Last Updated : 04 Feb, 2017 09:11 AM

 

Published : 04 Feb 2017 09:11 AM
Last Updated : 04 Feb 2017 09:11 AM

அந்தமான் விவசாயம் 19: கலப்புப் பண்ணையம் தரும் கூடுதல் பலன்

உணவுப்பொருட்களின் தேவை தொடர்ந்து அதிகரித்துவரும் இந்நாளில் வேளாண் நிலங்களின் பரப்பளவோ குறைந்துவருவதால், வேறு வழிகளில் உற்பத்தியைப் பெருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் பருவநிலை மாற்றம், நுண்ணூட்டச் சத்துகளின் குறைபாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பிரச்சினைகளையும் வேளாண் தொழில் எதிர்நோக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

இச்சூழலில் வேளாண் உற்பத்தியை அதிகரித்து வருமானத்தை உயர்த்தப் பல்வேறு வேளாண்மை, வேளாண் சார்ந்த தொழில்களை இணைந்து நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அப்படிச் செய்யும்போது எந்தவொரு தொழிலும் பண்ணையின் மொத்த வருமானத்தில் 51 விழுக்காட்டுக்கு மிகாமல் இருக்குமானால், அது கலப்புப் பண்ணையம் எனப்படுகிறது.

சில இடங்களில் இத்தொழில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த பண்ணை முறையாக வளர்ந்துள்ளன. அந்தமான் தீவுகளில் இவ்வகை பண்ணை முறையைக் குடிபெயர்ந்தோரும் பழங்குடியினரும் பின்பற்றுவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. கலப்புப் பண்ணைய முறையில் பல்நோக்கு மரங்களும் கால்நடைகளும் மிக இன்றியமையாத அங்கங்களாகும். அவை ஒன்றையொன்று சார்ந்திருப்பதோடு பண்ணை வருவாயை உயர்த்தவும் நிலைப்புத் தன்மையை அதிகரிக்கவும் பெரும் பங்களிக்கின்றன.

பல்நோக்கு மரங்களின் பயன்கள்

அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலத்தின் தன்மை, தேவை, மரங்களின் பண்பு, வளர்ப்புமுறை, சமூகப் பொருளாதாரத் தேவை, பண்ணை முறை, மற்றக் காரணங்களுக்கேற்ப பல்நோக்கு மரங்கள் பல வகைகளில் வேளாண் பண்ணையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இவ்வகை மரங்கள் அதிக மழை பெறும் இத்தீவில் மண்ணரிப்பைக் குறைப்பதிலும் மண்ணின் கார்பன் அளவை அதிகரிப்பதிலும் பெரும் பங்காற்றுகின்றன. அங்கக கழிவுகளின் மறுசுழற்சி மூலம் மண்ணின் வளத்தை மேம்படுத்துவதில் பெரும்பங்காற்றுகின்றன.

சில மரங்கள் உயிர்வேலிகளாகவும் காற்றுத் தடுப்பான்களாகவும் பயன்படுகின்றன. மேலும் மண்ணின் உயிரூட்டத்தை அதிகரித்துப் பயிர்கள் செழித்து வளரப் பேருதவி புரிகின்றன. சில வகை மரங்கள் வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்தி, மண்ணின் வளத்தைப் பாதுகாக்கின்றன.

அந்தமான் தீவுகளின் வேளாண் பண்ணைகளில் பராமரிக்கப்படும் இவ்வகையான மரங்கள் கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனம், பழங்கள், மருந்துப் பொருட்கள், வீட்டுக் கட்டுமானப் பொருட்களைப் பெறப் பன்னெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உழவர்கள் தலைநிமிரவும் பிறர் ஆச்சரியமாகப் பார்க்கவும் பல்நோக்கு மரங்களை உள்ளடக்கிய பண்ணை முறை வாய்ப்பளிக்கிறது.

பொருத்தமான பல்நோக்கு மரங்கள்

இந்த வகையான பல்நோக்கு மரங்களும் (சில இடங்களில் பெரும் புதர்கள் என்றழைக்கப்படுகின்றன) கலப்புப் பண்ணையமும் அந்தமானில் மட்டுமல்லாது பண்டைத் தமிழகத்திலும் பயன்பாட்டில் இருந்து வந்திருக்கின்றன. இதைத் தொல்காப்பியம், மலைபடுகடாம், பெரும்பாணாற்றுப்படை போன்ற பண்டைய தமிழ் நூல்கள் எடுத்துரைக்கின்றன.

வாழ்நிலங்களை ஐந்து திணை மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய மரம், உயிரினங்களைத் தொல்காப்பியம் மிக விளக்கமாக எடுத்துரைக்கிறது. அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இயற்கையைப் பேணுவது நமது கலாசாரத்தில் ஒரு முக்கிய அங்கம். அதேபோல் அந்தமான் நிகோபார் தீவுகளின் வேளாண் பண்ணையில் பெரிதும் பயன்படுத்தப்படும் மரங்கள்: அகத்தி, சீமைஅகத்தி, சுபா புல், முசாண்டா, புங்கம், பேமா, முந்திரி, மா வகைகள், பலா, நாவல், நோனி, தாழம்பூ, பாதாம். இவற்றில் பெருமைபாலனவை மரபியல் பன்முகத்தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

(அடுத்த வாரம்: இயற்கை வேலி வளர்ப்பு முறை)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x