Last Updated : 25 Oct, 2016 11:20 AM

 

Published : 25 Oct 2016 11:20 AM
Last Updated : 25 Oct 2016 11:20 AM

‘பிளஸ் டூ’ தேர்வுக்குத் தயாரா? - அதிக மதிப்பெண்களுக்கு ஆங்கிலம் இரண்டாம் தாள்

ஆங்கிலம் இரண்டாம் தாளில் மனப்பாடம் செய்தாக வேண்டிய பகுதிகள் மிகவும் குறைவு. எனவே, முதல் தாளைவிட இரண்டாம் தாளில் அதிக மதிப்பெண் எடுப்பதும் சாத்தியம். இதை மனதில் கொண்டு பாடத்தை நன்றாகக் கவனித்துப் புரிந்துகொள்வதும், ஆர்வம் குறையாமல் தேர்வு எழுதுவதும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத்தரும்.

அலுப்பைப் போக்கும் ஆங்கிலம்-2

ஆங்கிலம் இரண்டாம் தாளுக்கான தயாரிப்பு என்பது, பிளஸ் டூ பாடப் பகுதியை மட்டுமே உள்ளடக்கியது அல்ல. ஆங்கிலப் பாடம் அறிமுகமான வகுப்பு முதல் தற்போது வரை படித்ததே இந்தப் பாடத்துக்கு அடிப்படை. மேலும் ஆங்கிலம் இரண்டாம் தாளைப் படிப்பதற்காகத் தனியாக நேரம் ஒதுக்கத் தேவையில்லை. மற்ற பாடங்கள் படிக்கும்போது அலுப்புத் தட்டினால், 15 நிமிடங்கள் ஒதுக்கி ஆங்கிலம் இரண்டாம் தாள் பாடப் பகுதியைச் சிறுகச் சிறுகப் படித்துத் தேறலாம். இந்த வகையில் தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் இந்தப் பாடத்துக்கு ஒதுக்கினால் போதும். இதன் மூலம் ஒட்டுமொத்தமாகப் படிக்கும் திறன் கூடுவதுடன், கவனச் சிதறலும் தவிர்க்கப்படும்.

எழுதிப் பார்ப்பதும் முக்கியம்

ஆங்கிலம் இரண்டாம் தாளில் மனப்பாடம் செய்து எழுதும் பகுதிகளைவிட, படைப்புத் திறனையும் பொது அறிவையும் சோதிக்கும் கேள்விகள் அதிகம். அவ்வப்போது ஆங்கில நாளிதழை வாசிக்கும் பழக்கம் இருந்தால் இந்த இரண்டும் சுலபமாகும். மேலும், ஆங்கிலத்தின் அடிப்படைக் கூறுகள், எழுதும்போது எழும் ஐயங்கள் போன்றவற்றுக்கும் இந்த வாசிப்புப் பழக்கம் உதவும். ஆங்கிலம் இரண்டாம் தாள் எளிது என்ற அலட்சிய மனப்பான்மை பெரும்பாலான மாணவர்களுக்கு இருக்கிறது. இந்த வகையில் படித்தால் போதுமென, அவற்றை முறையாக எழுதிப் பார்ப்பதில்லை. வாரம் முழுக்கவும் படித்த பகுதிகளை வாரத்தின் இறுதியிலேனும் ஒரு முறை எழுதிப்பார்ப்பது நல்லது.

தாராள நேரத்தை வீணாக்க வேண்டாம்

ஆங்கிலம் இரண்டாம் தாள் எழுத்துத்தேர்வு 80 மதிப்பெண்களுக்கானது. இதற்கான தேர்வு நேரம் 180 நிமிடங்கள். பெரும்பாலான மாணவர்கள் இதில் பாதிக்கும் குறைவான நேரத்தில் தேர்வை முடித்துவிட்டு அமர்ந்திருப்பார்கள். இது தவறு. திருப்புதலுக்கான 15 நிமிடம் தவிர, ஏனைய நேரம் முழுக்க எழுதும் வகையில் தேர்வுக்குத் தயாரானால் மட்டுமே உச்ச மதிப்பெண்களைப் பெற முடியும். எளிமையான வாக்கியக் கட்டமைப்பில் கருத்துச் செறிவான குறிப்புகளை வரிசைப்படுத்தி, தெளிவான எழுத்தில் அடித்தல் திருத்தல், எழுத்து, இலக்கணப் பிழைகள் இல்லாது எழுதிப் பழக வேண்டும். தேவையற்ற வண்ணங்கள், படங்கள் வரைவது மொழிப்பாடத்துக்கு உகந்ததல்ல.

