Last Updated : 25 Apr, 2017 11:19 AM

 

Published : 25 Apr 2017 11:19 AM
Last Updated : 25 Apr 2017 11:19 AM

யூ.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்வு: உங்களை நோக்கிப் பாயும் கேள்வி!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான நேர்முகத் தேவு வருகிற மே மாதம் புதுடெல்லியில் நடைபெற உள்ளது. ஏற்கெனவே முதல் கட்டமாக நடத்தப்படும் தேர்வுகளில் எல்லாம் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வில் பங்குபெற முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.

அதே நேரத்தில் பொதுவாக முதல் நிலைத் தேர்விலும், பிரதானத் தேர்விலும் மிகச் சிறப்பான மதிப்பெண் பெறுபவர்கள்கூட இடறிவிழுவது நேர்முகத் தேர்வில்தான். ஆகையால் யூ.பி.எஸ்.சி. கனவு கொண்ட அனைவரும் ஆரம்பத்திலிருந்தே நேர்முகத் தேர்வையும் மனதில் நிறுத்திக்கொண்டு தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆளுமைத் திறன் உள்ளதா?

முதலாவதாக, நேர்முகத் தேர்வுக்கு நீங்கள் எப்படித் தயாராக வேண்டும் என்பதைத் தாண்டி நேர்முகத் தேர்வில் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

யூ.பி.எஸ்.சி.க்கான நேர்முகத் தேர்வில் அறிவைவிடவும் அதிகமாகச் சோதிக்கப்படுவது அப்பதவிக்குத் தேவையான ஆளுமைத் திறன் ஒருவரிடம் உள்ளதா என்பதுதான். தகவல் தொடர்புத் திறன் (Communication skill), முடிவெடுக்கும் திறன் (Decision making skill), நிர்வாகத் திறன் (Administrative skill), பகுப்பாய்வுத் திறன் (Analytical skill) ஆகியவை இதில் சோதிக்கப்படும்.

மேலும் நேர்முகத் தேர்வில் பங்குபெறுபவரின் மாநிலம் குறித்த பொதுஅறிவு, தேசம், வெளியுறவுக் கொள்கை, அரசியல் மற்றும் பொருளாதாரம், கலை, பண்பாடு குறித்துக் கேள்விகள் எழுப்பப்படும். அதை அடுத்து இந்திய அரசியலமைப்புச் சட்ட நுணுக்கங்கள் குறித்த தெளிவு உள்ளதா என்பது தீவிரமாகச் சோதிக்கப்படும்.

அக்கம் பக்கம் பாரடா!

இவை மட்டுமல்லாமல் இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வெளியுறவு பணி, இந்திய வருவாய் பணி போன்ற பல்வேறு பணிகள் தொடர்பான கேள்விகளும் இதில் அடங்கும்.

நேர்முகத் தேர்வை எதிர்கொள்பவரின் பெயர், அவர் பெற்றோரின் பணி, பிறந்த ஊர்-மாவட்டம், படித்த பள்ளி, கல்லூரி, படித்த இளங்கலை/ முதுகலை/ முனைவர் பட்டப்படிப்பு, பிரதானத் தேர்வில் தேர்ந்தெடுத்த விருப்பப் பாடம் (Optional Subject) உள்ளிட்டவை தொடர்பான கேள்விகளும் இடம் பெற வாய்ப்புண்டு.

குறிப்பாக விருப்பப் பாடம் தொடர்பாக அதிகக் கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புள்ளதால் மாணவர்கள் அவ்விருப்பப் பாடம் தொடர்பான நடப்பு நிகழ்வுகளை (Current affairs related with optional subject) நன்கு அறிந்திருக்க வேண்டும்.

எளிமையான கேள்விகள்தானா?

நேர்முகத் தேர்வு வழக்கமாக எளிமையான கேள்விகளில் இருந்துதான் தொடங்கும். அவற்றில் சில இதோ:

1. உங்களுடைய பெயரின் அர்த்தம் என்ன?

2. உங்கள் பெயரைக் கொண்ட பிரபலங்கள் தெரியுமா?

3. உங்களுடைய தந்தையின் பணியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட நற்பண்புகள் என்ன?

l இருப்பினும் அதே பணியை நீங்கள் ஏன் தேர்ந்தெடுக்கவில்லை?

4. உங்களுடைய சொந்த ஊர் அல்லது மாவட்டத்தின் வரலாறு என்ன?

l அங்குள்ள வரலாற்று சின்னங்கள், நினைவிடங்கள், புராதனக் கட்டிடங்கள், கோயில்கள் எவை?

5. உங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டசபை உறுப்பினர்களின் பெயர் என்ன?

