Last Updated : 30 Aug, 2016 11:10 AM

 

Published : 30 Aug 2016 11:10 AM
Last Updated : 30 Aug 2016 11:10 AM

புதிய கல்விக் கொள்கை: நாளைய இந்தியாவின் எதிர்காலம்!

கடந்த சில மாதங்களாக ஊடகங்களிலும், படித்தவர்கள் மத்தியிலும் ‘புதிய கல்விக் கொள்கை 2016’ கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட உள்ள கல்விக் கொள்கையின் சாராம்சங்களைத் தொகுத்து ஒரு முன்வரைவாக வெளியிட்டு அதுபற்றி, பலதரப்பட்ட மக்களின் கருத்துகளை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை கேட்டு வருகிறது. பல வல்லுநர்களும், ஆர்வலர்களும் இது குறித்து தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதைப் பற்றி முதலில் பேச வேண்டியவர்கள் இன்றைய மாணவர்கள். ஏனென்றால், இளைய தலைமுறையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிற முக்கிய விஷயங்களில் ஒன்று இந்தப் புதிய கல்விக் கொள்கை.

29 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையினை உருவாக்கி வருகிறது. இதற்கான குழுவை முன்னாள் மத்திய அரசு காபினெட் செயலர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் தலைமையில் அமைத்தது. அக்குழுவும் தன் பரிந்துரைகளை அரசுக்குச் சமர்ப்பித்துவிட்டது. அதை அரசு சுருக்கமாக வெளியிட்டுள்ளது.

வாழ்நாள் கல்வித் திட்டமா?

பள்ளிக் கல்விக்கு முந்தைய கல்வியைக் குழந்தைகளுக்கு எப்படி வழங்குவது என்பதில் தொடங்கி, பள்ளி, உயர்கல்வி, ஆராய்ச்சி போன்றவற்றில் எவ்வாறு காலத்துக்கேற்ப தரமான கல்வியை வழங்குவது, வாழ்நாள் முழுவதும் எவ்வாறு கற்றுக் கொண்டே இருப்பது என்பதுவரை பல திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.

அனைவருக்கும் கல்விக்கான உரிமை என்பதன் அடிப்படையில் பள்ளிக் கல்வியில் போதியளவு தேர்ச்சியடையவில்லை எனினும் ஒன்பதாம் வகுப்புவரை அடுத்த வகுப்புக்குச் செல்லலாம் என்ற நடைமுறை 2009-லிருந்து உள்ளது. ஆனால் தற்போது ஐந்தாம் வகுப்பு வரைதான் போதிய தேர்ச்சியில்லாமலே தொடர்ந்து படிக்கமுடியும்; பிறகு கண்டிப்பாகத் தேர்வுகளில் தேர்ச்சியடைய வேண்டும் என்று கூறுகிறது இத்திட்டம். ஒரு வேளை இதன்மூலம் கிராமப்புற மாணவர்கள் மற்றும் பெண்களை ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் போக வைக்கலாம்.

இந்தியக் கல்விப் பணிகள் பணி (IES)

ஐ.ஏ.ஸ்., ஐ.பி.எஸ். போல ஐ.இ.எஸ் (Indian Education Services /IES) என்பதை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. . இதில் கல்வி சார் நிர்வாகப் பணிகளுக்கான தனிப் பயிற்சி பெற அதிகாரிகள் உருவாக்கப்படுவார்கள். இதுவரை கல்வி நிர்வாகத்துக்கான தனிப் படிப்பு உயர்மட்ட அளவில் இல்லாத குறையை இது தீர்க்கலாம்.

குறை தீர்க்கும் ஆணையம்

மாணவர்கள், மக்கள் குறைகளைத் தீர்க்கக் கல்வி நிறுவனங்களுக்கு வெளியே தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிறப்பு கல்வித் தீர்ப்பாணையங்கள் ஏற்படுத்தப்படுமென்றும் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு இவ்வாணையங்களை அணுகலாம்.

பாலியல் சமத்துவக் கல்வி

பாலியல் பலாத்காரம், பாலியல் சீண்டல், குடும்ப வன்முறை போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு அடிப்படைக் கல்வியின்மையும் காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது. பாலினம் பற்றிய புரிதல், சமூகத்தின் பன்முகத்தன்மை பற்றிய அறிவு, பணிசார் நன்னெறிகளை உருவாக்கிக் கொள்ளுதல் போன்றவற்றுக்காகக் கல்வித் திட்டத்தில் முக்கிய இடம் தரப்படும் என்கிறது இக்கொள்கை. ஆசிரியர்களும் இதில் பயிற்றுவிக்கப்படுவார்கள் என்பது சிறப்பம்சம்.

