Published : 25 Oct 2016 11:25 AM
Last Updated : 25 Oct 2016 11:25 AM

வேலை வேண்டுமா? - நிர்வாக அதிகாரி ஆக வேண்டுமா?

அரசுத் துறையில் ஆயுள் காப்பீட்டுக்கு எல்.ஐ.சி. எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் உள்ளது. அதைப் போல வாகனங்கள், பொருள்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த காப்பீட்டுச் சேவைகளை வழங்குவதற்கென மத்திய அரசின் 4 பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் முன்னணிக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் நிர்வாக அதிகாரி பணியில் (Administrative Officers- General) 300 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப இருக்கிறது. இதற்காக எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.

கல்வித் தகுதி:

நிர்வாக அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் தேவை. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் 55 சதவீத மதிப்பெண் போதுமானது.

வயதுத் தகுதி:

வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

இந்த நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் என்பதால் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத் தேர்வில் முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு என 2 தேர்வுகள் இருக்கும். இரண்டுமே ஆன்லைன் வழியில்தான் நடைபெறும்.

முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதம், ரீசனிங் ஆகிய 3 பாடப் பிரிவுகளிலிருந்து 100 கேள்விகள் கேட்பார்கள். இதற்கு 100 மதிப்பெண். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வு எழுத வேண்டும்.

மெயின் தேர்வில் ரீசனிங், ஆங்கிலம், கணிதம், பொது அறிவு ஆகிய 4 பகுதிகளிலிருந்து தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். இதற்கு 200 மதிப்பெண்.

விரிவாக விடை எழுதும் (Descriptive Type) தேர்வும் கூடவே இருக்கும். அதில் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுதல், சுருக்கி எழுதுதல் (Precis Writing), கடிதம் எழுதுதல் ஆகியவை இடம்பெறும். இந்தத் தேர்ச்சி பெற்றாலே போதும்.

மூன்றாவதாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

இறுதியாக, மெயின் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிப்பார்கள். அதன் அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும்.

விண்ணப்பிக்க உரிய கல்வித் தகுதி மற்றும் வயது தகுதி உடைய பட்டதாரிகள் >www.newindia.co.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி நவம்பர் 1-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பமுறை, தேர்வுமுறை, தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம். நிர்வாக அதிகாரிகளுக்கு ஆரம்ப நிலையில் ரூ.51 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். நேரடியாக நிர்வாக அதிகாரி (ஸ்கேல்-1) பணியில் சேருபவர்கள் உதவி நிர்வாக மேலாளர், உதவி மேலாளர், துணை மேலாளர், மேலாளர், கோட்ட மேலாளர், பொது மேலாளர் எனப் பதவி உயர்வு பெறலாம். இளம் வயதில் இப்பணியில் சேர்ந்தால் திறமை இருப்பின் நிறுவனத்தின் தலைமைப் பதவியான தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியையும் அடையலாம்.

முக்கியத் தேதிகள்:

முதல் நிலைத் தேர்வு, 2016 டிசம்பர் 17 , மெயின் தேர்வானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி 2016 நவம்பர் 1. விவரங்களுக்கு: >www.newindia.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x