6. உங்கள் மாவட்டத்தில் நடைபெறும் முக்கியத் தொழில்கள், விவசாயம் பற்றிச் சொல்ல முடியுமா?

7. உங்கள் மாவட்டத்தின் தலையாய பிரச்சினைகள் எவை? (நிர்வாகம், நகரக் கட்டமைப்பு, நீர் மேலாண்மை, போக்குவரத்து மேலாண்மை, சுகாதாரம், சமூகப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் சீர்கேடு, அம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் போன்றவற்றை உள்ளடக்கிய பதில் தரப்பட வேண்டும்.)

இவை தவிரவும் மாநில, தேசியத் தலைநகரம் தொடர்பான விஷயங்களை உங்களுடைய மாவட்டத்துடன் ஒப்பிட்டும் கேள்விகள் எழுப்பப்படலாம்.

அதையும் தாண்டி தெரியுமா?

உங்களுடைய பட்டப் படிப்பு, யூ.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ந்தெடுத்த விருப்பப் பாடம் தொடர்பாகக் கேட்கப்படும் கேள்விகளில் சில இதோ:

1. நீங்கள் இப்படிப்பைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

2. உங்கள் பட்டப் படிப்பில் பாடப் பிரிவில் பயின்றவற்றை எப்படி மாவட்ட நிர்வாகத்தில் பயன்படுத்துவீர்கள்?

வரலாறு, வேளாண்மை, கணினி, ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், வரலாறு, புவியியல், கணிதம், சமூகவியல், பொறியியல், மருத்துவம் இப்படி ஏகப்பட்ட பாடப் பிரிவுகள் உள்ளன. அவற்றில் வேளாண்மை பயின்ற தேர்வாளர்களுக்கு எப்படியான கேள்விகள் கேட்கப்படும் என்பதை இங்கே பார்ப்போம்.

1. நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் சதவீதம் என்ன?

2. கடந்த ஆண்டிலும், நடப்பு ஆண்டிலும் மத்திய/ மாநில அரசு விவசாயிகளுக்காகக் கொண்டுவந்த திட்டங்கள் யாவை?

3. விவசாயிகளின் சிக்கலுக்குக் காரணம் என்ன?

4. துல்லிய விவசாயம் (Precision farming) எங்கெல்லாம் நடைமுறையில் உள்ளது? Virtual water என்றால் என்ன?

5. நதிகளின் இணைப்பிற்கான சாத்தியக் கூறுகள், சுற்றுச் சூழல் சிக்கல்கள் பற்றிக் கூறுக. சமீபத்தில் இணைக்கப்பட்ட நதிகள் யாவை?

6. தமிழகத்தின் பிரதானப் பயிர்களுக்கு ஆராய்ச்சி நிலையங்கள் எங்கு உள்ளன? சமீபத்தில் உருவாக்கிய கலப்பின ரகங்கள் எவை?

இப்படியாக ஒரு கேள்வியை அடுத்து உட்கேள்விகளும் கேட்கப்படும். ஆகவே வழக்கமாகத் தேர்வை எதிர்கொள்வதுபோல அல்லாமல் நம்மையும், நமக்குத் தொடர்புடைய ஒவ்வொன்றையும் குறித்த தெளிவான, ஆழமான புரிதலை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது.

சும்மா விளையாடக் கூடாது!

இதில் மிகவும் சுவாரஸ்யமான, ஆனால் பலரைச் சறுக்கிவிடும் பகுதி பொழுதுபோக்கு மற்றும் விருப்பங்கள் (Hobbies and Interests) தொடர்பான கேள்விகளாகும். போகிற போக்கில் புத்தகம் படிப்பது, கிரிக்கெட் விளையாடுவது என நீங்கள் முன்பே குறிப்பிட்டிருந்தீர்களானால் நிச்சயமாக உங்களை நோக்கிப் பாயும் கேள்விகளில் சில இதோ:

1. சமீபத்தில் படித்த புத்தகம் என்ன?

2. அவற்றில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் சிறப்புகள்

3. அது இலக்கிய வகையைச் சேர்ந்த புத்தகமாக இருந்தால் அதனோடு தொடர்புடைய மற்ற இலக்கியங்கள்

4. சமீபத்தில் சாகித்ய அகாடமி, புக்கர் பரிசு, இலக்கியத்துக்கான நோபல் விருது பெற்ற புத்தகங்கள் பற்றிய தகவல்.

இதேபோன்ற யூ.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்வு தொடர்பாகக் கூடுதல் கவனத்தோடு தெரிந்து-புரிந்துகொள்ள வேண்டிய மேலும் பல அம்சங்களைத் தொடர்ந்து பார்ப்போம்.

கட்டுரையாளர் வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர், சென்னை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x