Last Updated : 27 Sep, 2016 11:41 AM

 

Published : 27 Sep 2016 11:41 AM
Last Updated : 27 Sep 2016 11:41 AM

புதிய வாய்ப்பு: ஹாக்கத்தான் - இளம் அறிவின் ஓட்டம்!

இளைஞர்களின் கனவுலகான சாஃப்ட்வேர் துறையில் நுழையக் காத்திருப்பவர் களுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்து கொண்டிருக்கிறது இந்தியத் தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ). அதன் ஒரு முயற்சியாக, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள டெக் மகேந்திரா நிறுவனத்தில் ஹாக்கத்தான் போட்டிகளைக் கடந்த வாரம் நடத்தியது.

இது ஹாக்கிங் அல்ல!

ஹாக்கத்தான் என்றதும் ஏதோ கணினி முடக்குவது (ஹாக்கிங்), அதிலுள்ள டேட்டாக்களைத் திருடுவது என்பது கிடையாது. அன்றாட வாழ்க்கையை எளிதாக்க சாஃப்ட்வேர்களை உருவாக்குவதுதான் ஹாக்கத்தான். இந்த ஹாக்கத்தான் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுடன் உரையாடியபடியே நம்மிடமும் பேசத் தொடங்கினார் இந்தியத் தொழில் கூட்டமைப்பைச் சேர்ந்த முத்துஸ்வாமி ராமச்சந்திரன்.

“இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படும் ‘கனெக்ட்’ (‘Connect’) நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கிறார்கள். நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு ஆப்ஸ் மூலமாக எளிய தீர்வுகளைக் கண்டடைவதுதான் இந்தப் போட்டியின் அடிப்படை. இந்தப் போட்டியில் ஒவ்வொரு குழுவும் தாங்கள் உருவாக்கிய ஆப்ஸை முதற்கட்டமாகச் செயல்படுத்திக் காட்ட வேண்டும். அதன் பிறகு சிறந்த புதிய திட்டங்களை, ஆப்ஸைத் தேர்ந்தெடுத்து, மாநில அளவில் நடைபெறும் கனெக்ட் நிகழ்ச்சியில் விருதுகள் நாங்கள் வழங்குகிறோம்” என்றார் முத்துஸ்வாமி ராமச்சந்திரன்.

அமைச்சரைக் கவர்ந்த செயலி

போட்டியில் கலந்துகொண்ட 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளும் தங்களுடைய லேப்டாப்பில் புதிய ஆப்ஸ்களைப் பரபரப்பாக வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள். விவசாயத்துக்கும், தேசிய பாதுகாப்புக்கும் தங்களுடைய தொழில் நுட்பப் படைப்புகள் மூலம் உதவி செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள் சென்னை வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்கள்.

அவர்களுடைய குழுத் தலைவர் பிரஷாந்த் பரத்வாஜ், ஆளில்லாக் குட்டிக் கண்காணிப்பு விமானங்களை (drones) தயாரிப்பதற்கான செயல்திட்டத்தைத் தன் குழுவினருடன் உற்சாகமாகக் கலந்துரையாடிக் கொண்டிருந்தார். “இந்திய ராணுவத்தில் டிரோன்ஸ் அதிக அளவில் எல்லைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு ராணுவ வீரர் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே டிரோனை இயக்க முடியம். அதற்குப் பதிலாக ஓரிடத்தில் அமர்ந்தபடியே இணையம் மூலம் பல டிரோன்களை இயக்கலாம். இந்தச் செயல்திட்டம் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்குப் பிடித்ததால் எங்களை அழைத்துப் பேசினார்.

தற்போது, இணையதளமில்லாமல், சாட்டிலைட் உதவியுடன் மட்டும் இயங்கும் டிரோன்களுக்கான செயல்திட்டத்தை வடிவமைத்துக்கிறோம். அதன் ஒரு பிரிவை இங்கு செயல்படுத்திக் காட்டுவோம்” என்றார் பிரஷாந்த். இத்துடன் இந்த ஆளில்லா டிரோன்களை மலைப்பகுதி விவசாயிகள் பூச்சி கொல்லிகளைத் தூவவும், தாவரங்களின் நிலை குறித்து அறியவும் பயன்படுத்த முடியும் என்றார் அவர்.

மயக்கம் என்ன?

