Last Updated : 13 Aug, 2016 12:18 PM

 

Published : 13 Aug 2016 12:18 PM
Last Updated : 13 Aug 2016 12:18 PM

ஆடு கிடை போட்டால் அந்த ஆண்டே லாபம்

அறுவடை முடிந்த பின் அடுத்த சாகுபடிக்கு முன்னதாக, வயலைக் கொஞ்ச காலம் காற்றாடப் போட்டு வைக்கும்போது, அந்த நிலத்தில் ஆடு, மாடு கிடை போட்டால் வயலுக்குச் சத்தான உரம் கிடைக்கும், மண் வளமும் மேம்படும்.

காவிரிப் பாசன மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்த பிறகு ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம்வரை மூன்று மாதங்களுக்கு வயலை ஆறப்போடுவது உண்டு. அந்தக் காலகட்டத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஆடு மேய்ப்பவர்கள் (கீதாரிகள்), ஆடுகளை மந்தை மந்தையாக லாரிகளில் ஏற்றியும், சிலசமயம் மேய்ச்சல் விட்டுக்கொண்டும் காவிரிப் பாசன மாவட்டங்களுக்கு வருகிறார்கள்.

சுடச்சுட உரம்

தஞ்சை பகுதியில் ஆங்காங்கே தங்கிப் பகலில் ஆடுகளை மேய்க்கும் இவர்கள், இரவு நேரத்தில் வயல்களில் பட்டி போடுகிறார்கள். ஆடுகள் வெளியே செல்லாத வகையில் வட்டமாக வலை விரித்து, அதனுள்ளே ஆடுகளை அடைத்துவிடுகிறார்கள். இந்த ஆடுகள் இரவுப் பொழுதை அங்கே கழிக்கின்றன.

இப்படிப் பட்டியில் அடைப்பதில்தான் விசேஷம் அடங்கியிருக்கிறது. காரணம், ஆடுகளின் சிறுநீரும் புழுக்கைகளும் வயலுக்கு அப்படியே கிடைக்கிறது. இதனால் பட்டி அடைக்கப்பட்ட வயலுக்குச் சுடச்சுட இயற்கையான உரம் கிடைத்துவிடுகிறது. ஒரு இரவுக்குப் பட்டியில் அடைத்தால் ஆடு ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் ஆடுகளை வைத்திருப்பவர்களுக்குப் பணம் கிடைக்கிறது.

மாட்டுக் கிடையின் விசேஷம்

அதேபோல் கோடைக் காலத்தில் மாடு மேய்வதற்கான புல் பூண்டுகள் கிடைக்காமல், மாடு வளர்ப்போர் திண்டாடுவது வழக்கம். இவர்களுடைய பிரச்சினையைப் போக்கக் கிராமங்களில் உள்ள மாடுகளை ஒன்றுதிரட்டிக் கிடை போடுவதற்காக அருகருகே உள்ள கிராமங்களுக்கு ஓட்டிச் செல்கிறார்கள். நாட்டு மாடுகள்தான் பொதுவாகக் கிடைக்கு அனுப்பப்படுகின்றன. மாடுகளின் சிறுநீரும் சாணமும் நல்ல இயற்கையான உரம்.

மாடுகள் கிடை போடுவதில் இன்னொரு விசேஷமும் அடங்கியிருக்கிறது. பசு மாடுகளைக் கிடைக்கு அனுப்பினால், செல்லும் ஊரில் பல காளை மாடுகளும் இருப்பதால், கிடை முடிந்து வரும்போது பசு மாடுகள் சினையாகி கன்று போடுவதற்குத் தயாராக வரும். இதற்காகவே மாடுகளைக் கிடைக்கு அனுப்பும் வழக்கமும் உண்டு.

ஒன்றுக்குள் ஒன்றாக

இப்படிக் கிடை போடுவதற்காகக் காவிரிப் பாசன மாவட்டங்களுக்கு வரும் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் ஆறுகளில் தண்ணீர் வந்து சாகுபடிப் பணிகள் தொடங்கும்வரை இங்கேயே தங்கிவிடுகிறார்கள். இது குறித்து ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையைச் சேர்ந்த முருகன், கிடை போடும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்:

கீதாரித் தொழிலில் நாங்கள் காலங்காலமாக ஈடுபட்டுவருகிறோம். ஆடுகளை மேய்ச்சலுக்காகக் கொண்டுவந்துவிட்டு ஆடி, ஆவணி மாதங்களில்தான் ஊர் திரும்புவோம். அதுவரை தஞ்சாவூர் பகுதியில் இருக்கும் கிராமங்களில் தங்கி ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டுபோவோம். எந்த வயலில் கிடை போடுகிறோமோ ஆண்கள் அங்கேயே தங்கிவிடுவோம். பெண்கள் மட்டும் சமைத்துக் கொடுத்துவிட்டு, எங்களுடைய தற்காலிகக் கூடத்தில் தங்குவார்கள்.

இங்கே இருக்கும் சூழல் வேறு, ராமநாதபுரம் சூழல் வேறு. மேய்ச்சல் முடிந்து ஊர் திரும்பும்போது, செம்மறி ஆடுகளின் ரோமத்தை வெட்டிவிடுவோம். அப்படி வெட்டினால்தான், ஆடுகளுக்கு நோய் எதுவும் வராது. ஆடுகளைப் பட்டி போட்டதற்கான கூலியைச் சிலர் அவ்வப்போது கொடுப்பதுண்டு. சாகுபடி முடிந்து அறுவடை காலத்தில் கொடுப்பதும் உண்டு. வருடந்தோறும் பட்டிபோட வருவதால் விவசாயிகளின் நல்லது கெட்டதுகளிலும் நாங்கள் பங்கேற்போம். அதேபோல் இங்குள்ளவர்களும் தாயா, பிள்ளையா பழகுகின்றனர்” என்றார்.

விவசாயிகள் வரவேற்பு

ஆடுகளைக் கிடை போடுவதால் வயலுக்குத் தேவையான உரம் கிடைத்துவிடுகிறது. அடுத்த சாகுபடியின்போது, அதற்கான பலன் கண்கூடாகத் தெரிகிறது. ஆட்டுக் கிடைக்குப் பதிலாக, மாடுகளின் சாண உரம் கொஞ்சம் கொஞ்சமாக மக்கி, அடுத்த சாகுபடியில்தான் பலன் தருகிறது. இதையொட்டித்தான் ‘ஆடு கிடை வைத்தால் அந்த ஆண்டே பலன், மாடு கிடை வைத்தால் மறு ஆண்டு பலன்’ என்னும் சொலவடை காவிரிப் பாசன மாவட்டங்களில் இன்றைக்கும் வழக்கில் உள்ளது. கிடை போடுவதால் கிடைக்கும் இயற்கையாக உரத்துக்கு, காவிரிப் பாசன விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.

முருகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x