Last Updated : 27 Sep, 2016 11:07 AM

 

Published : 27 Sep 2016 11:07 AM
Last Updated : 27 Sep 2016 11:07 AM

தேர்வுக்குத் தயாரா? - தமிழிலும் சதம் அடிக்கலாம்

பொது தேர்வுக்குத் தயாராகும் பிளஸ் டூ மாணவர்களே, தமிழ்ப் பாடத்துக்குத் தயாராகலாமா? ஏனைய பாடங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் எளிமையானது என்ற எண்ணம் மாணவர்களிடம் பரவலாக உள்ளது. இதனால் தமிழ்ப் பாடத்தைப் படிப்பதிலும், அதற்குப் போதிய நேரம் ஒதுக்குவதிலும் பல மாணவர்கள் அலட்சியம் காட்டுகிறார்கள். பிளஸ் டூவில் சிறப்பான மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த அலட்சியத்தைத் தள்ளி வைக்க வேண்டும். அதிலும் முதல் தேர்வே தமிழ்தான் என்பதால், அப்பாடத்தைச் சிறப்பாக எழுதுவது நல்ல தொடக்கமாக அமையும்.

ஓய்வு நேரத்தில் உற்சாகமாக…

தமிழ்ப் பாடத்தை மிகவும் எளிதாகக் கருதுபவர்கள், இதர பாடங்களைப் படிக்கும்போது இடையில் ஓய்வு நேரத்தைத் தமிழுக்கு ஒதுக்கலாம். இதனால் நேரம் மிச்சமாவதுடன், தமிழிலும் சிறப்பான மதிப்பெண்களைப் பெறலாம். மேலும் தமிழின் இனிமையும் எளிமையும் உற்சாகத்தைத் தந்து, மற்ற பாடங்களைப் படிக்க அடித்தளம் அமைத்துத் தரும். சோர்வடையும்போது டிவி பார்ப்பதற்குப் பதிலாகத் தமிழ்ப் பாடத்தை படிக்கலாம். இந்த உத்தி திருப்புதல் நேரத்தில் பெரிதும் உதவும். செல்போன் அல்லது ஏனைய குரல் பதிவுக் கருவிகளைக் கொண்டு படிப்பதைப் பதிவுசெய்து, பின்னர் ஓய்வு மற்றும் பயண நேரத்தில் திரும்பத் திரும்பக் கேட்பதன் மூலம், நேரம் மேலும் மிச்சமாகும்.

ஒட்டுமொத்தத் தேர்வுக்கும் உதவும்

பொதுவாகத் தமிழைப் படிக்கும்போது வெளிப்படுத்தும் உற்சாகத்தைத் தேர்வு எழுதும்போது மாணவர்கள் தொலைத்துவிடுகிறார்கள். ஏனென்றால், மற்ற பாடங்களை எழுதிப் பார்ப்பது போலத் தமிழ்ப் பாடத்தில் படித்ததை எழுதிப் பார்க்க நேரம் ஒதுக்குவதில்லை என்பதுதான்.

சொல்லப்போனால் தமிழ் மொழி பாடத்தைச் சிறப்பாகப் படிக்க எடுக்கப்படும் முயற்சிகள் எழுத்துப் பயிற்சி, நேர மேலாண்மை, பிழைகளைத் தவிர்த்தல், தேர்வுத்தாள் ஒழுங்கு ஆகிய கூடுதல் திறன்களை உங்களுக்கு வழங்கும். அவசியமானவை,

# படித்ததைப் போதிய அளவுக்கு எழுதிப் பார்ப்பது

# சரியான விடையுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பது

# அடுத்த தேர்வுகளில் முந்தைய தவறுகளைச் சரி செய்துகொள்ள வேண்டும்.

இதன் மூலம் ஒற்றுப் பிழை, எழுத்து - வாக்கியப் பிழைகள் படிப்படியாகத் தவிர்க்கப்படும்.

தேவை கவனம்

புரிந்து படிப்பதோடு, விடையளிக்கும்போது பாடத்தில் உள்ள மேற்கோள்களையே எழுதிப் பழகுவது தமிழிலும் முழு மதிப்பெண் பெற உதவும். அந்த மேற்கோள்களை வேறு வண்ணத்தில் எழுதுவதோ, அடிக்கோடிடுவதோ சிறப்பு. அதேநேரம் தேர்வெழுத நீல மற்றும் கறுப்பு மையை மட்டுமே பயன்படுத்த வேண்டும், அடிக்கோடிடும்போது அடுத்த பக்கத்தில் அவை தெரியாத வகையில் பார்த்துக்கொள்வதும் அவசியம்.

பாடல் வரிகளை அடி பிறழாமல் எழுதுவது போலவே உரைநடைப் பகுதிக்கு விடையளிக்கும்போதும், பாடத்தில் உள்ளவாறே முக்கியக் குறிப்புகளை எழுத வேண்டும். வினாக்கள், மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு ஒன்றின் கீழ் ஒன்றாகக் குறிப்புகளில் விடையளிப்பதையும், பத்தி பிரித்து விடையளிப்பதையும் இப்போதிருந்தே பழகுங்கள். பாடம் கதைப் பகுதியானாலும் கருத்துகள் இன்றி வெறுமனே `கதை விடுதல்’ கூடாது. தமிழ்த் தாளைப் பொறுத்தவரை வினாத்தாள் வரிசையிலேயே விடையளிப்பது நல்லது.

