Published : 09 Feb 2016 11:27 AM
Last Updated : 09 Feb 2016 11:27 AM

விவாதம்: தற்கொலைகளைத் தடுக்க முடியாதா?

மாணவர்களின் தற்கொலைகளையொட்டி இந்திய அரசின் முன்னாள் செயலாளர் பி.எஸ்.கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு) ஒரு விவாதத்தைக் கடந்த வார ‘வெற்றிக்கொடி’யில் முன்வைத்தார். அதன் தொடர்ச்சியாக வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகள் இங்கே:

கட்டுரையில் கிருஷ்ணன் மூன்று விஷயங்களை முன்வைக்கிறார். 1.தலித் மற்றும் பழங்குடியினர் களிடத்தில் முன்னேறிய வகுப்பினர் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும். 2. தனியார் கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோர்க்கான இட ஒதுக்கீடு அமல்படுத்திட வேண்டும். 3.அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணம் அமல்படுத்தப்படுகிறதா என்பதைக் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவை சமூக நீதிக்கு வழி வகுக்கும். கல்விக் கட்டணக் கொள்ளையையும் தடுக்கும். ஆனால், மாணவர்களின் தற்கொலையைத் தடுப்பதற்கு இவை போதுமானவை அல்ல.

மனிதர் உயிர் வாழ்தலுக்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இன்று கல்வி கருதப்படுகிறது. இந்தக் கருத்து குழந்தைகள் மீது திணிக்கப்பட்டு, கல்விதான் எதிர்காலம் என்ற நிலை உருவாகிவிட்டது. இதை மாணவர்களும் நம்ப தொடங்கிவிட்டனர். இதிலிருந்து அவர்கள் தப்பித்துவிடாதபடி சமூகத்தின் பொதுப்புத்தி விமர்சனங்களை முன்வைக்கிறது.

மாணவர்கள் விரும்பியோ விரும்பாமலோ கல்வியை இறுகப் பற்றிக்கொள்கின்றனர்.

கல்விதான் துணை, எதிர்காலம், பாதுகாப்பு என்ற ஒரு வழிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். மாணவர்களின் கல்வி மற்றும் வேலை பற்றிய கனவுக்கு ஆபத்து ஏற்படும்போது தங்களின் எதிர்காலம் சூனியமாகி விட்டதைப்போல் அச்சமடைகின்றனர். இது அவர்களுக்கு மனப் பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறது. அரசும் தனது பொறுப்புகளிலிருந்து நழுவிக் கொள்கிறது. ஆதிக்க சக்திகளுக்கு துணை போகவும் செய்கிறது. அதனால் மாணவர்கள் பாதுகாப்பின்மையை உணர்கின்றனர். இந்த நிலையில்தான் மனம் வெதும்பித் தங்களை மாய்த்துக்கொள்கின்றனர்.

- தங்கபாண்டி, ஒசூர்.



பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி ரீதியில் முன்னேற்றம் காண்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்கச் சக்திகள்தான் இதுபோன்ற செயல்களைச் செய்கிறார்கள்.

தனியார் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும். அங்கும் சமூக நீதி வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களில் நிலவும் நவீனத் தீண்டாமையைக் களையவும் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- சனா பாரூக், வி.களத்தூர்.



தற்கொலையை நமது சுயகட்டுப்பாடு மூலம்தான் தடுக்க முடியும். அரசாங்கமோ, எந்த ஒரு நிறுவனமோ தனிப்பட்ட நபரோ அதைத் தடுக்க முடியாது. இது பற்றி ஒரு சட்டம் வந்தால் அதிலும் ஓட்டைகள் இருக்கும். அந்த ஓட்டைகளைப் பயன்படுத்தி அவர்கள் பணம் பண்ணுவார்கள். எதிர்காலத்திலும் இதுவே நடக்கும். ஹைதராபாத்திலும் இதற்கு முன்னால் 9 பேர் செத்துள்ளனர். அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி அவர்கள் வாழ்வில் ஜெயித்துக்காட்டுவதே ஒரே வழி. தற்கொலைகளால் எதுவும் மாறாது.

