Last Updated : 27 Sep, 2016 11:38 AM

 

Published : 27 Sep 2016 11:38 AM
Last Updated : 27 Sep 2016 11:38 AM

சேதி தெரியுமா? - பொருளாதார வல்லுநர்கள் நியமனம்

ஆறு பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழுவில், டெல்லி பொருளாதாரக் கல்லூரி இயக்குநர் பாமி துவா, இந்தியப் புள்ளியியல் கழகப் பேராசிரியர் சேத்தன் கதே, அகமதாபாத் ஐ.ஐ.எம். பேராசிரியர் ரவீந்திர தோலாக்கியா ஆகிய மூன்று பொருளாதார வல்லுநர்களைச் செப்டம்பர் 23-ம் தேதி மத்திய அரசு நியமித்துள்ளது. ரிசர்வ் வங்கி சார்பாக ஆர்.பி.ஐ. கவர்னர் உர்ஜித் படேல், துணைக் கவர்னர் ஆர். காந்தி, செயல் இயக்குநர் மைகேல் பாத்ரா ஆகியோர் இருப்பார்கள்.

இந்தப் புதிய குழு வரும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி தமது நிதிக் கொள்கையை அறிவிக்கும். வங்கிகளின் கடன் விகிதங்களைத் தீர்மானிப்பவர்களாக இவர்கள் செயல்படுவார்கள். வங்கிகளின் கடன் விகிதங்களை இதுவரை தனியாக ரிசர்வ் வங்கியின் கவர்னர்தான் முடிவெடுத்துவந்தார். மத்திய அரசால் இவர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தாலும் மூன்று வல்லுநர்களின் செயல்பாடுகள் முழுமையும் சுதந்திரமானதாக இருக்கும். இவர்களின் பதவிக் காலம் நான்காண்டுகள். நுகர்வோர் பணவீக்கத்தை 2 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை கட்டுக்குள் வைத்திருப்பது இந்தக் குழுவின் இலக்கு.



ஆப்கனுக்கு இந்தியா, அமெரிக்கா உதவி

பயங்கரவாதச் செயல் பாடுகளுக்கு எதிராகப் போராடுவதற்கும் அமைதி, பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இணைந்து முத்தரப்பு அறிக்கை ஒன்றைச் செப்டம்பர் 21-ம் தேதி வெளியிட்டன. இதில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 71-வது கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலைகள் குறித்துப் பேசப்பட்டது. ஆப்கன் அரசுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் செய்ய வேண்டிய உதவிகளும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கான இந்தியத் தூதர் மன்பிரீத் வோரா, ஆப்கன் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஹெக்மத் கர்சாய், ஆப்கன் மற்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி ரிச்சர்ட் ஆல்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



காவிரி விவகாரத்தில் உத்தரவு

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 20-ம் தேதி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதற்கு நான்கு வாரக் கெடுவும் விதித்தது. அத்துடன் செப்டம்பர் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 27 வரை, தினமும் நொடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரை விடுவிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் தமிழகத்துக்குத் தண்ணீர் விடக் கூடாது என்று போராடிவருவதையடுத்து, சித்தராமையா செப்டம்பர் 22-ம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியைச் சந்தித்தார். கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கித் தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறக்க முடியாதென்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவு கர்நாடக விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்றும் சித்தராமையா கூறியுள்ளார்.



இந்தியாவின் 500-வது டெஸ்ட்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, 500-வது போட்டியில் காலடி எடுத்துவைத்தது. இந்த டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில், செப்டம்பர் 22-ம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராகத் தொடங்கியது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் 500-வது போட்டியைச் சிறப்பிக்கும் வகையில் முன்னாள் இந்திய டெஸ்ட் அணியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர். இந்திய அணி 1932-ல் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியது. 84 ஆண்டுகளை இந்தியக் கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டிகளில் நிறைவு செய்துள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளைத் தொடர்ந்து 500-வது போட்டியைத் தொடும் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.



ஆந்திரம், தெலங்கானா, மும்பையில் கன மழை

ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கித் தொடர்ந்து நான்கு நாட்கள் பெய்த கனமழையை அடுத்து அங்கே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதது. ஹைதராபாத், ரங்க ரெட்டி ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளித்தன. ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். நூற்றுக் கணக்கான கிராமங்கள் மழை வெள்ளம் சூழத் துண்டிக்கப்பட்டுள்ளன. கர்நூல் உட்படப் பல மாவட்டங்களில் சாலைகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

விஜயவாடாவில் உள்ள பிரகாசம் தடுப்பணையின் 70 மதகுகளும் திறந்துவிடப்பட்டன. ஆந்திரத்தைச் சேர்ந்த வருவாய்த் துறை அதிகாரிகள் மக்களுக்கு நிவாரணப் பணிகளைச் செய்யப் பணிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவர்களையும் மருந்துகளையும் கொண்டு செல்லவும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இதே போன்றுக் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மும்பையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் செப்டம்பர் 19 தொடங்கி, தொடர்ந்து கனமழை பொழிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x