Published : 30 Jul 2016 12:32 PM
Last Updated : 30 Jul 2016 12:32 PM

இடைவெளி இல்லா அடர்காடு: ஜப்பான் முறை திருப்பூரில் அறிமுகம்

“இடைவெளி இல்லாத அளவுக்கு நெருக்கமாக மரங்கள் வளர்ப்பதுதான், ஜப்பானின் பிரபலத் தாவரவியலாளர் ‘அகிரா மியாவாக்கி’ அறிமுகப்படுத்திய காடு வளர்க்கும் முறை. அவர் முன்வைத்த சூழலியல் கோட்பாடு சார்ந்து காடு வளர்க்கும் முயற்சியைத் திருப்பூரில் முன்னெடுத்துள்ளோம்” என்கிறார்கள் லீலம்- ஜெ.ரூபன் தம்பதி. இருவரும் திருப்பூர் கணியாம்பூண்டியில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்திவருபவர்கள்.

சுற்றுச்சூழல் நாளையொட்டி, திருப்பூரில் மியாவாக்கி முறையில் 12,200 சதுர அடியில் 3,200 மரங்களை நெருக்கமாக நட்டு வளர்த்துவருகின்றனர். இயற்கையாக நாம் பார்க்கக்கூடிய ஒரு அடர்ந்த காட்டை, செயற்கையாக உருவாக்கும் முயற்சிதான் இந்தத் திட்டம்.

சுனாமி தடுக்கும்

“தான் வாழும் மண்ணுக்கும், தங்களது குழந்தைகளுக்கும் மனிதர்கள் செய்யும் கைமாறு மரங்கள் வளர்ப்பது. திருப்பூர் போன்ற தொழிற்சாலைகள் நிறைந்த ஊரில் காற்று மாசு, நீரில் உப்புத்தன்மை நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில், மரங்களைப் பேணிப் பாதுகாத்து, மண்ணின் தன்மையைப் பாதுகாக்க முயல்வதற்கான தொடக்கம் இது” என்கிறார் லீலம்.

வேம்பு, மந்தாரை, விளா, வாகை, பலா, பூவரசு, புங்கம், அரசமரம் என 44 வகையான 3,200 மரக்கன்றுகளை இங்கே நட்டுள்ளனர். இந்த இடத்தில் கூடுதலாக 1,600 மரங்களை நடும் திட்டமும் இவர்களிடம் உண்டு.

மரங்களை நோய்கள் தாக்காவண்ணம் செயற்கை உரங்கள் ஏதுமின்றி, மக்கிய இலைதழைகளைப் போட்டும், அதனுடன் கரும்பு சர்க்கரை மற்றும் கரும்பு சக்கை ஆகியவற்றை இட்டும் கன்றுகளை நட்டுள்ளனர். ஜப்பானில் இதுபோன்று அடர்ந்த காடுகளைக் கடற்கரையில் அதிகம் காணலாம். சுனாமி பாதிப்பிலிருந்து மனிதர்கள் மற்றும் வீடு உள்ளிட்ட உடைமைகளைப் பாதுகாக்க இந்தக் காடுகள் பயன்படுவதால், இந்தத் திட்டம் அங்கே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

நீரும் மண்ணும்

அது மட்டுமல்லாமல் நெருக்கமான மரங்களால் பூமியின் வெப்பம் குறையும். காற்றில் ஈரப்பதத்தைத் தக்கவைப்பது இன்றைய அவசியத் தேவை. அதேபோல், மரங்கள் இருந்தால் மண்ணின் தன்மையும் மாறாமல் இருக்கும். மரங்கள் அதிகமாக வளர்க்கப்படும் பகுதியில் குறிப்பிட்ட எல்லைவரை ஈரப்பதம் அதிகரித்திருப்பது, நிலத்தடிநீரைப் பாதுகாப்பது உட்பட பல்வேறு சிறப்புகள் இந்தத் திட்டத்தின் மூலம் சாத்தியமாகும் என்கிறார்கள் இப்பகுதி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

“இன்றைக்குப் பலருடைய வீடுகளில் இடமில்லை. ஆகவே மரங்களை வளர்க்க முடியவில்லை என்கின்றனர். ஆனால், மிகச் சிறிய இடத்தில் காடுகளை உருவாக்க முடியும் என்பதால், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலரும் ‘மியாவாக்கி முறைப்படி’ தாவரங்களை நடத் தொடங்கியுள்ளனர்.

ஜப்பானியத் தாவரவியலாளர் அகிரா மியாவாக்கி என்பவர் மேற்கொண்ட புதிய முறையை, இன்றைக்கு உலகின் பல நாடுகள் முன்னெடுத்துவருகின்றன. இந்த முறையில் இரண்டு ஆண்டுகளில் நாம் எதிர்பார்த்ததுபோல் கனவுக் காடு உருவாகிவிடும். நிறைய மரங்கள் அதிகரிக்கும்போது, மண்ணின் தன்மை கெடாமல் இருக்கும். அதேபோல் பூச்சிகள், தேனீக்கள் அதிகரித்துப் பூமியின் சூழல் கெடாமல் பாதுகாக்கப்படும். பறவைகள் மூலம் காடும் பெரிதாகும்” என்கிறார் மியாவாக்கி முறையைப் பிரபலப்படுத்திவரும் இயற்கை ஆர்வலர் வின்சென்ட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x