(கட்டுரைக்கான முக்கியக் குறிப்புகளை வழங்கியவர்: முதுகலைத் தமிழாசிரியர் ச.தாஜுதீன், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி, கரூர் மாவட்டம்)

முக்கிய கவனக் குறிப்புகள்

எவ்வளவுதான் படித்திருந்தாலும் உச்ச மதிப்பெண் பெறும் மாணவர்கள் கவனம் பிசகுவது, மெல்லக் கற்கும் மாணவர்கள் அறியாமையால் வெற்றி வாய்ப்பை இழப்பது, சராசரி மாணவர்களின் கணிசமான மதிப்பெண்ணை இழப்பது ஆகியவை தேர்வுதோறும் தொடரவே செய்கின்றன. கீழ்க்கண்ட குறிப்புகளைப் படிக்கும்போதும், திருப்புதல் தேர்வுகளையும் கவனத்தில் கொண்டால் சிறு மதிப்பெண் இழப்பையும் தவிர்க்கலாம்.

4 மதிப்பெண்களுக்கு உரிய பகுதி 2-ல் (வினா எண் 7-11), பதில் அளிக்க வேண்டிய 3 வினாக்களில் 2 வினாக்கள் தொடர்நிலைச் செய்யுளிலிருந்து கேட்கப்படுகின்றன. இதே போலப் பகுதி 3-ல் (வினா எண் 12-16) சிற்றிலக்கியங்கள் மற்றும் மறுமலர்ச்சிப் பாடல்கள் பகுதிகளிலிருந்து தலா 2 பெருவினாக்கள் கேட்கப்படுகின்றன. திருப்புதலின்போது இந்த 2 பகுதிகளுக்கான பரிந்துரைகளை மனதில் கொண்டு படிக்க வேண்டும்.

8 மதிப்பெண்களுக்கு உரிய பகுதி 4-ல் (வினா எண் 17-19), திருக்குறளின் 4 நெடுவினாக்களில் ஒரு வினா நிச்சயமாகக் கேட்கப்படுகிறது. அதை எழுதும்போது 10 குறள்களுக்குரிய செய்திகளையும் எழுத வேண்டும். நெடுவினா என்பதால் உரிய செய்யுள் வரிகளையும் மேற்கோள் காட்டுவது சிறப்பு. எளிதாக மதிப்பெண் பெறக்கூடிய பகுதி இது.

பகுதி 5, பாடலடி வினாக்கள் பகுதியில் (வினா எண் 20-21) வினாப் பாடல் வரியை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வாசித்துத் தடுமாற்றமின்றி விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்பகுதியில் முழு மதிப்பெண்கள் பெறத் தொகை நூல்கள் மற்றும் தொடர்நிலைச் செய்யுள் பகுதியின் பாடல் அடிகளை நன்கு அறிந்துகொண்டால் போதுமானது.

பகுதி 7-ல் இடம்பெறும் இலக்கணப் பகுதி வினாக்களில் உறுப்பிலக்கணம், புணர்ச்சி விதி ஆகியவற்றில் சொல்லைப் பிரிப்பது தொடங்கி, ஒவ்வொரு படிநிலைக்கும் தனி மதிப்பெண் உண்டு என்பதை நினைவில் வைத்துக்கொள்வது முக்கியம்.

‘சான்று தந்து விளக்குக’ என்ற திணை, துறையை விளக்கும் பகுதியில் (வினா எண் 27), புறநானூற்றில் இடம்பெறும் பொதுவியல் திணை, பொருண்மொழிக் காஞ்சித் துறை ஆகியவற்றைக் கவனமாகப் படித்தாலே முழுமையான மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம்.

‘அணி’ பகுதிக்கு (வினா எண்-28) செய்யுள் பகுதியில் எங்கிருந்து வேண்டுமானாலும் வினா கேட்கப்படலாம் என்றாலும், திருக்குறள் பகுதியில் உள்ள 3 அணிகளில் பயிற்சி பெற்றாலே முழு மதிப்பெண் பெறலாம்.

‘பொருத்துக’ பகுதியில் (வினா எண் 29-32) வினா எண்ணைச் சரியாகக் குறிப்பிடுவது, வினாவை எழுதி விடையளிப்பது, விடையளித்த பிறகு சரிபார்ப்பது ஆகியவை அவசியம்.

‘உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுதல்’ பகுதிக்கு (வினா எண் 33-48), செய்யுள் பகுதியின் பயிற்சிப் பகுதி மட்டுமல்லாது ‘உள்ளிருந்தும்’ கேள்விகள் கேட்கப்படுவதால், நூல் குறிப்பு மற்றும் ஆசிரியர் குறிப்புப் பகுதிகளையும் படிப்பது நல்லது.

ச.தாஜுதீன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x