Published : 25 Apr 2017 10:44 AM
Last Updated : 25 Apr 2017 10:44 AM

சேதி தெரியுமா? - அருணாச்சலப் பிரதேசத்துக்குச் சீனா புதுப் பெயர்

அருணாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு ‘தெற்கு திபெத்’ என்ற புதுப்பெயரை சீனா அறிவித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 14 அன்று சீனா அதிகாரபூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதைச் சீன ஊடகங்கள் உறுதிப்படுத்தின. தலாய்லாமாவை இந்தியா ஆதரிப்பது தொடர்பாக சீனா தனது அதிருப்தியை வெளிப்படுத்திவந்தது. சமீபத்தில் தலாய்லாமா அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா உரிமை கோரும் பிரச்சினைக்குரிய பகுதிகளுக்குச் சென்றார். இதைத் தொடர்ந்து சீனா, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறு இடங்களுக்குப் பெயர்களை அறிவித்தது. வூக்யாங்லிங், மிலா ரி, குயிடென்கார்போ ரி, மெயின்குயிக்கா, புமோ லா, நம்காபப் ரி ஆகிய 6 பெயர்களை சீனா வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இந்தப் பகுதிகள் சீனாவுக்குச் சொந்தமானவை என்பதை சீனா உணர்த்தியுள்ளது. 1962 சீனப் போரின்போது காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட அக்ஷய்சின் பகுதிக்கும் சீனப் பெயரை அறிவித்துள்ளது. இது ஒரு ராஜாங்க நடவடிக்கை எனச் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லூ காங் கூறியுள்ளார்.

புதிய தொழிற்சாலை ரோபாட்

சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகளுக்குப் பயன்படும் வகையிலான ரோபாட்களை டி.ஏ.எல். நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோபாட்டுக்கு ‘பிராபோ’ (‘Brabo’) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது முழுவதும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது. இரண்டு கிலோ முதல் பத்துக் கிலோ வரை எடையுள்ள பொருள்களைக் கையாளக்கூடிய ஆற்றல் பெற்றவை இவை. மேலும் நுட்பமாகவும் பணியாற்றக்கூடிய திறனும் இவற்றுக்கு உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 5 லட்சம் ரூபாயிலிருந்து ரூ.7 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 கோடி ரூபாய் வரை தயாரிப்புத் திட்டத்துக்கு டி.ஏ.எல். நிறுவனம் முதலீடுசெய்துள்ளது.

ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்

சண்டிகரில் நடைபெற்ற ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்றார். ஆசியப் பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி சண்டிகரில் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் பங்கஜ் அத்வானி - சௌரவ் கோதாரி ஆகியோர் விளையாடினர். இதில் 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் அத்வானி. பில்லியர்ட்ஸ் சேர்ந்த அத்வானி, ஆங்கிலப் பில்லியர்ட்ஸ் உலகப் போட்டியிலும், ஆசியப் போட்டியிலும், இந்தியப் போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்றவர். பில்லியர்ட்ஸ் மட்டுமல்லாது ஸ்னூக்கர் விளையாட்டு வீரர் என்ற அடையாளமும் இவருக்கு உண்டு.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x