Published : 28 Jun 2016 11:44 AM
Last Updated : 28 Jun 2016 11:44 AM

வேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம்

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் (பி.எஸ்.என்.எல்.) நிறுவனம் இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியில் 2,700 காலியிடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நிரப்பவிருக்கிறது. இதில், சென்னை டெலிபோன்ஸ் வட்டத்தில் 80 காலியிடங்களும், தமிழ்நாடு வட்டத்தில் 198 காலியிடங்களும் உள்ளன. இளநிலைப் பொறியாளர் பதவியானது முன்பு தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உதவியாளர் என்று அழைக்கப்பட்டது.

தேவையான தகுதி

விண்ணப்பதாரர்கள் தொலைத்தொடர்பு, எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல், ரேடியோ, கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமா அல்லது பட்டம் (பி.இ., பி.டெக்.) பெற்றிருக்க வேண்டும்.

மேலும், பி.எஸ்சி. (எலெக்ட்ரானிக்ஸ்), பிஎஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) எம்எஸ்சி (எலெக்ட்ரானிக்ஸ்) பட்டதாரிகளும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பி.எஸ்.என்.எல். ஒரு மத்திய அரசு நிறுவனம் என்பதால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வயது வரம்பில் உரிய தளர்வு அளிக்கப்படும். அதன்படி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்த்தப்படும்.

தேர்வு விதிகள்

தகுதியான நபர்கள் ஆன்லைன்வழி போட்டித் தேர்வு மூலம் தேர்வுசெய்யப் படுவார்கள். இதில், பொது விழிப்புத் திறன், அடிப்படை பொறியியல், சம்பந்தப் பட்ட பொறியியல் பிரிவு ஆகியவற்றில் இருந்து மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். தேர்வு நேரம் 3 மணி நேரம். ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்க வேண்டும்.

செப்டம்பர் மாதம் 25-ம் தேதி அன்று ஆன்லைன் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தேர்வு நடைபெறும். தேர்வுக்கு ஜூலை 10-ம் தேதி முதல் ஆன்லைனில் (wwww.externalexam.bsnl.co.in) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 10-ம் தேதி ஆகும். தேர்வுக்கான பாடம், பணி நியமன விதிமுறைகள், சம்பளம் மற்றும் பல்வேறு படிகள் உள்ளிட்ட இதர விவரங்களை பி.எஸ்.என்.எல். இணையதளத்தில் (www.bsnl.co.in) விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x