Last Updated : 25 Oct, 2016 12:06 PM

 

Published : 25 Oct 2016 12:06 PM
Last Updated : 25 Oct 2016 12:06 PM

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 19: சாதனையால் கிண்டலுக்குப் பதிலடி

பலர் கிண்டலடித்தபோது, அதையே சவாலாக எடுத்துக்கொண்டு ஐ.சி.எல்.எஸ். எனும் இந்தியப் பெருநிறுவனச் சட்டப்பணி (Indian Corporate Law Service) பெற்றுள்ளார் சி.எம்.கார்ல் மார்க்ஸ். 2009 பேட்ச் அதிகாரியான இவர் தற்போது ஜார்கண்ட் மாநிலப் பதிவாளராகப் பணியாற்றுகிறார். இதற்கு முன் சென்னையின் நிறுவனங்கள் பதிவு அலுவலகத்தின் உதவிப் பதிவாளராகவும் பிறகு துணைப் பதிவாளராகவும் பணி செய்தார். அப்போது புதுச்சேரி மாநிலப் பொறுப்பு பதிவாளராகப் பணியாற்றும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.

மதுரையைச் சேர்ந்த மார்க்ஸ் தமிழ் வழிக் கல்வியில் பள்ளிப் படிப்பைப் படித்தார். இவருடைய தந்தை சி.மதிசேகரன், தேசிய நெடுஞ்சாலைத் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மேற்படிப்பில் ஜவுளிப் பிரிவில் பிடெக் தேர்ந்தெடுத்தார் மார்க்ஸ். இதன் இறுதி ஆண்டில் துறையின் தலைவர் ஒரு முறை வகுப்பில் மாணவர்களிடம் “அடுத்து என்ன படிக்க விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார். அப்போது பலரும் கேட், எம்.டெக்., எம்.எஸ்., எம்.பி.ஏ. என்றபோது, மார்க்ஸ் மட்டும் ஐ.ஏ.எஸ். எனக் கூறியுள்ளார்.

இதைக் கண்டு துறைத் தலைவர் உட்பட அனைவரும் சிரித்துள்ளனர். தன்னைக் கிண்டலடித்தவர்களிடம் தன்னை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்பதைச் சவாலாக எடுத்துக்கொண்ட மார்க்ஸ், யூ.பி.எஸ்.சி. தேர்வை வெல்வதையே தன் லட்சியமாகக் கொண்டிருக்கிறார். இதற்காக 2003-ம் ஆண்டு முதல் எடுத்த ஆறு முயற்சிகளின் இறுதியில் ஐ.சி.எல்.எஸ். பெற்றிருக்கிறார்.

“எனக்கும் சில ஆசைகள் உண்டு என்பதை ஏற்காமல் என்னைச் சுற்றி இருந்தவர்கள் கிண்டலடித்தார்கள். இது உன்னால் முடியுமா என யாராவது கிண்டலடித்தால் அதைக் கண்டிப்பாகச் செய்து காட்டும் குணம் எனக்குச் சிறு வயது முதல் உண்டு. இதைப் பல விஷயங்களில் செய்து காட்டிய நான் யு.பி.எஸ்.சி.யிலும் வெற்றி பெற்றேன். எனது விருப்பத்தின்படி ஐ.சி.எல்.எஸ். அறிமுகப்படுத்தி அதன் முதல் பேட்ச் வெற்றியாளராகத் தேர்வு பெற்றேன். 2002-ல் பிடெக் முடித்தவுடன் யூ.பி.எஸ்.சி.க்கு எப்படித் தயாராவது என்பது பற்றிய எந்த அறிவும் இல்லாமல் முதல் முயற்சி செய்தேன்.

அடுத்த முயற்சியின்போது, யூ.பி.எஸ்.சி. எழுதி நேர்முகத் தேர்வுக்காகக் காத்திருந்த அன்பழகன் என் உறவினர் மூலம் அறிமுகமானார். தற்போது சத்தீஸ்கர் மாநிலப் பிரிவின் 2003 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவரது வழிகாட்டுதல் என் வெற்றிக்கு உதவியது. எனது விருப்பப் பாடமாகத் தமிழ் இலக்கியத்தையும் புவியியலையும் எடுத்திருந்தேன். சென்னை அண்ணாநகரில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் புவியியலுக்கு மட்டும் பயிற்சி பெற்றேன். இதன் நிர்வாக இயக்குநர் சங்கர் அளித்த ஆக்கமும், ஊக்கமும் எனது வெற்றிக்கு அடித்தளமிட்டன” என்கிறார் கார்ல் மார்க்ஸ்.

வெற்றிக்காக எடுத்த முயற்சிகள்

கார்ல் மார்க்ஸுக்கு முதல் முயற்சியில் முதல் நிலையும் அடுத்த மூன்று முயற்சிகளில் இரண்டாம் நிலைத் தேர்வும் வெல்ல முடியவில்லை. இதன் பிறகு, தமிழக அரசின் தேர்வு வாரியத்தின் குரூப் 1 எழுதியமையால் ஒரு வருடம் இடைவெளி விட்டிருக்கிறார். குரூப்-1-ல் தேற முடியாவிட்டாலும் வங்கித் தேர்வில் உதவியாளர் பணி கிடைத்துள்ளது. இதைச் செய்தவாறே, ஆறாவதாக யூ.பி.எஸ்.சி.க்கு 2009-ல் எடுத்த முயற்சி ஐ.சி.எல்.எஸ். பெற்றுத் தந்துள்ளது. இதற்கான பயிற்சி முடித்துப் பணி செய்தவாறே ஏழாவதாக ஒரு முயற்சி செய்துள்ளார்.

