Published : 31 Aug 2016 11:03 AM
Last Updated : 31 Aug 2016 11:03 AM

டிஎன்பிஎஸ்சி | குரூப்- IV | மாதிரி வினா- விடை 1: 10 லட்சம் பேர் போட்டிபோடும் தேர்வில் வெல்ல வேண்டுமா?

அரசுப் பணியில் சேர வேண்டும் என்பது இன்றைய இளைஞர்கள் பலரின் கனவு. சமூக அந்தஸ்து, பணி பாதுகாப்பு, நல்ல சம்பளம் போன்ற காரணங்கள் இளைஞர்களை அரசு வேலை நோக்கி ஈர்க்கின்றன. தமிழக அரசுப் பணிக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தற்போது காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் வரித்தண்டலர் ஆகிய பல்வேறு விதமான பதவிகளில் 5,451 காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் வரும் நவம்பர் 6-ல் நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளி யிட்டுள்ளது.

குரூப்-4 தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தட்டச்சர், சுருக்கெழுத்து தட் டச்சர் பணிகளுக்கு மட்டும் கூடுதலாக தொழில்நுட்பத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வில் பங்கேற்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும். அதிகபட்சமாக பொதுப் பிரிவினருக்கு 30, பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 32, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை (எஸ்எஸ்எல்சி) விட உயர் கல்வித்தகுதி (பிளஸ்-2, பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு) பெற்றிருந்தால் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் மற்றும் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்றாலும் கூட பெரும்பாலும் பிளஸ்-2 முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், எம்ஃபில் முடித்தவர்கள், பொறியியல் பட்டதாரிகள் என அனைத்து கல்வித் தகுதி உடையவர்களும் குரூப்-4 தேர் வுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

இவ்வாண்டு 12 லட்சம் பேர்

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் மேற் பட்டோர் விண்ணப்பித்தனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கு ஏறத்தாழ 12 லட்சம் பேர் விண்ணப் பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. காரணம், மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்பேரில் சம்பளம் உயர்த் தப்பட்டுள்ள நிலையில், விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் திருத்தியமைக்கப்பட இருக்கிறது. குரூப்-4 தேர்வுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே அரசு வேலை உறுதி. எனவேதான், குரூப்-4 தேர்வுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் முட்டி மோதுகிறார்கள்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஏராளமான மையங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கு செப்டம்பர் 8-ம் தேதிக்குள் டிஎன் பிஎஸ்சி இணையதளத்தின் (www.tnpsc.gov.in) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண். அப்ஜெக்டிவ் (கொள்குறி வகை) முறையில் 200 கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு மற்றும் திறனறிவு (ரீசனிங்) பகுதியில் 100 வினாக்களும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும் இருக்கும். ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்.

பொது அறிவு பகுதியானது அனை வருக்கும் பொதுவானது. பொது தமிழ், பொது ஆங்கிலம்-இரண்டில் ஏதாவது ஒன்றை விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்து கொள்ளலாம். பெரும்பாலான விண்ணப்ப தாரர்கள் குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பொது தமிழ் பாடத்தைத்தான் விருப்பமாக தேர்வுசெய்கிறார்கள்.

போட்டித் தேர்வின் உத்திகள்

12 லட்சம் பேர் விண்ணப்பிப்பதால் போட்டி கடுமையானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், இதில் 12 லட்சம் பேருமே உண்மையான போட்டியாளர்களாக இருக்க முடியாது. அரசு வேலை என்ற ஆசையில் நாமும் எழுதிப் பார்ப்போமே என விண்ணப்பிப்ப வர்களும், தேர்வுக்கான தயாரிப்பே இல்லாமல் எழுதுபவர்களும் இதில் பெரும்பான்மையினராக இருப்பர்.

டிஎன்பிஎஸ்சி நடத்தி வரும் போட்டித் தேர்வுகளுக்காக முழுமை யான தயாரிப்பில் உள்ளவர்கள் மத்தியில் தான் உண்மையான போட்டி இருக்கும். எனவே, எண்ணிக்கையை கண்டு அஞ்ச வேண்டியதில்லை. இன்று முதல், இருக்கும் காலத்தை துல்லியமாக திட்டமிட்டு பயன் படுத்தி தயாரிப்பில் ஈடுபட்டாலே வெற்றி வசப்படும். முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான தமிழ் அல்லது ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை முழுமையாக படிக்க வேண்டும். 10-ம் வகுப்பு தரத்தில்தான் தேர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், வெற்றிக்கான மதிப்பெண்ணை தரும் கேள்விகள் சில நேரங்களில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடங்களில் இருந்தும் கேட்கப்படலாம் என்பதால் அடுத்த கட்டமாக மேல்நிலைப் பள்ளி பாடங்களை படிப்பது கூடுதல் சிறப்பு.

நாட்டு நடப்புகள், கணிதம், திறனறிவு, அறிவியல் உள்ளிட்ட பாடங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை இனிவரும் காலங்களில் துறைசார் வல்லுநர்கள் விளக்குவார்கள். அவர் களின் வழிகாட்டுதலின்படி தயாரிப்பில் ஈடுபட்டாலே போதும். எனினும், தயாரிப் பின் தொடக்கம் என்பது மாநில கல்வி வாரியத்தின் பாடத்திட்டங்களை படிப் பதில் இருந்து தொடங்குவதே நலம்.

மாநில நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் தலங்கள், முக்கிய இடங்கள் என தமிழ்நாட்டை மையமாக வைத்து அதிக கேள்விகள் கேட்கப்படும் என்ப தால் தமிழகம் குறித்த பொது அறிவு புத்தகத்தை வாங்கி படிப்பது அவசியம். கணிதம் மற்றும் திறனறிவு பகுதியில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும் கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் வெளியாகும் கணித மாதிரி வினா - விடைகளை தொடர்ச்சியாக முயன்று பார்ப்பது நேர மேலாண்மைக்கு உதவும்.

வெற்றிக் கொடி கட்டலாம்

‘வெற்றிக்கொடி’ பகுதி மூலம் உயர் கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக எண்ணற்ற தகவல்களை மாணவ சமுதாயத்துக்கு வாரி வழங்கிக் கொண் டிருக்கும் ‘தி இந்து’ நாளிதழ், குரூப்-4 தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கும் மாணவ - மாணவிகளுக்கு உதவும் வகையில் கடந்த ஆண்டு மாதிரி வினா - விடைகளை வெளியிட்டது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நீண்ட நெடிய அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மாதிரி வினா - விடைகளுடன் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர். இதற்கு இளைஞர்களிடம் இருந்து ஏகோபித்த ஆதரவும் கிடைத்தது. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் குரூப்-4 தேர்வுக்கு தயாராகும் இளை ஞர்கள் பயன்பெறும் வகையில் மாதிரி வினா-விடைகளையும், அரிய ஆலோ சனைகளையும் வழங்க இருக்கிறோம்.

வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய 4 நாட்கள் இப்பகுதி வெளியாகும். அனுபவம் பெற்ற நிபுணர் கள், துறை வல்லுநர்கள் வினா-விடை களை தொகுத்து வழங்க உள்ளனர். வெறும் வினா - விடைகள் மட்டுமல்லாமல் தேர்வுக்கு தயாரா வோருக்குப் பெரிதும் பயன்தரக் கூடிய தயாரிப்பு உத்திகளும், விளக் கங்களும் வழங்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x