Last Updated : 31 Jan, 2015 02:55 PM

 

Published : 31 Jan 2015 02:55 PM
Last Updated : 31 Jan 2015 02:55 PM

இன்றும் தேவை அறிஞர் குமரப்பா

இன்றைய மையப்படுத்தப்பட்ட, நீடித்த தன்மையற்ற, பெருந்தொழில்மய பொருளியல் போக்குக்கு மாற்றான பரவலாக்கப்பட்ட, சூழலியலைக் கெடுக்காத, அனைவருக்கும் வளத்தைக் கொடுக்கும் ஒரு பொருளியல் மாதிரியை வடிவமைத்த பேரறிஞர் ஜே.சி. குமரப்பா.

நமக்கான பொருளாதாரம்

தஞ்சையில் பிறந்து இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர்கல்வி பயின்று காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டு, இந்திய விடுதலைப் போரில் தன்னை இணைத்துக்கொண்டு தனது இறுதி மூச்சுவரை ஊரக மேம்பாட்டுக்காகவே அவர் பாடுபட்டார்.

மேற்கத்திய மாதிரிகளை 'காப்பியடித்து' பொருளாதாரம் முதல் அறிவியல் தொழில்நுட்பம் மட்டுமல்லாது கல்வி முதல் பண்பாட்டு துறைவரை அனைத்திலும் தற்சார்பையும் தனித்தன்மையையும் இழந்து, அதுவே ‘வளர்ச்சி’ என்று போதித்த தலைவர்களுக்கு நடுவே நமக்கான ஒரு பொருளாதார மாதிரியைக் கொடுத்து, பல பரிசோதனைகள் மூலம் அதை மெய்ப்பித்தும் காட்டினார்.

புதிய கொள்கை

அதற்கு நிலைபேற்று பொருளாதாரம் (Economy of Permanance) என்ற புதியதொரு சொல்லாட்சியைப் பயன்படுத்தினார். இந்தியா சிறிய ஊர்களைக் கொண்ட பெரிய நாடு. எனவே, சிறிய ஊர்களுக்கான ஒரு பொருளியலை உருவாக்குவதே, இங்குள்ள பொருளாதார மேதைகளின் பணியாக இருக்க வேண்டும். உணவு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மை, கூடிய மட்டும் பணத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் பண்டமாற்றை அடிப்படையாகக் கொண்ட தொழிற்கொள்கை, மக்களின் ஆதாரங்களை மேம்படுத்தும் வகையில் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி போன்றவை இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட அறக் கோட்பாடுகளை உள்ளடக்கியதாகப் பொருளாதாரத்தைக் குமரப்பா உருவாக்கினார். ஆனால் போட்டியையும், பூசலையும் அடிப்படையாகக் கொண்டு கொள்ளை அடிப்பதையே அறமாகக் கொண்ட ஒரு பொருளாதார மாதிரியை மேற்குலகம் வடிவமைத்து, அதை இந்தியாவும் பின்பற்றும் நிலையைக் காண முடிகிறது.

நிதர்சன நிலை

இந்தியாவில் கடந்த 1990-ம் ஆண்டு ரூ. 19688.62 கோடி சொத்து மதிப்புடைய பெரும்பணக்காரர்கள் (billionaires) இரண்டே இரண்டு பேர் மட்டுமே இருந்தனர். ஆனால், தாராளமயமும் தனியார்மயமும் அறிமுகமான பின் இந்தியாவின் இயற்கை வளங்களும் மலிவான உழைப்பும் தனியார் கைகளுக்குத் தாரை வார்க்கப்பட்டதால் இந்தப் பெரும்பணக்காரர்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்திருக்கிறது. இதன் மதிப்பு 1084420.42 கோடி ரூபாய். பி.பி.சி. செய்தி நிறுவனம் இதைத் தெரிவிக்கிறது.

இந்தியாவில் இன்றைக்கு 82 கோடி மக்கள், ஒரு நாளைக்கு வெறும் 20 ரூபாய்க்கும் கீழே வருமானம் உள்ளவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக, 1990-ம் ஆண்டு 65 கோடி மக்கள் பசியால் வாடினர். இன்று அந்த எண்ணிக்கை 82 கோடியாக வளர்ந்துள்ளது. என்னே நமது ஆட்சியாளர்களின் திட்டம், கொள்(ளை)கை.

எது திட்டமிடல்?

பட்டினியால் விலா எலும்புகள் தெரியும் உழைப்பாளியை அழைத்து அவனுக்கு ஒரு திட்டத்தைக் கொடுத்து, அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் அவனது விலா எலும்புகள், மறையும்படி கொஞ்சம் சதை வளர்ந்திருக்குமேயானால் அதுவே உண்மையான திட்டமிடல்' என்று குமரப்பா கூறினார். இன்று அதற்கு மாற்றாகக் கொழுப்பவர்களை மேலும் கொழுக்க வைத்து ஏழைகளை மேலும் ஏழையாக்கும் கொள்ளைப் பொருளாதார மாதிரிச் செயல்படுத்தப்படுகிறது.

தஞ்சையில் பிறந்து இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மேலைக் கல்வியைப் பயின்றிருந்தாலும், நமது நாட்டுக்கான தற்சார்புப் பொருளியலை அவர் உருவாக்கினார். கணக்காயராக வாழ்க்கையைத் தொடங்கிய குமரப்பா, மிகச் சிறந்த வருவாயை ஈட்டியவர். அவரது உடை மிக நேர்த்தியான மேற்கத்தியப் பாணியில் இருந்தது.

ஆனால் இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பின்னர், வடக்கத்திய தலைவர்கள் எட்டு முழ வேட்டியில் தயாரான பைஜாமா என்ற உடையை அணிந்தபோது, அவர் நான்கு முழ வேட்டியில் 'தோத்திஜாமா' என்ற ஒன்றைச் செய்து அணிந்துகொண்டார்.

சுய கண்டுபிடிப்பு

தனக்கான வீட்டை உருவாக்கும்போது காந்தியடிகள் வசித்த வீட்டைவிடவும் குறைவான செலவில் வீட்டை உருவாக்கிக்கொண்டார். காந்தியே எளிமையானவர். அவரைவிடவும் எளிமையான வீடு, ஆனால் வசதிகளுக்கும் குறைவில்லாத வீடு.

நிலக்கரியையும் பெட்ரோலையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதாரம் மிகவும் ஆபத் தானது. எனவே, புதுப்பிக்கக்கூடிய வளங்களைக் கொண்ட ஒரு பொருளாதாரக் கொள்கை வேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், தாவர எண்ணெயைக் கொண்டு எரியும் விளக்கு ஒன்றை வடிவமைத்துக் கொடுத்தார்.

சமையல் எரிவாயு மானியத்துக்கு அல்லல்படும் நமது மக்களின் இன்றைய துயரங்களைத் தொலைநோக்குடன் சிந்தித்ததாலோ என்னவோ, புகையில்லா அடுப்பை உருவாக்கினார், அதற்குக் கல்லுப்பட்டி அடுப்பு என்றே பெயர்.

குமரப்பா 1892-ம் ஆண்டு ஜனவரி 4-ல் பிறந்து, 1960-ம் ஆண்டு ஜனவரி 30-ம் நாள் மறைந்தார். அவரது தலைவரான காந்தியடிகளின் மறைவும் ஜனவரி 30 என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாசிரியர்,

சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x