Published : 21 Apr 2014 03:56 PM
Last Updated : 21 Apr 2014 03:56 PM

மத்திய காவல் படையில் சேர வேண்டுமா?

சவால்களையும் சாகசங்களையும் விரும்பும் இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் ஏற்றபணிகளில் ஒன்று மத்திய போலீஸ் உதவி கமாண்டன்ட் பணி. மத்திய அரசு போலீஸ் படைகளான ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்), மத்திய தொழில்பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்), இந்திய திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை போன்றவற்றில் உதவி கமாண்டன்ட் பணிகள் (Assistant Commandant) 50 சதவீதம் நேரடித்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்கான தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தி வருகிறது.

யூபிஎஸ்சி உதவி கமாண்டன்ட் தேர்வு எழுத ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு இருந்தால் போதுமானது. இந்திய திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை உதவி கமாண்டன்ட் பதவி நீங்கலாக சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், பிஎஸ்எப் உதவி கமாண்டன்ட் பதவிக்குப் பெண்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 20-25. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு மத்திய அரசு பணியில் உள்ளவர்களுக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கிறார்கள்.

உதவி கமாண்டன்ட் பணிக்குக் குறிப்பிட்ட உடற்தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆண்கள் எனில் உயரம் குறைந்தபட்சம் 165 செ.மீ. பெண்கள் என்றால் 157 செ.மீ. இருக்க வேண்டும், குறைந்தபட்ச எடை ஆண்களுக்கு 50 கிலோ, பெண்களுக்கு 46 கிலோ. ஆண்களின் மார்பளவு 81 செ.மீ. இருப்பதுடன் 5 செ.மீ. விரிவடைய வேண்டும். நல்ல கண்பார்வை அவசியம். எந்த விதமான பார்வைக் குறைபாடுகளும் இருக்கக் கூடாது.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியுடையவர்கள் உதவி கமாண்டன்ட் பணிக்குத் தேர்வுசெய்யப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வில் மொத்தம் 2 தாள்கள். முதல் தாள் ஆப்ஜெக்டிவ் முறையிலானது. பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் தொடர்பாகக் கேள்விகள் கேட்பார்கள். இதற்கு 250 மதிப்பெண். 2-ம் தாள் விரிவாக விடையளிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும். இதில், பொது அறிவு, ஆங்கிலம் தொடர்பான கேள்விகள் இடம்பெறும். இதற்கு 200 மதிப்பெண். முதல் தாளில் குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்தால்தான் 2-வது தாளே மதிப்பீடு செய்வார்கள். எனவே, முதல் தாளில் கவனமாக இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு 150 மதிப்பெண். எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் 100 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய உடற்திறன் தேர்வுகளில் தகுதி பெற வேண்டியது அவசியம். உதவி கமாண்டன்ட் வேலையில், என்சிசி “பி”, “சி” சான்றிதழ் விருப்பமான தகுதியாகக் கருதப்படுகிறது. எனினும் இந்தத் தகுதியை நேர்முகத் தேர்வுக்கு வரும்போது மட்டுமே கணக்கில் கொள்வார்கள்.

இந்த ஆண்டு சிஆர்பிஎப், பிஎஸ்எப், சிஐஎஸ்எப் ஆகியவற்றில் 136 உதவி கமாண்டன்ட் காலியிடங்களை நிரப்புவதற்கு யூபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. கல்லூரியில் தற்போது இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு ஜூலை 13-ம் தேதி அன்று தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் மே 12-ம் தேதி. தேர்வு நடைமுறை, தேர்வுக்கான பாடத்திட்டம், உடற்தகுதிகள் உள்ளிட்ட விவரங்களை யூபிஎஸ்சி இணையதளத்தில் (www.upsc.gov.in) விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x