Last Updated : 24 Sep, 2016 11:02 AM

 

Published : 24 Sep 2016 11:02 AM
Last Updated : 24 Sep 2016 11:02 AM

அந்தமான் விவசாயம் 02: மானாவாரி நெல்!

தமிழகத்தைப் போன்று அந்தமானிலும் உணவுப் பயிர்களில் நெல் முக்கியமானது, பல்வேறு வகையான நெல் ரகங்கள் பயன்பாட்டில் இருந்தபோதும், ஜப்பானியர்களால் அறிமுகம் செய்யப்பட்ட சி-14-8 (C-14-8) என்ற புராதன ரகமே பெருவாரியாகப் பயிரிடப்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இது ஒரு பரந்த மரபியல் தன்மை (Broad genetic base) கொண்ட ரகம். அதாவது பயிரின் உயரம், நெற்கதிர்களின் நீளம், அரிசியின் வண்ணம் இதில் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனால் பூச்சி, நோய்களால் முற்றிலும் பாதிக்கப்படுவதில்லை.

இந்த வகை நெற்பயிர் 1-1.5 மீட்டர் உயரம்வரை வளரக்கூடிய ஒளிச்சார்பு (photosensitive) ரகமாகும். இது பெரும்பாலும் தாழ்ந்த கடற்கரைச் சமவெளியிலும், தண்ணீர் அதிகம் தேங்கும் இடங்களிலும் குறைந்த அளவு இடுபொருளை (ஐந்து முதல் 10 டன் மக்கிய தொழுவுரம்) கொண்டு பயிரிடப்படுகிறது. இது ஜூன் ஜூலை மாதங்களில் பயிரிடப்பட்டு ஜனவரி மாதத்தில் அறுவடை செய்யப்படும் ஒரு நீண்டகால ரகம்.

இதற்கு அதிகப்படியான டில்லரிங் தன்மையும், வெட்டவெட்டத் துளிரும் இயல்பும் இருப்பதால் இதன் தழைகள் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது - தீவனத்துக்காக மழைக்காலத்திலும் தீவனத் தட்டுப்பாடு உள்ளபோதும் - அறுவடை செய்யப்படுகின்றன. மேலும் அவ்வாறு செய்வதால் அதிக மழை, புயலால் பயிர்கள் சாய்ந்துவிடுவது தவிர்க்கப்படுகிறது. இந்த ரகம் மானாவாரியாக ரசாயன உரங்கள் இன்றி அங்கக வேளாண்மை முறையில் பயிரிட ஏற்றது.

ஒருவேளை பருவமழை முன்னதாக ஆரம்பித்துவிட்டால், ஆகஸ்ட் மாதத்தில் பயிரிட்டு ஜனவரியில் அறுவடை செய்ய இயலும் என்பது இதன் சிறப்பம்சம். அவ்வாறு அறுவடை செய்யும்போது தரையில் இருந்து ஒன்று முதல் ஒன்றரை அடி உயரத்திலேயே கதிர்கள் அறுவடை செய்யப்படுகின்றன. பின்னர், பிப்ரவரி மாதத்தில் எஞ்சிய தழைகள் நிலத்தில் அழுத்தி உழப்படுகின்றன. அவ்வாறு செய்வதால் நிலத்தின் அங்ககத்தன்மை (கரிம அளவு) அதிகரித்து, வளம் கூடுகிறது.

மண்ணின் ஈரத்தன்மை நீண்ட நாட்களுக்கு நிலைத்து நின்று நெற்பயிர்கள் மானாவாரியாக வளர உதவுகிறது. இந்த நெல் ரகம் பயிர் மேலாண்மை, வளரும் சூழலுக்குத் தகுந்ததுபோல் ஒரு ஹெக்டேருக்கு 2.5 முதல் 5.0 டன்வரை மகசூல் தரவல்லது. மேலும் வடக்கு அந்தமானில் முதல் பயிர் டிசம்பரில் அறுவடை செய்யப்பட்டு மறுதாள் பயிரில் இருந்து 1.0 முதல் 1.5 டன்வரை மகசூல் பெறப்படுகிறது.

ஒட்டும்தன்மையுள்ள கரன்

இந்த ரகம் தவிரப் பர்மாவில் இருந்து இடம்பெயர்ந்த ‘கரன்’ என்ற பெயர் கொண்ட பழுப்பு மற்றும் வெள்ளை வண்ணம் கொண்ட ஒட்டும் தன்மையுள்ள (sticky) ஜப்பானிகா வகையைச் சேர்ந்த நெற்பயிரைப் பழங்குடியினர் பல்லாண்டுகளாகப் பயிரிட்டுவருகின்றனர். இது குறைந்த அளவு இடுபொருளில் மானாவாரியாக வளரும் தன்மையுள்ளது. விளைச்சல் குறைவாக இருக்கும்போதும் அதிகளவு இரும்பு, புரதச்சத்து இருப்பதால் நீரழிவு நோயாளிகளுக்கு உகந்தது.

இந்த நெல் ரகங்கள் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகம், கேரளத்தில் இன்றும் பழுப்பு வண்ண நெல் ரகங்கள் பயன்பாட்டில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்த நெல் ரகங்கள் குறைந்த இடுபொருளுடன், பருவநிலை மாற்றங்களைத் தாங்கி, அங்கக வேளாண்மை முறையிலும் பயன்தரக் கூடியவை என்பதால், விவசாயிகள் இன்றும் இந்த ரகங்களைப் பயிரிட்டுப் பயனடைந்துவருகின்றனர்.

தற்போது இந்தப் பாரம்பரிய நெல் ரகங்களின் ஒரே மாதிரியான தோற்றத் தன்மையை ஏற்படுத்தவும் சந்தை மதிப்பை அதிகரிக்கும் உத்திகளிலும், ஆராய்ச்சியாளர்களும் வேளாண் துறையினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த வகை நெற்பயிர்களுக்கான சந்தை மதிப்பு குறைவாக இருக்கும்போதும், உடல் ஆரோக்கியத்தையும் மண்வளத்தையும் பேணுவதால் எதிர்காலத்தில் இவற்றுக்கான தேவை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

(அடுத்த வாரம்: வாழ்வாதாரம் தரும் நில மேலாண்மை)
கட்டுரையாளர், அரசு வேளாண் அலுவலர்
தொடர்புக்கு: velu2171@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x