Last Updated : 20 Sep, 2016 11:18 AM

 

Published : 20 Sep 2016 11:18 AM
Last Updated : 20 Sep 2016 11:18 AM

தேர்வுக்குத் தயாரா? - உற்சாகமாகப் படிக்கலாம் வாங்க!

காலாண்டுத் தேர்வினை மாணவர்கள் மும்முரமாக எதிர்கொள்ளும் நேரம் இது. பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்கள் அடைவினை இந்தத் தேர்வு முடிவுகளில் ஓரளவுக்கு உரசி பார்க்கலாம். அவை தரும் படிப்பினைகள் அடிப்படையில், பொதுத் தேர்வுகளுக்கான வியூகங்களை, ஆசிரியர், பெற்றோர் உதவியுடன் தீர்மானித்துக்கொள்ளலாம். இனி வாராவாரம் அரசு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, பாடவாரியாக ஆசிரிய வல்லுநர்கள் வழிகாட்ட உள்ளார்கள்.

உச்ச மதிப்பெண் பெறுவதை இலக்காகக் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமல்லாது, சராசரி மற்றும் மெல்ல கற்போருக்குமான பல்வேறு உதவிக்குறிப்புகள் இவற்றில் அடங்கும். பாட வாரியாக அவற்றை அலசும் முன்னர் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பொதுவான குறிப்புகளை இப்போது பார்ப்போம்.

தொடக்கம் இனிதாகட்டும்

நல்ல தொடக்கமே பாதி வெற்றி என்பார்கள். மாறாக தேர்வு நெருக்கடியில் படிப்பது பதற்றத்தை அதிகமாக்கும். திருப்புதலுக்கு மட்டுமே உகந்த அந்த சமயத்தில் புதிதாக படிப்பது உழைப்பை விரயமாக்கும். எனவே இப்போதிருந்தே தேர்வுக்கான தயாரிப்பைத் தொடங்குவோம். காலாண்டுத் தேர்வு முடிவுகளைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள்.

விடைத்தாளில் நீங்கள் செய்ததாக உணரும் தவறுகளைத் தனி குறிப்பேட்டில் பட்டியலிடவும். அவற்றின் கீழேயே அந்தத் தவறுகளை சரி செய்ய மேற்கொள்ள வேண்டிய தீர்வுகளை நீங்கள் அறிந்த வகையில் எழுதவும். பின்னர் வகுப்பில் நன்றாகப் படிக்கும் சக மாணவர்கள், மூத்த மாணவர்கள், ஆசிரியர்கள் உதவியோடு அந்தத் தீர்வுகளை மேலும் எளிமையாக்குங்கள்.

உதாரணத்திற்கு அடித்தல் திருத்தல் அதிகம், படங்களை இன்னமும் சிறப்பாக வரைந்திருக்கலாம், நேரமின்மை தகராறு உள்ளிட்ட பொதுவான ஐயங்கள் ஆனாலும் சரி, பாடங்களுக்கு ஏற்ப சிரமங்கள் ஆனாலும் சரி அவற்றையும் பட்டியலிட்டுக் கொள்ளவும். பின்னர் அவற்றை வகுப்புத் தேர்வு மற்றும் மாதிரித் தேர்வுகளில் சரி செய்ய முயற்சிக்கவும். படிப்படியான இந்த மெருகேற்றல் ஆண்டு இறுதியில் வரவேற்கத்தக்க மாற்றங்களைத் தரும்.

வகுப்பறைச் செயல்பாடுகள் வழி செய்யட்டும்

பொதுத் தேர்வுக்கு தயாராவது என்பது அன்றாடம் வகுப்பறை செயல்பாடுகளில் இருந்தே தொடங்குகிறது. தினசரி ஆசிரியர் நடத்தவிருக்கும் பாடங்களை முன் தினமே ஒருமுறை வாசித்துவிட்டு வருவதும், புரியாத வார்த்தைகள், கருத்துகளைக் குறித்து வைத்திருப்பதும் பாடத்தை ஊன்றி கவனிக்கச் செய்யும். எழும் ஐயங்களை ஆசிரியரிடம் அப்போதே போக்கிக்கொள்ளவும் உதவும்.

முடிந்தவரை அன்றைய தினமே அல்லது வார இறுதி விடுமுறைக்குள்ளாகவேணும் அதுவரை நடத்தப்பட்ட பாடங்களைப் படித்துவிடுவது நல்லது. கூடவே படித்ததை உரசி பார்க்க, வகுப்புகளின் அவ்வப்போதைய சிறு தேர்வுகளைப் பயிற்சிக் களமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். சிறு தேர்வுகள்தானே என்று அலட்சியமாக நினைக்காமல், இடரும் தவறுகளை அடுத்த தேர்வில் சரி செய்துகொள்வதே வளர்ச்சிக்கு வழி.

திருப்புதல் திருப்பம் தரும்

படிப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல தொடர்ச்சியான திருப்புதலும் அவசியம். புதிதாகப் பாடங்களை படிக்க நேரம் ஒதுக்குவது போலவே, அதுவரையில் படித்தவற்றை திருப்பிப் பார்க்கவும் அவ்வப்போது நேரம் ஒதுக்க வேண்டும். இதில் கடினமாக உணரும் பாடங்களுக்கு அதிகப்படியான நேரமும், சுலபமாக உணரும் பாடப் பகுதிகளுக்குக் குறைவான நேரமும் ஒதுக்கலாம். திருப்புதலை வெறும் மனன உத்தியாக மட்டுமல்லாது, ஒவ்வொரு முறையும் எழுதிப் பார்ப்பதே சிறப்பு.

