Last Updated : 17 Oct, 2015 10:31 AM

 

Published : 17 Oct 2015 10:31 AM
Last Updated : 17 Oct 2015 10:31 AM

அரசுப் பணி துறந்து காளான் வளர்க்கும் ஆசிரியர்: தேசிய விருதுடன் இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார்

அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் காளான் வளர்க்கும் ஆசிரியர், அதற்காகத் தேசிய விருதைப் பெற்றுள்ளார். அத்துடன் நின்றுவிடாமல், காளான் வளர்க்கும் வழிமுறைகளை இளைஞர்களுக்குக் கற்றுத்தந்துவருகிறார்.

கிராமம் தந்த விழிப்புணர்வு

புதுச்சேரி கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவர், அறிவொளி இயக்கத்திலும் ஆர்வத்துடன் இயங்கியவர். பணிக் காலத்தில் காளான் வளர்ப்பு குறித்துக் கேட்டறிந்த அவர், அதில் முழுமையாகப் பயிற்சி பெற்று அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது கோனேரிக்குப்பம் கிராமத்தில் காளான் வளர்ப்பு மற்றும் விதை உற்பத்திப் பண்ணையை நடத்திவரும் இவர், ஏராளமான இளைஞர்களுக்குக் காளான் வளர்க்கப் பயிற்சியும், விற்பனை செய்வதற்குரிய வழிமுறைகளையும் அளித்து வழிகாட்டி வருகிறார். இது தொடர்பாக சுந்தரமூர்த்தி பகிர்ந்துகொண்டது:

அறிவொளி இயக்கத்தில் இருந்த காலத்தில், கிராமங்களுக்குச் செல்லும்போது வேளாண் திட்டங்களில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது காளான் வளர்ப்பு தொடர்பாகக் கற்றுக்கொண்டு,ஆர்வமுள்ள மற்றவர்களுக்குக் கற்றுத்தரத் தொடங்கினேன்.

தேசிய விருது

காளான் வளர்ப்பு ஆர்வம் அதிகரிக்க, 2007-ல் ஆசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். அப்போது எல்லோரும் விநோதமாகத்தான் பார்த்தார்கள். அரசு வேலையை நம்பியிருக்காமல் சுயதொழில் செய்து, முன்மாதிரியாக இருக்க விரும்பினேன். நம் நாட்டில் விவசாயம் சார்ந்த மாற்று உணவுப்பொருள் உற்பத்தி அதிகரிக்க வேண்டும். உணவு காளானுக்கு நம்மூரில் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால், உணவுக் காளான்களைப் பற்றி முழுமையாக அறிந்தேன்.

அசைவ உணவைப் போன்று காளானிலிருந்து அதிகப் புரதம் கிடைக்கிறது. பல்வேறு நோய்களைத் தடுக்கும் உணவாகவும் காளான் உள்ளது. தொடர் முயற்சியாலும் பலருடைய உதவியாலும் பல்வேறு தொழில்நுணுக்கங்களைக் கற்றேன். பிறகு காளான் உற்பத்தியும், காளான் விதை உற்பத்தியும் செய்யத் தொடங்கினேன். அதற்காகச் சிறந்த காளான் மற்றும் விதை உற்பத்தியாளருக்கான தேசிய விருதை 2012-ல் பெற்றேன்.

கூரைக்குடில் சாகுபடி

இப்போது சிப்பிக் காளான், பால் காளான் ஆகியவற்றை உணவுக்காக உற்பத்தி செய்வதுடன், காளான் விதை உற்பத்தியும் செய்துவருகிறேன். இது மிகவும் லாபகரமான தொழில். காளான் சைவ உணவு. ரசாயனப் பொருளோ, பூச்சிக்கொல்லியோ இல்லாமல் விஞ்ஞானரீதியாகக் காளானை உற்பத்தி செய்யலாம். சிப்பிக் காளான் ருசி அதிகமுள்ளது. மசாலாப் பொருட்களை உறிஞ்சிக்கொள்ளும். மிருதுவாக இருக்கும்.

மற்ற காய்கறிகளை நிலத்தில் உழுவார்கள். காளானை மண்ணில் விதை போட்டு உற்பத்தி செய்வதில்லை. விவசாயக் கழிவுகளான வைக்கோல், கம்புத்தட்டை, கேழ்வரகுத் தட்டை, மணிலாக்கொடி, கரும்பு போன்ற தாவரங்களின் சருகு போன்ற பொருட்களை சுத்தமான தண்ணீரில் ஊற வைத்து, தொற்றுநீக்கம் செய்து,அவற்றில் காளான் விதையை இட்டு உற்பத்தி செய்ய வேண்டும்.

நாள் ஒன்றுக்கு 30 கிலோ

காளான் வளர்க்கக் கூரைக்குடில்களை அமைக்க வேண்டும். குடிலில் 400 படுக்கைகள் வரை வைக்கலாம். அவற்றில் காளானை விளைவித்து அறுவடை செய்கிறோம். ஒரு வாரத்தில் ஒரு குடில் நிரம்பிவிடும். ஒரே நாளில் அனைத்துப் படுக்கைகளையும் வெளியே எடுத்துக் காளானை எடுத்துவிட்டு, குடிலைத் தூய்மைப்படுத்திவிடுவோம். இதனால் குடிலில் பூச்சி இருக்காது. மறுபடியும் நல்ல மகசூல் கிடைக்கும். இம்முறையைப் பின்பற்றினால் காளான் உற்பத்தி லாபகரமாக அமையும்.

சிப்பிக் காளான் படுக்கையொன்றில் சுமார் ஒரு கிலோவரை உற்பத்தியாகும். நாள் ஒன்றுக்கு 30 கிலோ சிப்பிக் காளானை எளிதாக உற்பத்தி செய்யலாம். உற்பத்தியாகும் காளானைப் புதுச்சேரி உழவர் சந்தை, பெரிய மார்க்கெட், காளான் சூப் கடைகளுக்கு நானே சென்று விற்பனைக்குக் கொடுத்துவருகிறேன்.

வழிகாட்டி

காளான் வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுவோர்க்குப் புதுச்சேரி அரசின் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் சிறப்பு மானியம் வழங்கப்படுகிறது. நிலையத்தின் விற்பனைக்கூடங்கள் மூலம் காளான் விற்பனை செய்யவும் உதவுகிறார்கள்.

ஆயிரக்கணக்கான இளைஞர் களுக்குக் காளான் வளர்ப்பு பற்றி கற்றுத்தந்துள்ளேன். ஒரு நாள் முழுக்கச் செலவிட்டால் காளான் வளர்ப்பைக் கற்றுக்கொள்ளலாம். படித்த இளைஞர்கள் சம்பளம் தரும் வேலையை மட்டும் நம்பி இருக்காமல், இத்தொழிலில் குறைந்தபட்சம் ரூ. 2 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ. 20 ஆயிரம்வரை வருமானம் கிடைக்கும். சொந்தக்காலில் நிற்கலாம்.

காளான் வளர்ப்பு பற்றி பல இடங்களுக்கு நேரில் சென்றும் விளக்கம் தந்துவருகிறேன். காளான் வளர்ப்பு மூலம் கிராமப் பகுதிகளில் நிச்சயம் வறுமையை வெல்ல முடியும்.

- சுந்தரமூர்த்தி தொடர்புக்கு: 97879 81973

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x