- யுவ ரஞ்சனி, மின்னஞ்சல் மூலமாக



சமூக அடையாளமாக சாதியம் இல்லாமலிருந்தால் சாதிய அடையாளம் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப் பட்டால் தற்கொலைகளைத் தடுக்க முடியும்.

நமது சமூகத்தின் கூறுகளான சாதியமும், தீண்டாமையும் அதனால் விளைந்த கொத்தடிமை அமைப்பு சமூகச் சூழலும், அது உருவாக்கிய சமமற்ற மனித மதிப்பீடுகளும் ஒரு சமூக மனிதனைக் குழந்தையிலிருந்து தனிமைப்படுத்தி, மனக் கவலையோடும், மன வலியோடும் வாழ வைத்துத் தொடர்ந்த வறுமையிலும் தள்ளிவிடுகிறது. இவையெல்லாம் நீங்கும் என்றும், சமதர்ம, சாதி மதப் பாகுபாடற்ற சமுதாயம் அமையும் என்றும் பெரிய நோக்கத்தோடுதான் அரசியல் சட்டம் இயற்றப்பட்டது.

இந்தியாவில் காலங்காலமாக ஊறி, உளுத்துப்போயுள்ள சாதியமும் அது உருவாக்கி நடைமுறையில் உள்ள அடுக்ககச் சமூக அமைப்பும் தான் அடிப்படையான பிரச்சினை.

- எம்.எஸ்.சௌந்தரராஜன், கோயம்புத்தூர்.



இட ஒதுக்கீடு ஒரு புறம் இருக்கட்டும். உதவித்தொகை மறுக்கப்பட்டதே, அதற்குத் தற்போது உள்ள சட்டம் எனச் சொல்கிறது? அது பாலுக்குப் பூனை காவல் என்ற நிலையில்தான் உள்ளது.

இட ஒதுக்கீடு கிடைத்தால் மட்டும் இது போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்து விடும் என்பது சரியல்ல. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எப்படி இடஒதுக்கீட்டுச் சட்டம் வரும்? அத்தனை தனியார் கல்வி நிறுவனங்களும் அரசியல்வாதிகளின் கைகளில் இருக்கின்றன. அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களிலும் ஆளும் அரசுக்கு ஆதரவான ஆட்கள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். ஆதரவாக மாற மறுப்பவர்கள் மாற்றப்படுகிறார்கள்.

கல்வித்துறையின் சீரழிவு நாட்டின் மிகப் பெரும் நோய் ஆகிவிட்டது.

கல்வித்துறையில் அரசியல்வாதிகள் நுழையக்கூடாது. இதுவரை தவறு செய்தவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். கல்வித் துறைக்குத் தன்னாட்சி அதிகாரம் தர வேண்டும். கல்வித்துறையில் துணைவேந்தர் முதல் துப்புரவுப் பணியாளர்வரை தகுதியின் அடிப்படையில் பொதுவெளியில் நியமனம் நடைபெறுதல் வேண்டும் .

பல்கலைக்கழக மானியக் குழுவின் கல்வி நிறுவன ஆய்வு முறை மறுஆய்வு செய்யப் பட வேண்டும் . அந்த ஆய்வின்போது அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களும் பங்குகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். கல்லூரிகளுக்கான தர அங்கீகாரம் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதைப் பகிரங்கப்படுத்த வேண்டும்.

உதவித்தொகை மாணவர்களுக்குச் சரியாய் போய்ச்சேர்ந்ததா என அறிய, அதற்கான நிலையானதொரு நடைமுறையைக்கொண்டு வர வேண்டும். அத்தனை கல்வி நிறுவனங்களிலும் மாணவர் அமைப்பு தேர்தல் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் .

- கே.முருகேசன், எம்.டெக் மாணவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி- 620024



