Last Updated : 25 Oct, 2016 11:35 AM

 

Published : 25 Oct 2016 11:35 AM
Last Updated : 25 Oct 2016 11:35 AM

வடகிழக்கு மாநிலங்கள் - அசாம்: நுழைவாயிலில் ஓர் எரிமலை

வற்றாத ஜீவநதியாக பிரம்மபுத்ரா அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து அசாமில் நுழையும்போது, இரட்டை ஜடை போல் இரண்டாகப் பிரிந்து 1,000 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. மாநிலத்தின் உயிர்மூச்சாக இருப்பதும், அதே நேரத்தில் வெள்ளப் பெருக்கால் ஆண்டுதோறும் துயரத்தைத் தருவதும் இதே நதிதான். சில பகுதிகளில் 16 கிலோமீட்டர் அகலமாக ஓடும் இந்த ஜீவநதி, அப்போது பெருங்கடலாகத் தோன்றும் காட்சி கண்ணை விட்டு அகலாத அற்புதம்.

மாநில வளர்ச்சி

1824-ல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்குள் வந்த மேற்கு அசாமைத் தொடர்ந்து படிப்படியாக இதர பகுதிகளும் அதன் கைக்குள் வந்தன. முதலில் அன்றைய வங்காள ராஜதானிக்குள் ஒரு பகுதி எனத் தொடங்கி, 1937-ல் தனிச் சட்டமன்றம் என நிர்வாக ரீதியில் வளர்ந்த இம்மாநிலம் தற்போது 78,440 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பும் 3.12 கோடி மக்கள்தொகையும் கொண்டதாக அமைகிறது.

பள்ளத்தாக்கில் பணம்பார்க்க முனைந்த கம்பெனி, அங்கேயே விளைந்த தேயிலையைத் தோட்டங்களாக மாற்றியது. 19-ம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் ஏற்பட்ட பஞ்ச நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, இந்தத் தோட்டங்களில் வேலைசெய்வதற்காக இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள சோட்டாநாக்பூர் பகுதியில் சந்தால் பழங்குடி இனத்தவரிலிருந்து அன்றைய மதராஸ் பகுதி வரை பஞ்சத்தில் வாடிய மக்களை ஏமாற்றி அழைத்துச் சென்று கொத்தடிமைகளாக வைத்திருந்தனர். தொடக்க நாட்களில் புதிய பருவ நிலையால் நோய்வாய்ப்பட்டு இவர்களில் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்தனர்.

இத்தகைய ஆட்சேர்ப்புக்கு ஆட்சியாளர்கள் அனைத்து வகையிலும் உதவினார்கள். இந்தத் தொழிலாளர்களின் மீதான நூற்றாண்டு கால வன்முறை, 1860 முதல் 1920 வரையான அவர்களின் கிளர்ச்சிகள் ஆகியவை தனி வரலாறு. எனினும் இப்பகுதியில் கோபிநாத் பர்தோலாய் தலைமையில் வங்காளிகளின் ஆதரவுடன் வலுப்பெற்ற விடுதலை இயக்கத்தில் இவை எவ்வித அசைவையும் ஏற்படுத்தவில்லை. அசாமின் இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட இந்தக் குடியேறிகள் இன்றுவரை வெறுக்கப்படுகின்றனர் என்பது மிகப் பெரிய நகைமுரணே.

கறுப்புச் சட்டம்

மறுபுறம் மாநிலத்தில் இருந்த பழங்குடிகளான நாகா, மிசோ இனத்தினர் இந்தியாவுடன் இணைவதை எதிர்த்துத் தனிநாடு கோரினார்கள். இந்திய ராணுவம் ஆயுத பலத்தால் அடக்க நினைத்தது. விளைவு, எதிர்ப்பாளர்கள் பர்மா, சீனா, அன்றைய கிழக்கு பாகிஸ்தான் போன்றவற்றுக்கு இடம்பெயர்ந்து ஆயுதப் பயிற்சி பெற்ற கிளர்ச்சியாளர்களாக உருமாறினார்கள். இதை ஒடுக்க 1958-ல் போடப்பட்ட ராணுவப் படைகளின் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (AFSPA) என்ற கறுப்புச் சட்டமே இன்று வடகிழக்குப் பகுதியில் (திரிபுரா நீங்கலாக) கோலோச்சிவருகிறது.

