Last Updated : 25 Feb, 2017 11:23 AM

 

Published : 25 Feb 2017 11:23 AM
Last Updated : 25 Feb 2017 11:23 AM

அந்தமான் விவசாயம் 22: தாழை ஒரு அட்சய பாத்திரம்

பண்டைக் காலத்தில் ஆற்றுச் சமவெளிகளும், பின்னர் ஆட்சியாளர்களின் அரவணைப்பும் தற்காலத்தில் அரசின் மேம்பாட்டுத்திட்டங்களும் வேளாண்மை தழைக்கவும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யவும் பயன்பட்டுவருகின்றன. காட்டுக்குள் வாழ்ந்த மனிதன் நகரங்களை அமைத்து வாழப் பழகியபோது, உணவு உற்பத்தியும் பெருகியது அல்லது வேளாண் அறிவின் மூலம் உணவுத் தேவையை மனிதன் பூர்த்தி செய்துகொண்டான்.

ஆனால் உணவுத் தேடல் நிலையிலிருக்கும் ஆதிகுடிகளின் வாழ்விலிருந்து ஒரு படி உயர்ந்தும், நவநாகரிக வாழ்க்கைக்குச் சற்றுக் குறைவாகவும், பசுமைப்புரட்சியின் விதைகள் இன்னும் நுழையாமல் இருக்கும் அந்தமான் தீவுகளில் இருக்கிற இயற்கை வளங்களை மட்டும் வைத்துக்கொண்டு மனித இனம் எவ்வாறு வேரூன்றியது? அவர்களுடைய உணவுத் தேவைகள் எவ்வாறு பூர்த்தியாகின்றன? இவை சிந்திக்கத்தக்க கேள்விகள் மட்டுமல்ல, அறியப்படாமலிருக்கும் இயற்கையின் ஓர் அங்கத்தை அறிவதற்கான ஒரு முயற்சியும்கூட.

இந்தத் தீவுகளில் கடல்வாழ் உயிரினங்களை மட்டும் சார்ந்து மனிதன் வாழவில்லை, நிரந்தரமாக உணவளிக்கும் இயற்கையின் வரம்பெற்ற தாவரங்களை மனிதன் அறிந்துகொண்டதால் மட்டுமே இது சாத்தியமானது. வெப்ப மண்டலத் தீவுகள் அறிந்த முதல் கற்பக விருட்சம் தென்னை, மற்றொன்று பாண்டனஸ் அல்லது தாழை என்று அறியப்படும் தாவரம்.

தாழை என்பது எது?

பாண்டனஸ் எனும் தாவரக் குடும்பம் தமிழில் தாழை, கைதை என்றும் வடமொழியில் கேவ்டா என்றும் அறியப்படுகிறது. இதைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களிலும் வெளிநாட்டு பயணிகளின் பயணக் குறிப்புகளிலும் காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் பாண்டனஸ் தாவரங்கள், பாண்டனஸ், பென்ஸ்டோனியா, புரேஸினிசியா எனும் மூன்று பேரினங்களைச் சேர்ந்தவை எனத் தாவரவியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்தியாவில் பாண்டனஸ் கடற்கரைச் சமவெளிகள், ஆற்று படுகைகள், நீர்நிலைகளின் கரையோரங்கள், அந்தமான் நிகோபார் தீவுகளிலும் பரவிக் காணப்படுகின்றன. பொதுவாக இத்தாவரம் கடல்மட்டத்திலிருந்து 20 மீட்டர் உயரம்வரை வறட்சியைத் தாங்கி உவர்நிலங்களிலும் வளரக்கூடியது. இத்தாவரம் இந்தியப் பெருங்கடல், தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தீவுகளிலும் பரவிக் காணப்படுகின்றன. அந்தமான் நிகோபார் தீவுகளைப் பொறுத்தவரை இத்தாழை மரங்கள் (லிரம், ஒடராடிஸிமஸ் இனம்) இயற்கையின் வெளிப்பாடு மட்டுமல்லாமல், தவிர்க்க முடியாத அங்கமும்கூட.

(அடுத்த வாரம்: தாழையின் பயன்கள்)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x