‘தற்கொலைகளைத் தடுக்க முடியாதா?’ என்னும் கட்டுரை, போகிற போக்கில் எஸ்.வி.எஸ்.யோகா மருத்துவக் கல்லூரி மாணவிகளும் ‘தற்கொலை' செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிறது. இது விவாதத்துக்கு உகந்தது அல்ல. அப்பட்டமான நழுவல். மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ரோஹித் வெமுலாவை தலித் அல்ல என்று மறுதலிப்பதற்கும் மாணவிகள் கொலை செய்யப்பட்டுக் கிணற்றில் வீசப்பட்டதைத் தற்கொலை என்று ‘முடிவு' கட்டுவதற்கும் யாதொரு வித்தியாசமும் இல்லை. கொலையும் தற்கொலையும் அடுத்த குடும்பத்து நிகழ்வாகவே அவதானிக்கப்படும் வரை, அரசியல் ‘கட்டுமானங்களும்' அதிகார ‘அறிக்கை'களும் தொடரத்தான் செய்யும். நாவரசன் படுகொலையின்போதே பாடம் கற்காத பாடசாலைகள், வெறும் கரன்சி எண்ணும் ‘அரசியல்' எந்திரங்களாகவே செயல்படும்.

- மா.காளிதாஸ், மதுரை.



சட்டத்தின் மூலம் எந்த ஒரு துவேஷத்தையும் தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம். பாதிக்கப்படுபவர்களுக்கு விழிப்புணர்வு வந்தாலொழிய இந்த மாதிரித் தற்கொலை களைத் தடுப்பது இயலாது. படிப்பவர்கள் தனக்காகவும் தங்கள் குடும்பத்தினர் நலன் காக்கவுமே இருக்க வேண்டும். மற்றவர்கள் தரக்குறைவாகப் பேசுவதையோ, உதாசீனப் படுத்துவதையோ பொருட்படுத்தாமல் தங்கள் கடமையைச் சரியாகச் செய்து வாழ்வில் உயர வேண்டும். எந்த விமர்சனங்களையும் மனதில் கொள்ளாமல் வெற்றியை எட்ட வேண்டும்.

தனியார் கல்வி நிறுவனங்களோ அரசு கல்வி நிறுவனங்களோ, அவற்றில் பலதரப்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். எப்படியும் சலசலப்புகள் வரத்தான் செய்யும். அதைப் பொருட்படுத்தாமல் கல்வியைக் கற்றுக்கொள்வதில்தான் பிற்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் திறமையைக் காட்டவேண்டும் .

- பெ.குழந்தைவேலு, வேலூர். நாமக்கல் மாவட்டம்.



கல்வி என்பது முழுக்க வியாபாரமாகி விட்டது. கட்டணம் பெரும்பாலோருக்கு எட்டாக்கனி ஆகிவிட்டது. கல்லூரி அரசியல் சாதாரண மக்களைப் படாத பாடு படுத்துகிறது. வேண்டாத மக்களைப் பழிவாங்கச் சந்தர்ப்ப சூழ்நிலைகளை நிர்வாகம் பயன்படுத்துகிறது.

கல்லூரி மாணவர் தற்கொலைகள் எல்லாம் இந்த ரகத்தைச் சேர்ந்தவை. தனியார் கல்லூரிகள் இட ஒதுக்கீடு, கட்டணக் குறைப்பு போன்றவற்றைக் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். தவறுவோர் மீது மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் கல்லூரிப் பருவத்தில் அரசியல் ஈடுபாட்டைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர் மாணவர்களுக்கு நல்ல சூழ்நிலையை வீட்டில் உருவாக்க வேண்டும். இன, மத, மொழி வேறுபாடுகள் மாணவப் பருவத்தில் களையப்பட வேண்டும்.தற்கொலைகள் நிச்சயம் குறையும்.

- ஜீவன். பி.கே., கும்பகோணம். 1.



தற்கொலைகளை முற்றிலும் தடுத்துவிட முடியாது. தலித் மாணவர்கள், தலித் அல்லாத மாணவர்கள் என்று தனித்தனியாகப் பிரித்துப் பார்க்காமல் சேர்த்துத்தான் பார்க்க வேண்டும். பொதுவாக மாணவர்கள் தற்கொலை என்றுதான் பார்க்க வேண்டும்.

மற்ற நாடுகளில் முதலாளி அரசியல், தொழிலாளி அரசியல், கருப்பின மக்கள் அரசியல், கருப்பினம் அல்லாத மக்களின் அரசியல் என்று இருக்கிறது. ஆனால், நம் நாட்டில் இது மட்டுமல்லாமல் வாக்குவங்கி அரசியல் என்பதும் இருக்கிறது.

- ப.சிவதாணு பிள்ளை, நாகர்கோவில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x