திடமாய் திட்டமிடுவோம்

தினசரி வகுப்புகள் மற்றும் தேர்வு நடைமுறைகள் எவ்வாறு உரிய திட்டமிடல்களைப் பின்பற்றுகின்றனவோ அதேபோல, நமது அன்றாட வீட்டுப் பாடம், படிப்பு, திருப்புதல் உள்ளிட்டவற்றுக்கும் திட்டமிடல் அவசியம். வகுப்புப் பாடவேளைகளுக்கு `டைம் டேபிள்’ இருப்பது போலவே, வீட்டில் படிப்பதற்கும் ‘டைம் டேபிள்’ வகுத்துக்கொண்டு அவற்றைக் கூடுமானவரை சரியாகப் பின்பற்ற வேண்டும். தொடக்கத்தில் இதில் தடுமாற்றங்கள் வந்தாலும், நாளடைவில் அதுவே உற்சாகப் பழக்கமாக ஒட்டிக்கொள்ளும்.

பொதுத்தேர்வு நெருங்குவதற்கு ஏற்ப இந்த டைம் டேபிளில் மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். அதேபோல முந்தைய வருட வினாத்தாள்களைச் சேகரித்து அவற்றின் முக்கிய வினாக்களுக்குச் சிறப்பு கவனமளித்தல், கல்வித்துறை வழிகாட்டுதலின்படியான பாடவாரி ‘புளூ பிரிண்டை’ சரியாகப் பின்பற்றுதல் போன்றவையும் இந்தத் திட்டமிடுதலில் அடங்கும்.

நேர மேலாண்மை மிக நன்று

தேர்வறை நேர மேலாண்மைக்குப் பழக மாதிரித் தேர்வுகள் கைகொடுக்கும். வகுப்புத் தேர்வுகள் மற்றும் வீட்டில் எழுதிப் பார்க்கும் தேர்வுகளிலும், நேரத்தைத் திட்டவட்டமாகக் கொண்டு பழகுவது பின்னர் மதிப்பெண் சரிவைத் தடுக்கும். சரியான கேள்வியைத் தேர்ந்தெடுப்பது, அதைப் பிழையின்றிச் சீராக உரிய நேரத்தில் எழுதுவது, திருப்பிப் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்குவது ஆகியவற்றுக்கு இப்போதிருந்தே பயிற்சி பெறுவது அவசியம்.

எந்த இடத்தில் இடர்பாடு எழுகிறதோ அதற்கு மட்டும் தனியாக கவனம் ஒதுக்கிப் பயிற்சி பெற வேண்டும். உதாரணத்துக்கு படம் வரையும்போதும், விரிவான விடையளிக்கும்போதும், நன்றாகப் படித்த வினாவிற்கு விடையளிக்கும்போதும் சிலர் தங்களை மறந்து அதில், மூழ்கி நேரத்தை வீணடித்துவிடுவார்கள். இதுபோன்ற சிறு பிசகுகளையும் மனதில் குறித்துக்கொண்டு அடுத்த முறை தவிர்க்க முயன்றாலே, நேர மேலாண்மை கைவரும்.

சுவர் பத்திரம்

தீவிரமாகப் படிக்கிறேன், மெனக்கெடுகிறேன் என்று சிலர் உடல் நலனைக் கெடுத்துக்கொண்டு, தேர்வு சமயத்தில் கன்னத்தில் கை வைத்திருப்பார்கள். வேறு சிலரோ உடல் வலுவிற்கு, ஞாபகத்திறனுக்கு என போகிற போக்கில் பிறர் பரிந்துரைப்பதை எல்லாம் சோதனை செய்து பார்ப்பது வினையாக முடியும். வீட்டில் சமைத்த கீரை, காய்கறிகள் உள்ளடக்கிய சத்தான சரிவிகித உணவுடன், தேவையான ஓய்வு, உறக்கம் ஆகியவையே போதுமானது.

அதே போல உடல்நலனில் ஏதேனும் சிரமங்களை உணர்ந்தால் கல்வியாண்டின் தொடக்கத்திலேயேத் தேவையான மருத்துவப் பரிந்துரைகளைப் பின்பற்றி சரி செய்துகொள்ள வேண்டும்.

குடும்பத்தினர் அரவணைப்பு

பொதுத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அமைதியான சூழல், தேவையான சிறு உதவிகள், நெருக்கடி தராத அனுசரணை, தொடர் கண்காணிப்பு உள்ளிட்டவை இதில் அடங்கும். தொலைக்காட்சி தொந்தரவு, அடிக்கடி எண்ணெய்ப் பலகாரங்கள், தேர்வைச் சுட்டிக்காட்டி எப்போதும் மன அழுத்தத்துக்கு ஆளாக்குதல் போன்றவற்றைக் கட்டாயம் தவிர்த்தாக வேண்டும்.

(பிளஸ் டூ மாணவர்களுக்கு தமிழ் முதல் தாள் தொடர்பாக ஆசிரிய வல்லுநர் வழங்கும் வழிகாட்டுதல் குறிப்புகள் அடுத்த வாரம்)

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x