முக்கிய கவனக் குறிப்புகள்

Supplementary Reader பகுதிக்குச் (கேள்வி எண்.1-12) சிறப்பாகப் பதிலளிக்கத் துணைப்பாடப் பகுதியின் கதைகளை முறையாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு ஒவ்வொரு கதைக்குமான சுருக்கம், கதை மாந்தர் பெயர்கள், காலவரிசை ஆகியவற்றைத் தனியாக எழுதி வைத்துத் திருப்புதல் மேற்கொள்ள வேண்டும். Sentence Rearranging பகுதியில் தெரிந்த விடைகளை முதலில் எழுதிவிட்டு, அதன் பின்னர் ஐயமுள்ளவற்றை எழுதலாம். Choose the Correct Answer பகுதியில், விடையைச் சரியாக ஊகித்துவிட்டுப் பின்னர் அவற்றைக் கொடுத்திருக்கும் விடைகளில் அடையாளம் காண்பது குழப்பத்தைத் தவிர்க்கும்.

Learning Competency-Study skills பகுதியில் (கேள்வி எண்.13-22) Arranging authors in the library card catalogue வினாவில் Alphabetic order பிரகாரம் விடையளிப்பதில் கவனம் வேண்டும்.

Occupational Competency- Job Skills பகுதியில் Summary Writing வினாவுக்கு (கே.எண்.23) Rough Draft, Fair Draft, Title என ஒவ்வொரு பகுதிக்கும் தனி மதிப்பெண்கள் உண்டென்பதால், உள்ளடக்கத்தில் செறிவு குறைந்தாலும் தவறாது மேற்கண்டவற்றைக் குறிப்பிட்டு எழுத வேண்டும். கேள்வி எண் 24 Advertisement பகுதியில் ‘Punctuation marks’ சரியாகக் குறிப்பிடுவதும் அவசியம். Biodata பற்றி வெளிப்படையாகக் கேட்கவில்லை என்றாலும், அதைக் குறிப்பிட்டு எழுதுவது அவசியம். முழு மதிப்பெண் பெற உதவும் எளிதான இப்பகுதியை மாணவர்கள் தவறவிடக் கூடாது.

Strategic Competency-Life Skills பகுதியில் உரிய (வினா எண்.25) Non-lexical Fillers பட்டியலைத் தயார் செய்து வைத்துக்கொண்டு பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. அடுத்ததாக Road Direction (வினா எண்.26) பகுதியில் 3 குறிப்புகள் எழுதுமாறு கேட்டிருப்பார்கள். ஆனால், அவசியமான கூடுதல் குறிப்புகளை எழுதுவது முழு மதிப்பெண் தரும். மேலும் இப்பகுதியில் Direction குறிப்பதில் வழக்கமாக மாணவர்கள் தவறிழைப்பதும் மதிப்பெண் இழப்பதும் தொடர்கிறது. எனவே பயிற்சி மேற்கொள்ளும்போது அதற்குக் கூடுதல் கவனம் தர வேண்டும்.

Creative Competency பகுதியில் (கேள்வி எண்.27-36) Proverb-Meanings மற்றும் Product-Slogans தொடர்பாக சரியான விடைகளைப் பொருத்துவதில், தெரிந்த விடைகளில் தொடங்கி நிரப்புதல் நல்லது. ஆங்கிலத்தாள் வாசிப்பும் பொது அறிவும் இந்த வினாக்களுக்கு நம்பிக்கையுடன் விடையளிக்க உதவும்.

Extensive Reading பகுதியின் (கேள்வி எண்.37-39) பொதுக் கட்டுரைகளுக்குத் தயாராக, My Ambition, AIDS Awareness, Rain water Harvesting, Computers, Pollution, Role of Women in Modern India, Science- A boon or bane உள்ளிட்ட தலைப்புகளில் கவனம் செலுத்தலாம். இவற்றை அடிப்படைக் குறிப்புகள், துணைத் தலைப்புகள், மேற்கோள்கள் ஆகியவற்றுடன் வரையறுத்த பத்திகளில் எழுதி முடிக்க வேண்டும். வேண்டுமென்றே அதிகப் பக்கங்களுக்கு நீட்டி முழக்கி எழுதுவது, தொடர்பற்ற கருத்துகளைத் திணிப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

மேற்கண்ட பகுதிகள் மற்றும் இதர வினாக்களுக்குப் பயிற்சி பெற புத்தகத்தின் பாடப்பயிற்சி பகுதி மட்டுமன்றி, முந்தைய ஆண்டு வினாக்களை அடக்கிய வினா வங்கியை அடிப்படையாகக் கொண்டும் திருப்புதல் மேற்கொள்ள வேண்டும்.

(பாடக்குறிப்புகளை வழங்கியவர்,
கோபிச்செட்டிப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
முதுகலை ஆங்கில ஆசிரியர் கே. ரவிக்குமார்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x