இன்றைய உயர்கல்வியின் நிலை

தேசிய மதிப்பீடு மற்றும் சான்றிதழ் குழுவால் (NAAC) அங்கீகரிக்கப்பட்ட 140 பல்கலைக்கழகங்களில் 32% பல்கலைக்கழகங்கள் மட்டுமே 'A' தரச்சான்றிதழைப் பெற்றிருக்கின்றன. கல்லூரி அளவில் இந்த அமைப்பு அங்கீகரித்துள்ள 2780 கல்லூரிகளில் 9% மட்டுமே 'A 'தரச்சான்றிதழைப் பெற்றுள்ளன. பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் கல்வித்தரம் மிகவும் குறைந்த அளவிலேயே இருப்பதாக NAAC கூறுகிறது. மேலும் முறையான கல்வி பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்ட இளைஞர்களை உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் கொண்ட நாடு இந்தியாதான் எனவும் சுட்டிக்காட்டுகிறது. படிப்பை முடித்து வெளிவரும் இளைஞர்களும் வேலைக்கான தகுதித் திறன் அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.

எனவே நல்ல வேலைக்கான திறன் வளர்ப்பு, தன்னிச்சையாகப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் தலைமைப் பண்பு, திறனாய்வுடன் சிந்திக்கும் திறன், தகவல் பரிமாறும் திறன், புதிய சிந்தனைகளை உருவாக்குதல் போன்ற பலவிதமான திறன்களை மாணவர்களுக்கு உருவாக்கும் வகையில் கல்வித் திட்டங்களைச் செழுமைப்படுத்தப் போவதாகப் புதிய கல்விக் கொள்கை கூறுகிறது.

புதிய தேர்வு முறைகள்

புத்தகங்களில் உள்ளவற்றையே திரும்ப மனப்பாடம் செய்து எழுதுதல் என்பது இல்லாமல் பரந்த விழிப்புணர்வு, அறிதல், புரிதல், மேல்நிலை பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன்கள் ஆகிய அனைத்தையும் பரிசீலிக்கும் வகையில் தேர்வுகள் அமைக்கப்பட உள்ளன. சுயமான சிந்தனைக்குஇது வரம் ஆகும்.

தனித் தேசியத் திறமைசார் படிப்பு உதவித் திட்டம்

நாட்டில் பத்து லட்சம் மாணவர்களுக்குத் தேசிய ஆதரவுத் தொகையிலிருந்து படிப்பு உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக நாடு முழுவதிலும் 10-ம் வகுப்புத் தேர்வுக்குப் பின்னர் ஒரு தேர்வு நடத்தப்படும் என்கிறது இக்கொள்கை.

அதிலும், 10-ம் வகுப்பிலேயே இரண்டு பிரிவுகளை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. பிளஸ் டூ-வில் உள்ளது போல கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் படிப்போர் முதல் நிலைத் தேர்வும், இவற்றைப் படிக்க விரும்பாதவர்கள் பிற பாடங்களைக் கற்றுக் கொண்டு இரண்டாம் நிலைத் தேர்வையும் எழுதலாம். இது தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் என அரசு நம்புகிறது.

சமஸ்கிருதம் பயிற்றுவிப்பது, பண்பாட்டுக் கல்வி வழங்குவது, நன்னெறி பாடத் திட்டங்கள் வகுப்பது போன்றவையும் இவ்வறிக்கையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த அம்சம் விவாதப் பொருளாக மாறியுள்ளது. புதிய கல்வி நிறுவனங்களை அமைக்கப் போதுமான நிதிவசதியின்மையால் தற்போதுள்ள நிறுவனங்களையே விரிவாக்கம் செய்ய அரசு முன்னுரிமை தர உள்ளது.

ஆக, கல்விக்கான நிதிக்காக இனி கல்வி நிறுவனங்கள் அரசாங்கத்தைச் சார்ந்து இருக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்படுள்ளது. தொண்டுள்ளம் படைத்தோரை, பெரும் நிறுவனங்களை நாடி ,கல்விக் கட்டணங்களை உயர்த்தி, பழைய மாணவர்களிடம் நிதி திரட்டி நிதியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று இவ்வறிக்கை ஆலோசனைகளும் கூறுகிறது. எத்தனை திட்டங்களை அறிவித்தபோதும், நிதிக்கான ஆதாரங்களைக் கல்வி நிறுவனங்கள் தாங்களே உருவாக்க வேண்டும் என்று கூறும் போது உயர்கல்வியின் நிலை என்னவாகும் என்ற அச்சமும் எழுகிறது.!

கட்டுரையாளர்: ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர், தத்துவப் பேராசிரியர், கல்விச் செயற்பாட்டாளர்

தொடர்புக்கு: murali_phil@hotmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x