Published : 09 Feb 2016 12:01 PM
Last Updated : 09 Feb 2016 12:01 PM

சேதி தெரியுமா? - தன்பாலின உறவாளர்கள் வழக்கு: உச்ச நீதிமன்றம் ஏற்பு

தன்பாலின உறவாளர்கள் குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மறு சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 2 அன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மேலும், இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 (இயற்கைக்கு மாறான பாலுறவு)-ன் படி, தன்பாலின உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் 2009-ல் தீர்ப்பளித்தது.

இதை உச்ச நீதிமன்றமும் 2013 டிசம்பர் 11-ம் தேதி உறுதி செய்தது. இதை எதிர்த்து மேல் முறையீட்டு மனு மற்றும் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் அரசியல் சாசன அடிப்படை உரிமை சம்பந்தப்பட்டுள்ளதால், அதுகுறித்து விரிவாக விசாரிப்பதற்கு வசதியாக 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.



மியான்மரில் மக்களாட்சி

மியான்மரில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி) கட்சியின் புதிய நாடாளுமன்ற கூட்டத் தொடர் பிப்ரவரி 2 அன்று தொடங்கியது. இதன் மூலம் ராணுவம் மட்டுமே ஆட்சி செய்யும் நடைமுறை மியான்மரில் முடிவுக்கு வந்தது. மியான்மரில் சுமார் 50 ஆண்டுகாலமாக ராணுவ ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜன நாயக லீக் 80 சதவீத இடங்களைக் கைப்பற்றியது. இதன் மூலம் அரசு அமைக்கும் தகுதியை அக்கட்சி பெற்றது. இந்நிலையில் அக்கட்சி பெரும்பான்மை பெற்ற நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியது.



ரயில்வே பல்கலைக்கழகம்

நாட்டின் முதல் ரயில் பல்கலைக் கழகம் குஜராத் மாநிலம் வடோதராவில் தொடங்கப்பட இருப்பதாக பிப்ரவரி 2 அன்று மத்திய அரசு தெரிவித்தது. ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கும் பரிந்துரையை ரயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவித்தது. இதையொட்டி வடோதராவில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்துக்கு இடம் கண்டறியும் பணியில் ரயில்வே துறைக்கு மாநில அரசு உதவிவருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் முதல் கட்டமாக எம்.பி.ஏ., எம்.டெக். ஆகிய பட்ட மேற்படிப்புகளை ரயில்வே பல்கலைக்கழகம் வழங்கும். பின்னர், ரயில்வே செயல்பாடுகளுக்கான பி.டெக் மற்றும் பட்டயப் படிப்பு தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.



ஜிகாவுக்குத் தடுப்பு மருந்து

உலகை அச்சுறுத்திவரும் ஜிகா வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்திருப்பதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் நிறுவனம் பிப்ரவரி 4 அன்று அறிவித்தது. மொத்தம் இரண்டு வகையான மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று செயலிழக்கச் செய்யும் தடுப்பு மருந்து. முன் மருத்துவ நிலையை எட்டி உள்ள இது விலங்குகளுக்கு பயன்படுத்தி பரிசோதிக்கப்பட்டுவருகிறது. ‘ஜிகாவக்’ என்ற இந்த மருந்துக்கு சர்வதேச காப்புரிமை கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த மருந்து உலகுக்கு அறிமுகம் செய்யப்படும் என்று அ ந் நிறுவனம் தெரிவித்துள்ளது.



ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ்

140 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா மண்ணில் அந்த அணிக்கு எதிரணி ஒன்று ஒயிட் வாஷ் கொடுத்தது. இந்தச் சாதனையை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி செய்தது. 3 இருபது ஓவர் போட்டிகளைக் கொண்ட கடைசி போட்டி சிட்னியில் ஜனவரி 31 அன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 198 ரன்களை கடைசி பந்தில் இந்திய அணி எட்டியபோது 0-3 என்ற கணக்கில் தொடரை வென்று இந்தச் சாதனையைப் படைத்தது.

தொகுப்பு: மிது கார்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x