Last Updated : 27 Sep, 2016 11:13 AM

 

Published : 27 Sep 2016 11:13 AM
Last Updated : 27 Sep 2016 11:13 AM

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 17: இதுதான் ‘தொடரி’ சேவை

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.ஸை விடவும் அதிகமான பொதுமக்களுக்கு சேவை செய்ய உகந்த பணி ஐ.ஆர்.டி.எஸ். என்கிறார் அஜய் கவுசிக். யூ.பி.எஸ்.சி.யில் உள்ள 24 வகை பணிகளில் ஒன்றான ஐ.ஆர்.டி.எஸ். எனப்படும் இந்திய ரயில்வே போக்குவரத்துப் பணியில் 2010-ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான இவருக்குத் தென்னக ரயில்வே பிரிவின் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்குப் பின் துணைக் கோட்ட மேலாளராக, திருச்சி பகுதி ரயில் துறையின் வணிகம் மற்றும் காப்பீட்டுத் தொகை ஒதுக்கும் பணிகளைச் செய்துள்ளார். தற்போது சென்னை பகுதி ரயில் துறையின் கோட்ட மேலாளராகப் பயணிகள் ரயில் போக்குவரத்துக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

நண்பரின் தந்தையைப் பார்த்து

சென்னையைச் சேர்ந்த அஜய் கவுசிக், ஸ்ரீ பெரும்புதூரில் பி.டெக். வேதியியல் பிரிவில் பட்டம் பெற்றவர். அடுத்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு பயின்று ஆய்வுத் துறைக்குச் செல்லும் எண்ணத்தில் இருந்த அவரது வாழ்க்கையில் கல்லூரி வகுப்புத் தோழரான சுதர்ஸனின் நட்பு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. சுதர்ஸனின் தந்தை சேகரன் யூ.பி.எஸ்.சி.யில் ஐ.ஆர்.டி.எஸ். பெற்று, தென்னக ரயில்வேயில் தலைமை வணிக அதிகாரியாகப் பணியாற்றிவந்தார்.

அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பால் கவுசிக்குக்குத் தானும் யூ.பி.எஸ்.சி. எழுதும் யோசனை உதித்துள்ளது. இதற்காகத் தன் கல்லூரியின் இறுதி ஆண்டிலேயே முதல் முயற்சி எடுத்திருந்தார். 2006-ல் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு பயிற்சி நிலையங்களில் படித்தவருக்குத் தன் மூன்றாவது முயற்சியில் 558-வது ரேங்குடன் ஐ.ஆர்.டி.எஸ். கிடைத்தது.

“கல்லூரிக் காலகட்டத்திலிருந்து இணையதளங்களிலும் விக்கிபீடியாவிலும் புதிய விஷயங்களைத் தேடும் பழக்கம் எனக்கு இருந்தது. விருப்பப் பாடமாகப் பொது நிர்வாகத் துறையையும் புவியியலையும் எடுத்தபோது அந்தப் பழக்கம் எனக்கு கைகொடுத்தது. அந்த நேரத்தில் எனது தம்பி சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றுப் பணிக்குச் சென்றுவிட்டதால் நானும் பணிக்குச் செல்ல வதற்கான அழுத்தம் இருந்தது. இதற்காக, கணேஷ் பயிற்சி நிலையத்தில் சில மாதங்கள் பகுதிநேர வகுப்புகள் எடுத்தபடியே எனது பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் தொடர்ந்து யூ.பி.எஸ்.சிக்காகப் படித்தேன்.

நான் பொதுப்பிரிவைச் சேர்ந்தவன் என்பதால் 30 வயது வரை 4 முயற்சிகள் மட்டுமே செய்ய முடியும். இவற்றை 4 முறையும் தொடர்ந்து எழுத வேண்டிய அவசியமில்லை. இதனால், இரண்டாவது முயற்சிக்குப் பின் ஒரு வருடம் இடைவெளி விட்டு எழுதவும் படிக்கவும் கூடுதல் அவகாசம் எடுத்துக்கொண்டேன். உறுதியாக வெல்வோம் என்ற தைரியத்துடன் எழுதி வெற்றியும் பெற்றேன்” என்று பெருமிதம் கொள்கிறார் கவுசிக்.