இந்தக் கடைசி முயற்சியின்போது 2011-ல் மார்க்ஸுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. மணமுடித்த பின் படிக்க முடியாது என்று சொன்ன தன் மனைவியிடம் சவால்விட்டு, மீதமிருந்த கடைசி முயற்சியை எடுத்து வென்றிருக்கிறார். இதில் ஐ.ஏ.ஏ.எஸ். (Indian Auditing and Accounts Service) கிடைத்துள்ளது. ஆனால், ஐ.சி.எல்.எஸ்.ஸில் இருவருடம் முடிந்துவிட்டதால் அதை மறுத்துத் தன் பணியில் தொடர்ந்திருக்கிறார்.

தோல்விக்கான காரணங்கள்

“ஒவ்வொரு முறையும் எனக்கு ஒரு பாடத்தில் அதிக மதிப்பெண் கிடைத்தால் மற்றொன்றில் குறைந்துவிடும். நான் ஒரே பாடத்தை அதிகமான ஆர்வத்துடன் படித்தது ஒரு குறை. நேர்முகத்தேர்வு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்காகத் தேர்வாளர்களுடன் அநாவசியமாக விவாதிக்க வேண்டிய சூழலுக்கு உள்ளானது பெரிய தவறாகப் போனது. மற்றொன்றில் எனது அனுபவத்தில் இல்லாத கேள்விகளாக இருந்தமையால் பதில் அளிக்க முடியாமல் போனது. ஆங்கிலத்தில் பேசும் திறன் சற்றுக் குறைவாக இருந்ததும் காரணம்தான். இத்தனைக்கும் தொடக்கத்தில் பதிலளிக்கத் திணறிய எனக்குத் தேர்வாளர்களில் சிலர், நான் கூற விரும்புவதைப் புரிந்து கோடிகாட்டவும் செய்தார்கள்” எனத் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் மார்க்ஸ்.

ஐ.சி.எல்.எஸ். பணியின் செயல்பாடு

யூ.பி.எஸ்.சி.யின் 24 பதவிகளில் ஒன்றாகக் கடந்த 2009 முதல் ஐ.சி.எல்.எஸ். புதிதாக இணைக்கப்பட்டது. மத்தியப் பெருநிறுவனங்கள் அமைச்சகத்தின் (Ministry of Corporate Affairs) கீழ் நிறுவனங்கள் பதிவு அலுவலகம் (Registrer of Companies) செயல்படுகிறது. இவர்களின் அலுவலகத்தில் பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் கணக்கு வழக்குகள் சமர்ப்பிக்கப்படும். இதைக் கண்காணிப்பதும், சரிபார்ப்பதும் ஐ.சி.எல்.எஸ். அதிகாரிகளின் பணியாகும்.

இதன் மீதான பொருளாதாரக் குற்றங்களை விசாரிப்பதும் இந்த அதிகாரிகள்தான். பெருநிறுவனங்கள் நஷ்டமடைந்து மூடப்படும்போது உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவற்றின் கணக்கு வழக்குகளைச் சரிபார்த்துக் கடன் தந்தவர்களுக்குச் சரிவிகிதமாகப் பிரித்தளிக்கும் பணியும் இவர்களுடையதே. மிகவும் நுணுக்கமான இந்தப் பணியில் செபி, சி.பி.ஐ., போலீஸ், ரிசர்வ் வங்கி ஆகிய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டி இருக்கும். இந்த அதிகாரிகள் சம்மந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றங்களின் நேரடி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றுவார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.ஸில் இருக்கும் அளவுக்குப் பணிச்சுமையும் அரசியல் தலையீடும் இல்லாதது ஐ.சி.எல்.எஸ். இதில், சுமார் 10 வருட அனுபவத்துக்குப் பின் ஒரு மாநிலத்தின் தலைமைப் பதவியைப் பெற்றுவிட முடியும்.

- மார்க்ஸ்

புதியவர்களுக்கான யோசனை

“யூ.பி.எஸ்.சி. வெல்வது மிகவும் எளிது. இதற்காக முடிந்தால் கடினமாக உழைத்துப் படியுங்கள். இல்லை எனில், பாடங்களைத் திரும்பத் திரும்ப எழுதிப் பார்த்தாலே மூளையில் பதிந்துவிடும். இது என் சொந்த அனுபவம். நாம் யூ.பி.எஸ்.சி.யை வெல்ல லட்சியம் கொள்வது அவசியம். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற நாம் வாழும் சூழல், பணியாற்றும் சூழல் குறித்த முழுமையான அறிதல் அவசியம். ஏனெனில், நம்மைச் சுற்றி இருக்கும் சூழல் தொடர்பானதாகவே நேர்முகத் தேர்வின் கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன.” என யோசனை கூறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x