிலிட முடியாத பயன்களை ஒரு தாவரம் தருகிறதோ, அப்பொழுதே அதன் மதிப்பு ஈடுகட்ட முடியாததாகிவிடுகிறது என்பதில் வேறு கேள்விக்கு இடமிருக்காது, இல்லையா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x