படிப்படியாக அரசு பணிந்ததன் விளைவாகவே பல்வேறு ஒப்பந்தங்களைத் தொடர்ந்து அசாமைப் பிரித்து நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் எனப் புதிய மாநிலங்கள் உருவாயின. மாநிலத்தின் மீதமுள்ள பகுதிகளில் இருந்த போடோ, கச்சார், காரோ இனக் குழுக்களைத் திருப்திப்படுத்த சுயாட்சிப் பகுதிகள் உருவாக்கப்பட்டன. இதற்கிடையே இந்தியப் பிரிவினையின்போதும், வங்கதேச விடுதலையின்போதும் அதிகரித்த குடியேற்றங்கள் இந்த மாநிலத்தை இன்றுவரை எரிமலையாகக் கொந்தளிக்கச் செய்துவருகின்றன.

தொழில் நிலை

வடகிழக்கின் இதர பகுதிகளை ஒப்பிடும்போது பெரிதாக வளர்ச்சி பெற்றதாக அசாம் தோன்றியபோதிலும், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத் தேயிலைத் தோட்டங்கள், அதைச் சார்ந்த தொழில்கள், கச்சா எண்ணெய் (இந்தியாவின் 15 சதவீத பெட்ரோல் சப்ளை இங்கிருந்துதான் வருகிறது) இருந்தபோதிலும், விடுதலைக்குப் பின்பு தொடங்கிய ஆயுதக் கிளர்ச்சிகளில் தொடங்கி, வங்காளி-இந்து குடியேறிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக 1980-ல் தொடங்கிய அசாமிய மாணவர்கள் கிளர்ச்சி, குடியேறிகளான வங்காளி முஸ்லிம்களுக்கு போடோ இனத்தவரின் எதிர்ப்பு எனத் தொடர்ந்து கொதிநிலையில் எரிமலையாய் இருக்கும் இம்மாநிலத்தில் புதிய தொழில்களுக்கான சூழ்நிலை உருவாகவே இல்லை என்பதே வருத்தமான உண்மை.

மாநிலத்தின் வருவாய் பெரும்பாலும் தேயிலையில்தான் கிடைக்கிறது. அதிகமான மக்கள்தொகையின் விளைவாக மத்திய அரசு வழங்கும் மானியத்தைக் கொண்டே அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயமும் மாநிலத்துக்கு உள்ளது. மேலும் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, அதன் விளைவாகப் பயிர்கள் நாசம் என இந்த மாநிலம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கும் குறைவில்லை.

வேலைவாய்ப்பு

விடுதலைக்குப் பிறகு அதிக அளவில் கல்வி நிறுவனங்கள் உருவானதன் விளைவாக எண்ணற்ற பட்டதாரிகள் உருவாகி, அந்த மாநிலத்தில் கிடைக்கும் வேலைக்குச் செல்லவோ இந்தியாவின் வேறு மாநிலங்களுக்குப் படையெடுக்கவோ வேண்டியிருக்கிறது. மேலும் குடியேறிகள் மிகக் குறைந்த ஊதியத்துக்கும் வேலை செய்யத் தயாராக இருக்கும் நிலையில் அசாமிய இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் வேலையின்மை மேலும் அதிகமான பதற்றம் உருவாக வழியேற்படுத்துகிறது.

இப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு பழங்குடி இன மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் அதிகரித்துவரும் கோரிக்கைகள், குடியேறிகளின் பிரச்சினை, இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்தி மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்க முடியாத நிலை ஆகியவை இப்பகுதியின் பெரிய மாநிலமான அசாமைச் செயலற்ற நிலையில் ஆழ்த்தியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x