Last Updated : 27 Sep, 2016 11:21 AM

 

Published : 27 Sep 2016 11:21 AM
Last Updated : 27 Sep 2016 11:21 AM

கேள்வி மூலை 02: கீழே விழும் நாணயம் உயிரைக் கொல்லுமா?

அதி உயரமான கோபுரங்களில் இருந்து கீழே தவறவிடப்படும் நாணயம் போன்ற சிறுபொருள், முற்றுத் திசைவேகம் காரணமாக ஒரு ஆளையே கொன்றுவிடும் என்றொரு மூடநம்பிக்கை இருக்கிறது. காற்றில் உராய்வு பெரிதாக இல்லாத நிலையில், இந்த முற்றுத் திசைவேகம் அதிகரித்து ஆளைக் கொன்றுவிடக்கூடும் என்பதே அந்த நம்பிக்கை. பாரீஸின் அடையாளமான ஈபிள் கோபுரம், ஒரு காலத்தில் உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்த நியூயார்க்கின் எம்பயர் எஸ்டேட் போன்ற கட்டிடங்களில் இருந்து தவற விடப்படும் நாணயம் இப்படிச் செய்யும் என்று நம்பப்படுகிறது.

இந்த மூடநம்பிக்கை கட்டிடங்களின் அதிக உயரம் காரணமாக உருவாகி இருக்கலாம். மேலே தவறவிடப்பட்ட நிலையில் இருந்து, கீழே வந்து சேர்வது வரையிலான நாணயத்தின் முற்றுத் திசைவேகம் (டெர்மினல் வெலாசிட்டி) கிட்டத்தட்ட நிலைத்ததாகவே இருக்கும். அது மணிக்கு 44 கி.மீ. தவறவிடப்பட்ட புள்ளியிலிருந்து 50 அடிக்குப் பிறகு நாணயம் முற்று திசைவேகத்தை அடைந்துவிடுகிறது. அதற்குப் பிறகு, திசைவேகத்தின் அளவில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது.

அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயற்பியலாளர் லூயி புளூம்ஃபீல்ட் உயரமான கட்டிடங்களில் இருந்து நாணயங்களைத் தவறவிட்டுச் சோதனை செய்து பார்த்துள்ளார். இதில் அதிகபட்சமாக 44 கி.மீ. வேகத்தில் கீழே விழும் நாணயங்கள் தோலைக் கிழிக்கக்கூடிய வீரியத்தை கூடக் கொண்டிருக்கவில்லை என்று அவர் கண்டறிந்திருக்கிறார். அதிகபட்சமாக, சிறிய வெட்டுக் காயத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாம்.

இந்த மூடநம்பிக்கை ஒருவேளை உண்மையாக இருந்தால், நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள் அவரை கோபப்படுத்தியிருக்க வேண்டும். மாறாக அவருடைய அறிவைத் தூண்டி, புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க அல்லவா வைத்துவிட்டது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x