பெரும்பாலான இளைஞர்களைப் போலவே கவுசிக்கும் யூ.பி.எஸ்.சி.யில் ஐ.ஏ.எஸ்.ஸைத்தான் பெற விரும்பியிருந்தார். ஐ.ஆர்.டி.எஸ். வென்ற பிறகும் ஒரு முறை நான்காவதாக ஐ.ஏ.எஸ்.ஸுக்கு முயன்றார். ஆனால், ஐ.ஏ.எஸ். தவிர வேறு எந்த பணிகளையும் தனது விருப்பத்தில் கவுசிக் குறிப்பிடவில்லை. இதனால், இறுதி முயற்சியில் பெற்ற 107-வது ரேங்குக்கு அவர்களாகவே ஐ.டி.எஸ்.எஸ். எனும் இந்திய ராணுவ எஸ்டேட் பணியை அளித்தனர். அதில் விருப்பில் இல்லாததால் ஐ.ஆர்.டி.எஸ்.ஐ உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டார் கவுசிக்.

பணியின் முக்கியத்துவம்

ஐ.ஆர்.டி.எஸ். பெற்றவர்களுக்கு லக்னோவின் மத்திய ரயில் போக்குவரத்து நிர்வாகம், பரோடாவின் மத்திய ரயில்வே இந்திய அகாடமி ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்துடன், யூ.பி.எஸ்.சி.யின் மற்ற பணிகளைப் பற்றி அறிந்துகொள்ள அதன் பயிற்சி நிலையங்களிலும் குறுகிய கால வகுப்புகள் நடைபெறும். இதன் பிறகு மத்திய ரயில் துறையில் மொத்தம் உள்ள 17 மண்டலங்களில் ஒன்றை ஐ.ஆர்.டி.எஸ். பணியின் பிரிவாக அளிப்பார்கள். எனினும், இப்பிரிவு கிடைக்கப் பெற்றவர்கள் ஐ.ஏ.எஸ். போலவும் ஐ.பி.எஸ். போலவும் அனைத்துத் துறைகளிலும் அரசு அனுமதியுடன் அயல் பணியை (Deputation) வகிக்கலாம்.

வெளியில் தெரியாத சாதனை

கடந்த வருடம் சென்னையின் பெருமழை, வெள்ளத்தின்போது ஏற்பட்ட தடங்கலினால், சுமார் மூன்று நாட்களில் ரயில் போக்குவரத்தைச் சீர்செய்தது, ஐ.என்.எஸ். ராஜாளி விமானத் தளத்தை ராணுவத்தினரும் பயணிகள் அடையும் வகையில் ரயில் போக்குவரத்தை அமைத்தது, யூ.பி.எஸ்.சி. மாணவர்களும், தமிழ்நாடு தேர்வாளர் பணி வாரியத் தேர்வுகள் எழுதும் மாணவர்களும் சிரமம் இல்லாமல் குறித்த நேரத்தில் ரயில் மூலம் சென்றடையச் செய்தது ஆகியவற்றைத் தன் சாதனையாகக் கருதுகிறார் கவுசிக். அதேசமயம், யூ.பி.எஸ்.சி.யின் மற்ற பணிகளைப் போல் ஐ.ஆர்.டி.எஸ். பணியின் சாதனைகள் பரவலாக வெளியில் தெரிவதில்லை என்பது கவுசிக்கின் ஆதங்கம்!

தேர்வு எழுத என்ன தேவை?

அன்றாட இயற்கை நிகழ்வுகளில் ஆர்வம் இருப்பவர்கள் தயக்கமின்றிப் புவியியலை விருப்பப் பாடமாக எடுக்கலாம். யூ.பி.எஸ்.சி.யில் ஒருமுறை வெற்றி பெற்றுப் பணியில் அமர்ந்த பின்னர் மறுமுறை எழுதுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு எளிதாக இருக்கும். இதில், அவர்கள் பெற்ற பணி அனுபவத்தைப் பற்றி அதிகமாகக் கேள்விகள் கேட்க வாய்ப்புகள் உண்டு. தற்போது யூ.பி.எஸ்.சி.யின் பாடத்திட்டங்கள் மிகவும் எளிதாகிவிட்டதால் அதை வெல்வது சிரமம் இல்லை. ஆனால், கடந்தமுறை வந்த வினாத்தாள்களைப் போல் மறுமுறையும் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு முறையும் புதிய பாணியில் வினாத்தாள்கள் வெளியாகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x