எப்போதுமே அப்-டேட் செய்ய வேண்டிய மருத்துவ-ஆரோக்கியப் பிரிவில் ஆப்ஸ் உருவாக்கிக் கொண்டிருந்தனர் இந்துஸ்தான் பல்கலைக்கழக மாணவர் ரிஷி அஷ்வின் குழுவினர். “சில தினங்களுக்கு முன்பு எனக்கு ஒரு சுளுக்கு ஏற்பட்டபோது முதலுதவிக்கான ஆப்ஸ்களை இணையத்தில் தேடினேன். ஆனால் அதில் சொல்லப்பட்டிருந்த ஆலோசனைகள் பெரிய அளவில் உதவவில்லை. இந்தியாவில் உள்ளவர்களுக்கு ஏற்றவாறு முதலுதவி குறித்த ஆப்ஸ் உருவாக்கலாம் எனத் தொடங்கி, பாம்புக் கடி, கண்களில் அலர்ஜி, தீக்காயம், மயக்கம் உள்ளிட்டப் பல சிக்கல்களுக்கு முதலுதவி எப்படித் தர வேண்டும், செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை உள்ளிட்ட பல தலைப்புகளில் இந்த ஆப்பினை உருவாக்கியிருக்கிறோம்” என்றார் ரிஷி அஷ்வின்.

பில் போடுங்க அண்ணே!

மளிகைக் கடை மற்றும் சிறிய கடைகளுக்கான ஆப்ஸ் ஒன்றை உருவாக்கிக்கொண்டிருந்தார் கே.சி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் தீபக். “பொதுவாக பெரிய கடைகளில் கம்ப்யூட்டர் பில்லிங் செய்வதால் வருமானவரி, இருப்பில் உள்ள சரக்குகள் குறித்துத் துல்லியமான விவரங்கள் இருக்கும். ஆனால் கம்ப்யூட்டர் இல்லாத சிறிய கடைகளில் ஆண்ட்ராய்டு அல்லது டேப்லட் மூலம் பில்லிங் செய்யும் தொழில்நுட்த்தை உருவாக்கியிருக்கிறோம். இதன்மூலம் கடையில் உள்ள பொருட்களின் கொள்முதல் விலை, விற்பனை விலை, இருப்பு ஆகிய விவரங்களைப் பதிவேற்றலாம். அதிலேயே பில்லிங் செய்து, அன்று முழுவதும் விற்பனையான பொருட்களின் எண்ணிக்கை, லாப விவரம், இருப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். வருமான வரி செலுத்தும்போது சுலபமாகத் தகவல்களை வழங்கலாம்” என்கிறார் தீபக்.

வேலை கிடைக்குமா?

புதுமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் இத்தகைய ஹாக்கிங் புதிய தொழில்நுட்பங்களைப் பயிலும் மாணவர்களுக்கு நிச்சயமாக நல்ல வேலைவாய்ப்பு காத்திருக்கிறது என்கிறார் டி.சி.எஸ். நிறுவனத்தின் டிஜிட்டல் பயிற்சி பிரிவுத் தலைவர் அஷோக் கிருஷ். அதைவிடவும் முக்கியமானது, கணிப்பொறி, ஐ.டி. துறையுடன் நேரடியான தொடர்புடையப் படிப்புகளைப் படித்தவர்கள் மட்டுமே இத்துறையில் ஜொலிக்க முடியும் என்றில்லை.

“தற்போது, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பொறியியல் பிரிவுகளைப் படித்த மாணவர்கள்தான் சாஃப்ட்வேர் துறையில் பெரிதும் சாதிக்கிறார்கள். மாறி வரும் தொழில்நுட்பங்களால் டிசைனிங் செய்வதற்குக் கட்டிடக்கலை படித்த மாணவர்கள் தொடங்கி, வரலாறு, கணிதம் படித்தவர்கள் வரை அனைவருக்கும் இங்கு வேலை காத்திருக்கிறது. தேவை கொஞ்சம் கிரியேட்டிவிட்டிதான்” என்றார் அஷோக் கிருஷ்.

கல்லூரியில் படிக்கும்போதே ஹாக்கத்தான் போன்ற புதிய மென்பொருள் தொழில்நுட்பத் திறன்களை இளைஞர்கள் வளர்த்துக் கொண்டால் வேலை நிச்சயம் அவர்களுக்குத்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x